Thursday, July 27, 2017

பொது மக்கள் பணம் கட்டி ரயில் நிலையம் மீண்டும் திறப்பு

பதிவு செய்த நாள் 26 ஜூலை
2017
23:33

நாகர்கோவில் : பொது மக்கள் பணம் கட்டி மூடிய ரயில் நிலையத்தை மீண்டும் திறக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. இதற்காக 18.81 லட்சம் ரூபாய் ரயில்வேக்கு செலுத்தப்பட்டுள்ளது. நாகர்கோவில்- திருநெல்வேலி ரயில் பாதை போக்குவரத்து கடந்த 1981-ம் ஆண்டு ஏப்ரல் எட்டாம் தேதி தொடங்கியது. ஆரல்வாய்மொழி மற்றும் வள்ளியூர் ரயில் நிலையங்களுக்கு இடையே காவல்கிணறு ரயில் நிலையம் அமைந்திருந்தது. இது இந்த பகுதி மக்களுக்கு பயன் உள்ளதாக இருந்தாலும் வியாபார நோக்கில் வருமானம் கிடைக்காமல் நஷ்டத்தை சந்தித்து வந்தது.

இதனால் 1994-ல் இந்த நிலையம் நிரந்தரமாக மூடப்பட்டது. தற்போது இந்த ரயில் நிலையத்த்தின் சமீபம் மகேந்திரகிரி ஐ.எஸ்.ஆர்.ஓ. மற்றும் ஏராளமான தனியார் பொறியியல் கல்லுாரிகள் உள்ளது. எனவே இதனை மீண்டும் திறக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வந்தது. காவல்கிணறு ரயில் மீட்புக்குழு உருவாக்கப்பட்டு கடந்த 23 ஆண்டுகளாக அதிகாரிகளையும், அமைச்சர்களையும் சந்தித்து முறையிட்டனர். இதற்காக பல பேராட்டங்களும் நடைபெற்றது. இதை தொடர்ந்து ரயில் நிலையத்தை மீண்டும் திறக்க முன்வந்த ரயில்வே துறை, 18 லட்சத்து 81 ஆயிரத்து 250 ரூபாய் கட்ட வேண்டும் என்று உத்தரவிட்டது.

இதை தொடர்ந்து ஊர் பஞ்சாயத்து நிர்வாகம், ரயில் மீட்புக்குழு, நுகர்வோர் சங்கம் இணைந்து கூடங்குளம் அணுமின் நிலைய நிர்வாகத்தை அணுகி கோரிக்கை விடுத்தனர். கூடங்குளம் அணுமின்நிலையம் சார்பில் 10 லட்சம் ரூபாய் ரயில்வேக்கு வழங்கப்பட்டது. மீதமுள்ள 8 லட்சத்து 81 ஆயிரத்து 250 ரூபாயை ரயில்வேக்கு பொதுமக்கள் நன்கொடை மூலம் செலுத்தப்பட்டது.

இதை தொடர்ந்து ரயில் நிலையத்தை திறக்க ரயில்வேதுறை உத்தரவிட்டுள்ளது. தற்போது இங்கு அடிப்படை கட்டமைப்பு வசதிகள் மற்றும் நடைமேடை அமைப்பு போன்ற பணிகள் நடைபெற்று வருகிறது. மின் இணைப்பு பெற 4.25 ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. புதிய ரயில்வே கால அட்டவணை அமலுக்கு வரும் அக்டோபர் ஒன்றாம் தேதி முதல் இந்த ரயில் நிலையம் செயல்படும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. ரயில் நிலையம் மீண்டும் திறக்கப்படுவதால் காவல்கிணறு சுற்று வட்டார மக்கள் மகிழ்ச்சி அடைந்து்ளளனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 22.04.2024