Sunday, July 30, 2017

மின்னணு குடும்ப அட்டை வழங்கும் பணி திடீர் நிறுத்தம்!!!

தமிழகத்தில் மின்னணு குடும்ப அட்டைகள்
வழங்கும் பணிகள் திடீரென நிறுத்தப்பட்டுள்ளன.

புழக்கத்தில் உள்ள மின்னணு அட்டைகளில் பிழைகளைத் திருத்தவும், புதிதாக வழங்கப்படவுள்ள அட்டைகள் சரியான முறையில் இருப்பதை உறுதி செய்யவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அரசுத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

தமிழகத்தில் 1.95 கோடிக்கும் அதிகமான குடும்ப அட்டைகள் உள்ளன. இந்த
அட்டைகள் அனைத்தும் மின்னணு குடும்ப அட்டைகளாக மாற்றப்பட்டு வருகின்றன. இதற்காக ஒவ்வொரு குடும்ப அட்டைதாரரின் ஆதார் விவரங்கள் சேகரிக்கப்பட்டன. இந்த ஆதார் விவரங்கள் அனைத்தையும் தமிழாக்கம் செய்தும், கூடுதல் விவரங்களை குடும்ப அட்டைதாரர்களிடம் இருந்து பெற்றும் மின்னணு குடும்ப அட்டைகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.
இத்திட்டத்தை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடங்கி வைத்தார். ஒவ்வொரு ரேஷன் கடையிலும் வாரத்துக்கு தலா 100 மின்னணு குடும்ப அட்டைகள் வீதம் வழங்கப்பட்டு வந்தன. இந்த அட்டைகளில் பிழைகள் அதிகளவு இருப்பதாக புகார்கள் வந்ததைத் தொடர்ந்து, மின்னணு குடும்ப அட்டை பெற்றவர்கள் அதில் திருத்தங்களைச் செய்து வருகிறார்கள்.

வீடுகளில் இணையதள இணைப்பு வைத்திருப்போர் அதன் மூலமாகவும், இணைப்பு இல்லாதோர் அரசு இணைய சேவை மையங்களுக்கும் சென்று திருத்தப் பணிகளை மேற்கொள்கிறார்கள்.

இந்நிலையில், மின்னணு குடும்ப அட்டைகள் பிழைகள் ஏதும் இல்லாமல் 100 சதவீதம் சரியான முறையில் வழங்குவதற்காக அந்த அட்டைகள் வழங்கும் பணி தாற்காலிமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து உணவுத் துறை அதிகாரிகள் கூறியதாவது: தமிழகத்தில் உள்ள 1.95 கோடி குடும்ப அட்டைதாரர்களில் 1.36 கோடி பேருக்கு மின்னணு குடும்ப அட்டைகள் வழங்கத் தயார் நிலையில் உள்ளன.

சுமார் 25 லட்சம் பேரிடம் இருந்து புகைப்படம் உள்ளிட்ட விஷயங்களைப் பெற வேண்டியுள்ளது. எனவே, முழுமை   யான விவரங்களைப் பெற்று அட்டைகள் அளிக்கப்படும் என்றனர்.

சென்னையில் தொய்வு: சென்னை நகரத்தைப் பொருத்தவரை சுமார் 8 லட்சத்துக்கும் மேற்பட்டோரிடம் உரிய விவரங்களை முழுமையாகப் பெற முடியாத நிலை உள்ளது. இதனால் மின்னணு குடும்ப அட்டைப் பணிகளில் மிகப் பெரிய தொய்வு ஏற்பட்டுள்ளதாக உணவுப் பொருள் வழங்கல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

மாற்றங்கள் மாறுவதில்லை: உணவுப் பொருள் வழங்கல் துறை அலுவலர்களின் மெத்தனத்தால் இணையதளம் வழி
யாக முகவரி மாற்றம், பெயர் மாற்றம் உள்ளிட்ட பணிகளைச் செய்த குடும்ப அட்டைதாரர்களின் விவரங்கள் மாற்றப்படவில்லை.
பழைய அட்டையிலேயே பொருள்கள் பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவித்திருந்த போதும் திருத்தங்களைச் செய்து தர உணவுப் பொருள் அலுவலர்கள் முன்வராத காரணத்தால் குடும்ப அட்டைதாரர்கள் பொருள்களை பெற முடியாத நிலையும் பல இடங்களில் உருவாகியுள்ளது.
அடுத்த மாதம் முதல்... பிழைகள் திருத்தம், புதிய அட்டைகளை திருத்தங்கள் ஏதுமில்லாமல் தயாரிப்பது போன்ற பணிகள் அனைத்தும் முடிக்கப்பட்டவுடன் அவை ஆகஸ்ட் மாதம் முதல் வழங்கப்படும் என உணவுத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

No comments:

Post a Comment

NEWS TODAY 24.11.2024