Wednesday, July 26, 2017

நம்பிக்கையே வாழ்வின் ஆதாரம்

By கா. அய்யநாதன்  |   Published on : 25th July 2017 02:15 AM  |  
Ayyanathan
Ads by Kiosked
புணேயில் இயங்கிவரும் தகவல் தொழில்நுட்ப நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்த இருபந்தைந்து வயதே ஆன பொறியாளர் ஒருவர் தற்கொலை செய்துக் கொண்ட செய்தி அதிர்ச்சியை அளிக்கிறது. இந்த இளைஞர், அப்பணியில் இருந்து நீக்கப்பட்டதனால் மனமுடைந்து, அவர் தங்க வைக்கப்பட்டிருந்த விடுதியின் 4-ஆவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.
தற்கொலை என்பது நமது நாட்டில் இன்று அன்றாட செய்தியாகிவிட்டது என்றாலும், பொறியியல் பட்டம் பெற்ற ஓர் இளைஞர், வேலை இழப்பினால் மனமுடைந்து தனது வாழ்வையே முடித்துக்கொள்ள முற்பட்டது ஏன் என்பதை ஆராயாமல் கடந்து செல்ல முடியவில்லை.
அந்த இளைஞர் எழுதிவைத்த கடிதத்தில், தனது முடிவிற்கு யாரும் காரணமில்லை என்றும், தகவல் தொழில்நுட்பத் துறையில் வேலைக்கு உத்தரவாதம் இல்லை, எப்படி எனது குடும்பத்தைக் காப்பாற்றுவது என்று தெரியவில்லை என்றும் எழுதியுள்ளார்.
ஒரு வேலை போனால் இன்னோர் இடத்தில் வேலை கிடைக்கும் என்று நம்பிக்கை இந்த இளைஞருக்கு இல்லாமல் போனதேன் என்பதுதான் இங்கு ஆழந்து கவனிக்கத்தக்க விடயமாகும்.
ஆண்டொன்றுக்கு இலட்சக்கணக்கான தகவல் தொழில்நுட்பப் பொறியியல் பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்புக்களை அள்ளி வழங்கிய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், இன்று உலகளவில் ஏற்பட்டுவரும் தொழில்நுட்ப மேம்பாட்டு நெருக்கடியால் தங்கள் பணியாளர்களின் எண்ணிக்கையை குறைத்து வருகின்றன.
ஒரு பக்கம் புதிதாக பணியாளர்களை பணிக்கு அமர்த்துவதை முற்றிலுமாக நிறுத்தியுள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், மற்றொரு பக்கத்தில் தொழில்நுட்ப மாற்றங்களுக்கு ஈடுகொடுக்க இயலாதவர்கள் என்று கூறி, தங்கள் பணியாளர்களில் கணிசமான எண்ணிக்கையினரை பணி நீக்கமும் செய்து வருகின்றன.
எடுத்துக்காட்டாக, தகவல் தொழில்நுட்பத் துறையில் இந்தியாவின் நான்கு முதன்மை நிறுவனங்களான டி.சி.எஸ்., இன்ஃபோசிஸ், விப்ரோ, எச்.சி.எல். ஆகியன கடந்த ஆண்டு பணியில் சேர்த்துக்கொண்ட பணியாளர்களின் எண்ணிக்கையோடு ஒப்பிடுகையில் இந்த நிதியாண்டில் - டிசம்பர் மாதம் வரையிலான 9 மாதத்தில் - 21 விழுக்காடு குறைவாக பணியாளர்களையே சேர்த்திருக்கின்றன.
இன்ஃபோசிஸ் நிறுவனத்தைப் பொருத்தவரை 18 விழுக்காடு பணியாளர் சேர்ப்பு குறைக்கப்பட்டுள்ள நிலையில், பணியில் இருந்தோரில் 9 விழுக்காட்டினர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த ஆண்டு 17,856 பேருக்கு புதிதாக வேலையளித்த இந்நிறுவனம், இந்த ஆண்டு 6,320 பேருக்கு மட்டுமே புதிதாக வேலையளித்துள்ளது. டி.சி.எஸ். நிறுவனம் 2015-ஆம் ஆண்டில் தனது மொத்த பணியாளர்களில் 16.7 விடுக்காட்டினரை பணிநீக்கம் செய்துள்ளது. 2016-ஆம் ஆண்டில் மேலும் 12.1 விழுக்காட்டினரை பணிநீக்கம் செய்துள்ளது.
மேலும் இதுபோல் காங்னிசன்ட் உள்ளிட்ட பெரும் நிறுவனங்கள் பலவும் தங்கள் பணியாளர்களின் எண்ணிக்கையை குறைத்துள்ளது தகவல் தொழில்நுட்பத் தகுதியை மட்டுமே பெற்றுள்ள பொறியாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இத்துறையில் உலக அளவில் ஏற்பட்டுவரும் தொழில்நுட்ப மேம்பாடுகளுக்கு ஏற்ற வகையில் தங்களை தகவமைத்துக்கொள்ளவே எண்ணிக்கையை குறைத்து வருவதாக கூறும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், தற்போது பணியில் இருக்கும் பொறியாளர்களின் தகுதி மேம்பாட்டை அதிகரிக்க உரிய பயிற்சிகளை அளித்து வருவதாகவும் கூறியுள்ளன.
விரைவில் மீண்டும் பணி வாய்ப்புகள் அதிகரிக்கும் என்று தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் கூட்டமைப்பான 'நாஸ்காம்' தெரிவித்துள்ளது.
