Thursday, July 27, 2017

ராமேஸ்வரம் - சென்னை பகல் ரயில் : கலாம் கனவு நனவாகுமா

பதிவு செய்த நாள் 26 ஜூலை
2017
23:34


ராமநாதபுரம்: 'ராமேஸ்வரம்- சென்னைக்கு பகல் நேர ரயில் இயக்க வேண்டும்' என்ற கலாமின் கனவை ரயில்வே நிர்வாகம் நிறைவேற்ற வேண்டும்.
ராமேஸ்வரத்தில் இருந்து சென்னைக்கு தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறை வழியாக மாலை 5:00 மணிக்கும், அரியலுார், விருத்தாசலம் வழியாக இரவு 8:15க்கும் தினமும் ரயில்கள் இயக்கப்படுகின்றன. ஞாயிறு தோறும் ராமேஸ்வரம்- -புவனேஸ்வர் ரயில், புதன் தோறும் ராமேஸ்வரம்- வாரணாசி ரயில் சென்னை வழியாக செல்கிறது.

பாம்பன் கடலில் 2.3 கி.மீ., க்கு ரயில் துாக்கு பாலம் 1914ல் அமைக்கப்பட்டது. இப்பாலத்தின் நுாற்றாண்டு விழா 2014 ஜன.,28ல் நடந்தது. விழாவில், முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் தலைமை வகித்து நுாற்றாண்டு விழா கல்வெட்டை திறந்து வைத்தார்.

அவர் பேசுகையில், ''ஆர்ப்பரிக்கும் கடல். மேலே வானம். இரண்டிற்கும் நடுவே பாலத்தில் ரயில் செல்லும் போது தென்றல் காற்று இதமாக வீசும். அதில் தெய்வீக சங்கீத ஓசை கேட்கும். தொழில்நுட்ப பெருமை பெற்ற இப்பாலம் என் வாழ்வின் ஓர் அங்கமாகிவிட்டது. இவ்விழாவில், ரயில்வே நிர்வாகத்திற்கு ஒரு கோரிக்கை விடுக்கிறேன். ராமேஸ்வரத்தில் இருந்து சென்னைக்கு பகல் நேரத்தில் பாம்பன் விரைவு ரயில் ஒன்றை இயக்க வேண்டும். அந்த ரயிலில் மீன்களை பதப்படுத்தும் வசதியுடன் கூடிய ஒரு பெட்டியும் இணைக்க வேண்டும்,'' என்றார்.

ஆனால், அவரது கோரிக்கை நிறைவேறவில்லை. இது கலாமின் கோரிக்கை மட்டுமல்ல; வர்த்தகர், மீனவர்களின் கோரிக்கையும்தான்.
'இன்று நடக்கும் நினைவக திறப்பு விழாவில், பிரதமர் மோடி அதற்கான அறிவிப்பை வெளியிட வேண்டும்' என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.

No comments:

Post a Comment

NEWS TODAY 25.12.2024