Friday, July 28, 2017

பொறியியல் கல்லூரிகளில் தேர்வு முறையில் மாற்றங்கள்!

அண்ணா பல்கலைக்கழகம் பொறியியல் கல்லூரிகளில் புதிதாக சேரும் மாணவர்களுக்குப்   புதிய பாடத்திட்டம் அறிமுகம் செய்யப்பட்டதோடு, அரியர் என்ற முறையும் ஒழிக்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அரியர் முறை ஒழிக்கப்பட்டு, தேர்ச்சி பெறாத பாடங்களின் வகுப்பில் கலந்துகொண்டு தேர்வு எழுத வாய்ப்பு வழங்கப்படும்.

இதுகுறித்து அண்ணா பல்கலைக்கழகப் பாடத்திட்டத்துக்கான குழுவின் இயக்குநரும் பேராசிரியருமான கீதா, “சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள மூன்று கல்லூரிகளிலும், குரோம்பேட்டையில் உள்ள எம்.ஐ.டி. கல்லூரியிலும் பாடத்திட்டம் மாற்றப்பட்டு நடைமுறையில் இருந்து வருகிறது. மாணவர்கள் தாங்கள் தேர்ந்தெடுத்த துறை தவிர, வேறு துறைகளிலிருந்து இரண்டு விருப்பப்பாடங்களை தேர்வு செய்து படிக்க வேண்டும். இந்த முறை ஏற்கெனவே இந்த நான்கு கல்லூரிகளிலும் நடைமுறையில் உள்ளது. இந்த கல்வி ஆண்டில் தமிழகத்தில் உள்ள 518 பொறியியல் கல்லூரிகளிலும் புதிய பாடத்திட்டம் அமல்படுத்தப்படுகிறது.

அதன்படி, 2017-18 கல்வியாண்டு முதல் ‘அரியர்’ முறை ரத்து செய்யப்படுகிறது. படிப்பில் மந்தமாக இருக்கும் மாணவர்கள், ஒரு பருவத்தில் இரண்டு பாடங்களைக் கைவிட்டுவிட்டு தேர்வு எழுத முடியும். ஒரு மாணவர் அனைத்துப் பாடங்களிலும் தேர்வெழுதி ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட பாடங்களில் தோல்வியடைந்தால், தோல்வியடைந்த பாடங்களை உடனடியாக அடுத்த பருவத் தேர்வின்போது எழுத அனுமதிக்கப்பட மாட்டார்.

மாறாக, அவர் தோல்வியடைந்த பாடம் மீண்டும் எந்தப் பருவத் தேர்வில் வருகிறதோ, அப்போதுதான் அவர் எழுத முடியும். அவ்வாறு எழுதும்போது இன்டர்னல், எக்ஸ்டர்னல் இரு தேர்வுகளையும் எழுதுவது கட்டாயமாகும்.

இதனால் ஒரே நேரத்தில் அனைத்துப் பாட பகுதிகளையும் படிக்காமல், சிறிது இடைவெளிவிட்டு படிக்க முடியும்.

மேலும், மாணவர்கள் தேர்ச்சி பெறாத பாடத்தில் புரியாத பகுதி ஏதேனும் இருந்தால், அந்த வகுப்பு நடக்கும்போது அதில் கலந்து கொள்ளலாம். இதனால், மாணவர்கள் தொடர்ந்து பாடத்தோடு தொடர்பில் இருப்பார்கள். மேலும், எளிதில் தேர்ச்சி அடைய முடியும்.

இந்தாண்டு விருப்பப் பாடத் தேர்வு முறை அறிமுகம் செய்யப்படுகிறது. இதன் மூலம், மாணவர்கள் துணைப் பாடங்களில் (எலெக்டிவ் பாடம்) தாங்கள் விரும்பும் வேறு பாடத்தை எடுத்துப் படிக்க முடியும். ஒரு துணைப் பாடத்தை தங்கள் துறை சாராத, வேறு துறை பாடம் ஒன்றை எடுத்தும் மாணவர்கள் படிக்க வாய்ப்பு வழங்கப்படும்.

மாணவர்கள் ஆறு செமஸ்டர் வரை அனைத்து பாடத்திலும் தேர்ச்சி பெற்று ஒட்டுமொத்தமாக 7.5 கிரேடு பாயின்ட்களைப் பெற்றிருந்தால், எட்டாவது செமஸ்டர் பாடத்தை ஏழாவது செமஸ்டரிலேயே படிக்க வாய்ப்பு உண்டு. எட்டாவது செமஸ்டரில் களப்பணிகளை மட்டும் செய்தால் போதுமானது.

ஒரு பட்டப்படிப்பை முடிப்பதற்கான காலக்கெடு முடிந்த பிறகும் அடுத்த மூன்று ஆண்டுக்குள் தேர்வு எழுதி முடிக்க வேண்டும். ப்ளஸ் டூ முடித்தவர்களுக்காக வைக்கப்பட்டுள்ள 14 செமஸ்டர்கள் கொண்ட படிப்பை அதற்கு பிறகு மூன்று ஆண்டுக்குள் முடிக்க வேண்டும். பிற்சேர்க்கை திட்டத்தில் (Lateral Entry) 12 செமஸ்டர்கள் கொண்ட படிப்பில் சேருவோருக்கும் இது பொருந்தும்” எனத் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 25.12.2024