Wednesday, July 5, 2017

மாவட்ட செய்திகள்

ரத்த உறவு முறையில் திருமணம் செய்ததால் மனநலம் பாதித்த 3 குழந்தைகளுடன் பரிதவிக்கும் தம்பதி




ரத்த உறவு முறையில் திருமணம் செய்ததால் மனநலம் பாதித்த 3 பிள்ளைகளுடன் பரிதவிக்கும் தம்பதியினர் தங்களின் பிள்ளைகளை பராமரிக்க அரசு உதவி கேட்டு கலெக்டரிடம் மனு அளித்தனர்.

ஜூலை 04, 2017, 04:00 AM


தேனி,

தேனி மாவட்டம், போடி அருகே உள்ள சில்லமரத்துப்பட்டியை சேர்ந்தவர் சுருளிச்சாமி (வயது 54). இவர் கட்டிட கட்டுமான கூலி வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி மகேஸ்வரி (50). இவர்களுக்கு 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். மகன்கள் மற்றும் மகள்களுக்கு மனநலம் பாதிக்கப்பட்டு உள்ளதால், அவர்களுக்கு உதவி கேட்டு தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு நேற்று வந்து இருந்தனர். கலெக்டர் வெங்கடாசலத்திடம் அந்த தம்பதியினர் கோரிக்கை மனு அளித்தனர்.

இதுகுறித்து மகேஸ்வரியிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:–

நானும், எனது கணவரும் ரத்த உறவு முறையில் திருமணம் செய்தவர்கள். எனது அத்தை மகனை தான் திருமணம் செய்துள்ளேன். எங்களுக்கு ராஜ்குமார் (20), சூர்யா (18) என்ற மகன்களும், ராதிகா (16) என்ற மகளும் உள்ளனர். இவர்கள் 3 பேரும் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள்.

முதல் மகனுக்கு 2 வயதிலும், 2–வது மகனுக்கு 6 வயதிலும், மகளுக்கு 1½ வயதிலும் இந்த பாதிப்பு ஏற்பட்டது. இவர்களை பராமரிக்க மிகுந்த சிரமம் அடைகிறோம். எங்கள் வீட்டில் தண்ணீர் குழாய் கிடையாது. நீண்ட தூரம் சென்று தான் தண்ணீர் பிடிக்க வேண்டும். தண்ணீர் பிடிக்க செல்லும் போது எனது பிள்ளைகள் வீட்டை விட்டு வெளியே ஓடி விடுகின்றனர். வீட்டுக்குள் வைத்து பூட்டினால், வீட்டுக்குள் எது கிடைத்தாலும் எடுத்து வாயில் போட்டுக் கொள்கின்றனர். இதனால், இவர்களை பக்கத்தில் இருந்தே பார்த்துக் கொள்ள வேண்டும். நாங்கள் வாழும் வீடும் பழைய வீடு. மண் தரையில் தான் உள்ளது. எங்களுக்கு அரசு இலவச வீடு கட்டிக் கொடுத்து, வீட்டுக்கு குடிநீர் குழாய் இணைப்பு கொடுத்தால் உதவியாக இருக்கும். சுய தொழில் செய்து பிழைத்துக் கொள்ள கடன் உதவி வழங்கினால் வீட்டில் இருந்து குழந்தைகளை பராமரித்துக் கொண்டே வாழ்வாதாரமும் தேடிக்கொள்ள முடியும். இதற்காக கலெக்டரிடம் மனு கொடுத்துள்ளோம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024