Sunday, July 30, 2017

கரோனரி ஸ்டென்ட்' சிகிச்சையில் புதிய புரட்சி!

பதிவு செய்த நாள் 29 ஜூலை
2017
23:51

நெஞ்சுவலி, மாரடைப்பு என்றால், இதய ரத்தக் குழாய் அடைப்பை நீக்கி, 'ஸ்டென்ட்' வைப்பது சர்வ சாதாரணமாகி விட்டது. 'அடைப்பை நீக்கி, ரத்த ஓட்டத்தை சரி செய்து விட வேண்டும். இல்லாவிட்டால் இறந்து விடுவாய்' என டாக்டர்கள் சொல்லி விடுகின்றனர். உடனே, 'ஆஞ்சியோ பிளாஸ்டி'க்கு தயாராகி விடுகின்றனர்.

ஆனால், எப்போது,

'ஆஞ்சியோ பிளாஸ்டி' செய்ய வேண்டும்?நெஞ்சு வலி வந்தவுடன், இ.சி.ஜி., 'டிரெட்மில் டெஸ்ட்' எனப்படும், டி.எம்.டி., எக்கோ எடுத்த பின், மருந்து கொடுத்து, ஆய்வு செய்து, பின், 'ஆஞ்சியோ பிளாஸ்டி' செய்ய வேண்டும்.
எப்போது உடனே, 'ஆஞ்சியோ பிளாஸ்டி' செய்ய வேண்டும்?
மார்பு வலியுடன் வருபவருக்கு, ஊசி மூலம் மருந்து கொடுத்து, ஐ.சி.சி.யு.,வில் சேர்த்து, 24 மணி நேரத்திற்கு பின், செய்ய வேண்டும்.


சில சமயம் நோயாளிகளுக்கு இதய துடிப்பு குறைந்தாலோ, ரத்த அழுத்தம் குறைந்தாலோ, உடனே ஆஞ்சியோ பிளாஸ்டி செய்ய வேண்டும்; இதனால், பலன் கிடைக்கும். இது தான் முறை. இது, பிரைமரி ஆஞ்சியோ பிளாஸ்டி எனப்படும்; இது உயிர் காக்கும் சிகிச்சை.
'ஆஞ்சியோ கிராம்' செய்யும்போது என்ன செய்ய வேண்டும்?

மார்பு வலி, மாரடைப்பு உள்ளவர்களுக்கு ஆஞ்சியோகிராம் செய்து, அடைப்பு இருந்தால், கரோனரி ரத்தக் குழாய் அடைப்புகளை கவனிக்க வேண்டும்.
* அடைப்பு எத்தனை சதவீதம் என்பதை ஆஞ்சியோ படத்தில் அறிய வேண்டும்
* ஒரு அடைப்பா, இரண்டா, மூன்றா, நான்கா என்பதை ஆய்வு செய்ய வேண்டும். எத்தனை ரத்தக் குழாயில் என்று அறிய வேண்டும்
* அதன் நீளம் எதுவரை உள்ளது என்பதை அறிய வேண்டும். மகாதமனி ஆரம்பத்தில் உள்ளதா என்பதை அறிய வேண்டும்.
இந்த அடைப்புகள், ஆஞ்சியோ பிளாஸ்டி, 'ஸ்டென்ட்' சிகிச்சைக்கு தகுதியானவையா என்பதை எப்படி அறிந்து கொள்வது?

ஆஞ்சியோ படத்தை நம் கண்களால் பார்க்கும் போது, குத்துமதிப்பாக தான் அறிய முடியும். இதில் தவறு ஏற்படலாம். எந்த அடைப்பால் நெஞ்சு வலி ஏற்படுகிறது என்று துல்லியமாக அறிய, எப்.எப்.ஆர்., என்ற, 'பிராக் ஷனல் புளோ ரிசர்வ்' பரிசோதனை செய்ய வேண்டும். இது, உலகம் முழுவதும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.

கரோனரி ரத்த அழுத்தமானது, அடைபட்ட ரத்தக் குழாய் பிரச்னையிலிருந்து வேறுபடும். சாதாரணமாக ரத்த அழுத்தம், கரோனரி ரத்தக் குழாய் முழுவதும் ஒரே அளவாக இருக்கும். அடைப்புக்கு முன்பு இருக்கும் அழுத்தம், அடைப்பு ஏற்பட்ட பின் குறைவாக இருக்கும். இந்த வேறுபாடு, ௦.8க்கு கீழ் அதாவது, 0.7, 0.6, 0.5 என இருந்தால், அடைப்பு அதிகமாக உள்ளது; இதனால் தான் வலி வருகிறது என்பதை அறியலாம்.

