Friday, July 28, 2017

நெரிசலை குறைக்க தரமணி பகுதியில் நாளை முதல் போக்குவரத்து மாற்றம்




போக்குவரத்து நெரிசலை குறைக்க தரமணி பகுதியில் நாளை முதல் வாகன போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.

ஜூலை 28, 2017, 03:45 AM

ஆலந்தூர்,


இதுகுறித்து சென்னை மாநகர போலீஸ் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:–

சென்னை தரமணி பழைய மாமல்லபுரம் சாலை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் அதிக அளவில் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், பெருநிறுவன அலுவலகங்கள், வியாபார நிறுவனங்கள் மற்றும் குடியிருப்புகள் உள்ளதால் இப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது.

டைடல் பார்க்கில் இருந்து எஸ்.ஆர்.பி. டூல்ஸ் வரை பழைய மாமல்லபுரம் சாலையில் அதிக அளவில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இப்பகுதியில் போக்குவரதது சீராக செல்வதற்காக கீழ்க்கண்ட போக்குவரத்து மாற்றங்கள் 28–ந் தேதி (நாளை) முதல் சோதனை அடிப்படையில் செய்யப்படுகிறது.

டைடல் பார்க், எல்நெட், ராமானுஜம் தொழில்நுட்ப நிறுவனம செல்ல வேண்டிய வாகனங்கள் தற்போது டைடல் பார்க் சிக்னல் சந்திப்புக்கு சென்று பழைய மாமல்லபுரம் சாலையின் மேற்கு பகுதியில் உள்ள அணுகு சாலையை இருவழி பாதையாக பயன்படுத்தினர். தற்போது இது தடை செய்யப்படுகிறது.

மேற்கண்ட வாகனங்கள் அணுகு சாலையில் ஒருவழி பாதையில் சென்று மத்திய கைலாஷ் அருகில் திரும்பி டைடல் பார்க்கை அடைந்து அங்கிருந்து தாங்கள் செல்லும் இடங்களுக்கு செல்லலாம்.

சி.எஸ்.ஐ.ஆர். சாலையில் இருந்து வரும் வாகனங்கள் அசண்டாஸ் சந்திப்பில் வலதுபுறம் திரும்ப தடை செய்யப்படுகிறது. வாகனங்கள் டைடல் பார்க் சந்திப்பிற்கு நேராக சென்று அங்கிருந்து திரும்பி எஸ்.ஆர்.பி.டூல்ஸ் அடைந்து அங்கிருந்து செல்ல வேண்டும்.

டைடல் பார்க் சந்திப்பில் இருந்து சி.எஸ்.ஐ.ஆர் சாலை செல்ல வேண்டியவர்கள் அசென்டாஸ் சந்திப்பில் வலதுபுறம் திரும்ப தடை விதிக்கப்படுகிறது. வாகனங்கள் நேராக எஸ்.ஆர்.பி.டூல்ஸ் சந்திப்பு வரை சென்று அங்கிருந்து திருமபி அசெண்டாஸ் சந்திப்புக்கு வந்து செல்லலாம்.

சி.எஸ்.ஐ.ஆர். சாலை மற்றும் பழைய மாமல்லபுரம் சாலையில் இருந்து வரும் இலகு ரக வாகனங்கள் மத்திய கைலாஷ் சந்திப்பை அடைய அசெண்டாஸ் மற்றும் டைடல் பார்க் சந்திப்புகளுக்கு இடையில் உள்ள இடைவெளியில் இடதுபுறம் திரும்பி அணுகு சாலையின் வழியாக நேராக பழைய மாமல்லபுரம் பிரதான சாலைக்கு சென்றடைந்து மத்திய கைலாஷ் நோக்கி சென்று, அங்கிருந்து செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்லலாம்.

மேற்கண்ட போக்குவரத்து மாற்றங்கள் போக்குவரத்து நெரிசலை குறைக்கவும், பொதுமக்களின் நலன் கருதியும் நடைமுறைப்படுத்தப்படுகிறது. வாகன உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுனர்கள் போக்குவரத்து மாற்றங்களுக்கு ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment

NEWS TODAY 22.04.2024