Wednesday, July 26, 2017

'ஓபி' அதிகாரிகள் 381 பேர் மீது நடவடிக்கை பாய்ந்தது!!!


சரியாகவும், திறம்படவும் வேலை செய்யாத, 24 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் உட்பட, 381 மத்திய அரசு உயரதிகாரிகள் மீது, நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

கடந்த மூன்று ஆண்டுகளில், மத்திய அரசு பணிகளுக்கான மனிதவள மேம்பாட்டில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை, மத்திய அரசின் பணியாளர் நலத்துறை தாக்கல் செய்துள்ளது.இது குறித்து, மத்திய அரசின் பணியாளர் நலத்துறை உயரதிகாரிகள் கூறியதாவது:

சிறப்பாக செயல்பட்டால்

சரியாக வேலை செய்யாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்க, பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட்டு உள்ளார். அதன்படி, சிறப்பாக செயல்பட்டால் மட்டுமே, அரசு பணியில் தொடர முடியும் நிலை உருவாகி உள்ளது.

நாடு முழுவதும் பணியாற்றும், 2,953 ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்.,அதிகாரிகள் உட்பட, 11 ஆயிரத்து, 828 உயரதிகாரிகளின் செயல்பாடுகள் குறித்து, சமீபத்தில் ஆய்வு செய்யப்பட்டது. அதே போல், இவர்களுக்கு அடுத்த வரிசையில் பணியாற்றும், 19 ஆயிரத்து, 714 அதிகாரிகள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.

பணித் திறனை மேம்படுத்தும் நிலை

இதில், சரியாக வேலை செய்யாத, 24 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் உட்பட, 381 பொது சேவை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. பணிநீக்கம், கட்டாய ஓய்வு உள்ளிட்டநடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு உள்ளன.
இதன் மூலம், அரசு அதிகாரிகளுக்கு, சிறப்பாக செயல்படாவிட்டால் நடவடிக்கையை சந்திக்க நேரிடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது; அது, அவர்களுடைய பணித் திறனை மேம்படுத்தும் நிலையை உருவாக்கி உள்ளது.

சம்பள உயர்வு குறைப்பு

ஒரு ஐ.ஏ.எஸ்., அதிகாரி, இரண்டு ஐ.பி.எஸ்., அதிகாரிகள் உட்பட, 124 அதிகாரிகளுக்கு, பணி நிறைவு காலத்துக்கு முன்பாகவே ஓய்வு அளிக்கப்பட்டு உள்ளது.மேலும், 10 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் உட்பட, 21 அதிகாரிகள், தங்கள் பதவியை ராஜினாமா செய்ததாக எடுத்துக் கொள்ளப்பட்டு உள்ளது. இதை தவிர, எட்டு ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் உட்பட, 199 அதிகாரிகளுக்கு, சம்பள உயர்வு குறைக்கப்பட்டு உள்ளது.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்

No comments:

Post a Comment

NEWS TODAY 25.12.2024