இதற்கு உடனே, 'ஸ்டென்ட்' சிகிச்சை செய்ய வேண்டும். இந்த பரிசோதனையின் மூலம் ஒரே ரத்த குழாயில் எத்தனை அடைப்பு, எந்தெந்த ரத்த குழாயில் அடைப்பு, அடைப்பின் அளவு என்ன, எத்தனை ஸ்டென்ட் வைக்கலாம், எவ்வளவு மருந்து, மாத்திரை கொடுக்கலாம் என, முடிவு செய்ய முடியும்.

'பை பாஸ்' செய்தவர்களுக்கு, இந்த பரிசோதனை செய்து, 'பை பாஸ் கிராப்ட்' அடைப்பை கண்டறியலாம்; ஸ்டென்ட் அடைப்பை கூட, இதன் மூலம் கண்டுபிடிக்கலாம்.

பை பாஸ் சிகிச்சை செய்தவர்கள் மற்றும் ஸ்டென்ட் சிகிச்சை செய்து, ஐந்து ஆண்டு முடிந்தவர்கள் இந்த பரிசோதனை செய்து கொள்ளலாம்.
கரோனரி ரத்த நாளத்தைப் படம் பிடித்துக் காட்டும், ஐ.வி.யு.எஸ்., - இன்ட்ராவாஸ்குலர் அல்ட்ரா சவுண்ட் ஒலிப்படம், ரத்த நாளத்தின் உட்சுவர், வெளிச்சுவர்களை முழுமையாக காட்டும். ரத்த நாள உட்சுவரிலுள்ள அடைப்பு, எந்த அளவு உள்ளது என்பதை காட்டும்.
உதாரணம் தேங்காயை உடைத்தால், எப்படி தேங்காய் தோல், பருப்பு என, தனியாகத் தெரியுமோ, அது போல உள்பகுதி தெரியும். ஒரு குழாய் மூலம், ஒலியின் ரத்த நாளத்தில் செலுத்தி படம் எடுத்து காட்டும் கருவியின் பெயர் தான், 'ஐவஸ்!'

இந்த ஐவசில் ரத்த நாளத்தின் முழு நீளத்தை பார்க்க முடியும். அதேநேரத்தில் ஒவ்வொரு விட்டமாகவும் பார்க்க முடியும். மேலும், எவ்வளவு அடைப்பு உள்ளது, அதில் கொழுப்பு, கால்ஷியம், நார் திசுக்கள் எவ்வளவு சூழ்ந்து இருக்கிறது என்பதை பார்க்கலாம்.

இந்த அடைப்பு தான், 'பிளேக் தாக்கம்' என்றழைக்கப்படுகிறது. இந்த அடைப்பு சில சமயம் ரத்த நாளத்தில் நீண்டு இருக்கும். சில பகுதியில், 20 சதவீத அடைப்பு இருக்கும். இதை சாதா ஆஞ்சியோகிராம் பரிசோதனையில் கண்டுபிடிக்க முடியாது.

ஸ்டென்டை நல்ல முறையில் வைப்பது எப்படி?

* ஸ்டென்ட் நன்றாக விரிவடைந்து, ரத்த நாளத்தின் உட்சுவரில் அதை நன்றாக அழுத்தி வைக்க வேண்டும்.

* ஸ்டென்ட்டில் ஆரம்பமும், கடைசி பகுதியும் நன்றாக விரிவடைந்து உட்கார வேண்டும்.

* அடைப்பு துவங்கும் பகுதியின் முன் நன்றாகவுள்ள பகுதியில் ஆரம்பித்து, அடைப்புக்கு இறுதி பகுதியிலுள்ள நல்ல பகுதி வரை ஸ்டென்டை கவர் செய்ய வேண்டும். அப்படி வைத்தால் தான் ஸ்டென்ட் உறுதியாக பல ஆண்டுகள் இருக்கும்.  சாதாரணமாக ஆஞ்சியோ செய்து ஸ்டென்ட் வைக்கும் போது ஏற்படும் குறைபாடுகள்:

* ஸ்டென்ட் சரியாக விரிவடையாமல் இருந்தால், திரும்பவும் அடைப்பு ஏற்படும்.

* அளவுக்கு அதிகமாக அழுத்தம் கொடுப்பதால், ரத்த நாள உட்சுவர் பிரிந்து, 'டிசெக் ஷன்' ஏற்படலாம்.

* ரத்த நாளத்தில் ஓட்டை ஏற்பட வாய்ப்பு உருவாகும்.
இது உடனே சிக்கல் உண்டாகி, உயிருக்கு ஆபத்து ஏற்பட்டு, மரணமும் நிகழலாம். எனவே, இதை ஜாக்கிரதையாக, கண்காணித்து செய்ய வேண்டும்.
இந்த சிக்கலையும், விளைவு களையும் தவிர்க்க, 'இமேஜ்' தழுவிய ஸ்டென்ட் சிகிச்சை, அதாவது, ஐவஸ், ஓ.சி.டி., உபயோகப்படுத்தி, 'பிளாஸ்டி ஸ்டென்ட்' செய்தால் சிக்கல் இருக்காது. தெளிவாகவும், உறுதியாகவும், ஸ்டென்ட் பொருத்த முடியும்.

ஓ.சி.டி., - ஆப்டிக்கல் கோஹெரன்ஸ் டோமோகிராபி என்ற நவீன வரைபடம் மூலம், ஸ்டென்ட் சிகிச்சை செய்யலாம். இதற்கும், ஐவசுக்கும் என்ன வித்தியாசம்?

ஓ.சி.டி.,யில், அல்ட்ரா வயலெட் ஒளியை உபயோகப்படுத்துவதால், படம் வண்ணத்திலும், துல்லியமாகவும் இருக்கும். ஐவசில், ஒலியை உபயோகப்படுத்தும் போது ஒலி அலைகளால் படம் தெளிவாக இருக்காது; கருப்பு வெள்ளையாக இருக்கும். எனினும், இந்த இரண்டு கருவிகளும், ஆஞ்சியோ பிளாஸ்டி சிகிச்சையில் முக்கிய பங்கு வகிக்கின்றன. இப்படி செய்வது தான் உறுதியான,
சுத்தமான வேலை.
எனவே, ஆஞ்சியோகிராம் சிறிய பரிசோதனை தான்; ஜாக்கிரதையாக செய்ய வேண்டும்.
மக்கள் கவனிக்க வேண்டியவை:

* டி.எம்.டி., எக்கோ செய்து, ஆஞ்சியோகிராம் செய்ய வேண்டும்.

* நெஞ்சு வலி வந்தவுடன், மருத்துவமனையில் சேர்த்து சில பரிசோதனைகளை செய்த பின் தான், ஆஞ்சியோ செய்ய வேண்டும்.

* மருத்துவமனையில், நல்ல கேத்லேப், தேவையான உபகரணங்கள், பயிற்சி பெற்ற நர்சுகள், டெக்னீஷியன்கள் இருக்க வேண்டும்.

* கேத் லேப் அருகில், ஐ.சி.சி.யு., இதய அறுவை சிகிச்சை அரங்கம் இருக்க வேண்டும். மயக்க மருந்து கொடுக்க, மருத்துவர் அருகில் இருக்க வேண்டும்.
கேத் லேப் வலது புறம் அறுவை சிகிச்சை அரங்கமும், இடது புறம் தீவிர சிகிச்சை பகுதியும் என்ற முறையை, இந்தியா முழுவதும் கொண்டு வந்தவர், என் இனிய நண்பரும், இதய மாற்று சிகிச்சை நிபுணருமான பேராசிரியர் கே.ஆர்.பாலகிருஷ்ணன். இவர் பணிபுரியும் மருத்துவமனைகளில் இந்த முறை செயல்படுகிறது. சில நேரங்களில் ஆஞ்சியோ பிளாஸ்டியில் சிக்கலானால், இம்மாதிரியான அறை அமைப்புகள், உபயோகமாக இருக்கும்.
வெற்றிகரமான ஸ்டென்ட் சிகிச்சை செய்ய; நுட்பமான, தெளிவான சிகிச்சை; எது, எப்படி, எப்போது என்ற முடிவுக்கு வர, அனுபவமிக்க இதய வல்லுனர்களால் தான் முடியும்.

இதய ஊடுறுவல் நிபுணராக வர வேண்டியவர்கள், ஐந்து முதல்,10 ஆண்டுகள் வரை நிறைய நோயாளிகளை பரிசோதனை செய்யும் கூடத்திலும், மருத்துவமனையிலும், பை பாஸ் சர்ஜரி உள்ள மருத்துவமனையிலும் பணியாற்றினால் தான், தெளிவான உறுதியான செயல்திறன் மிக்கவர்களாக திகழ முடியும். டி.எம்., - டி.என்.பி., பட்டம் மட்டும் போதாது.
நல்ல ஆசிரியர், பலருக்கு சொல்லிக் கொடுத்து தெளிவான அறிவும்,திறனையும் பெறுகிறார்.- பேராசிரியர் சு.அர்த்தநாரிஇதய ஊடுறுவல் நிபுணர்டாக்டர் எஸ்.ஏ.ஹார்ட் கிளினிக் கிருஷ்ணாபுரம், ராயப்பேட்டை,சென்னை - 14.
கைப்பேசி: 98401 60433.

No comments:

Post a Comment

NEWS TODAY 25.12.2024