கடந்த பத்தாண்டுகளாக திறம்பட பணியாற்றி தங்கள் நிறுவனங்களின் வளர்ச்சிக்கு பெரும்பங்காற்றியவர்களுக்கு பணிநீக்கம் என்பது மன ரீதியிலான பெரும் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
கால் நூற்றாண்டுக் காலத்திற்கு முன்னர் இப்படிப்பட்ட ஒரு சூழல் ஏற்பட்டபோது அரசு தலையிட்டு, பணி இழப்பு ஏற்படா வண்ணம் காத்தது. ஆனால் இன்றைய அரசுகள் 'தொழிலில் தலையிடா' கொள்கையை கடைப்பிடித்து வருகின்றன.
சென்னையை அடுத்த திருப்பெரும்புதூரில் இயங்கிவந்த நோக்கியா நிறுவனத்தில் உருவான சிக்கலால் கதவடைப்பு செய்தபோது அதில் பணியாற்றி வந்த 8,000 பேர் வேலையிழந்தனர். நட்டாற்றில் விடப்பட்ட நிலையை எண்ணி பணியிழந்தோர் போராடினர்.
எந்த அரசும் அவர்களுக்கு கைகொடுக்க முன்வரவில்லை. இன்றைய அரசுகள் கடைபிடிக்கும் கொள்கைகள் நிறுவனங்களுக்கு நிகரற்ற சுதந்திரத்தை தருகின்றன. வேலை இழந்தவர்கள் தொழில் தகராறு சட்டத்தின் கீழ் வழக்குத் தொடரலாம் என்று மட்டும் தொழிலாளர் நலத்துறை ஆலோசனை கூறிவிட்டு ஒதுங்கிக்கொள்கிறது.
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஆண்டுக்கு ஒரு கோடி வேலை வாய்ப்புகளை உருவாக்குவோம் என்று 2014 நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரையில் இன்றைய பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்தார். நடந்ததா?
இன்றைக்கு மூன்று ஆண்டுகள் ஆகிவிட்டன. தகவல் தொழில்நுட்பத் துறை மட்டுமல்ல, மற்ற துறைகளிலும் கூட வேலைவாய்ப்பு பெருகவில்லை.
2015-ஆம் ஆண்டில் 1.55 இலட்சம் பேருக்கும், 2016-ஆம் ஆண்டில் 2.31 இலட்சம் பேருக்கும் மட்டுமே புதிதாக வேலை வாய்ப்புகள் உருவானதாக இந்திய ஒன்றிய அரசின் தொழிலாளர் நலத்துறை புள்ளிவிவரம் கூறுகிறது.
நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி - பொருளாதார வளர்ச்சிக்கான குறியீடு - மார்ச் மாதத்தோடு முடிந்த காலாண்டில் 6.1 விழுக்காடு வளர்ந்துள்ளது. ஆனால் வேலைவாய்ப்புக்கள் அதற்கு ஏற்ப வளரவில்லை! இதனை வேலையற்ற வளர்ச்சி (Jobless Growth) என்று கூறுகின்றனர். ஏன் இந்த நிலை? நம் நாட்டிலும், அயல் நாடுகளிலும் தகவல் தொழில்நுட்பத் துறை உட்பட பல்வேறு தொழில் துறைகளில் பணியாற்றி இன்று வேலையிழப்பை சந்திக்கும் இந்த இளைஞர்கள் கடந்த பத்துப் பதினைந்து ஆண்டுகளில் தாங்கள் ஈட்டிய ஊதியத்தில் 20 முதல் 30 விழுக்காடு வரை தனி நபர் வருமான வரியாக கட்டினார்கள்.
இன்றைக்கு வேலை இழப்பை எதிர்நோக்கும் இவர்களுக்கு எந்த விதத்திலாவது வரி வசூலித்த நமது நாட்டு அரசு உதவித்தொகை ஏதும் வழங்குமா? சட்டத்தில் இடம் இல்லையென்பார்கள். அயல்நாடுகளில் வரியும் வசூலிக்கிறார்கள், வேலை இழப்பை சந்தித்தால் வாழ்வை ஈடேற்றும் அளவிற்கு உதவித் தொகையும் வழங்குகிறார்கள்.
இந்நாட்டின் இளைய சமூதாயத்தின் எண்ணிக்கைதான் மக்கள்தொகையில் பெரும் பங்கு என்று புள்ளிவிவரம் கூறுகிறது. அது இந்நாட்டின் பெரும் அறிவு, உழைப்புச் சொத்து என்று விவரிக்கிறது. அந்தச் சொத்து வருவாய் ஈட்டும்போது வரி வசூலிப்பதும், வருவாய் அற்றுப் போகும் நிலையில் நிர்கதியாய் விட்டு விடுவதும் சரியா?
தனது வருவாயில் வரி வசூலித்த நாடு, இக்கட்டான நிலையில் தன்னைத் தாங்கும் என்ற நிலை இந்நாட்டில் இருந்தால் பொறியியல் பட்டம் பெற்ற ஓர் இளைஞன் வாழ்வை முடித்துக்கொள்ள வேண்டிய நிலை ஏற்படுமா?
ஆயினும் நன்கு படித்து, பொறியியல் பட்டம் பெற்ற இளைஞர்கள் ஒரு வேலை போய்விட்டால் அதனால் எதிர்காலமே இருண்டுவிட்டதாக எண்ணிடலாமா? பெரும் செலவு செய்து படிக்க வைத்து, உங்கள் முன்னேற்றத்தில் தங்கள் எதிர்காலத்தைக் காண காத்திருக்கும் குடும்பத்தினரை அதிர்ச்சிக்கும் வேதனைக்கு ஆளாக்குவது அறிவுடைமை ஆகுமா?
படித்த படிப்பினால் பெற்ற பட்டமும் அறிவும் மட்டும்தான் ஒரு மனிதன் என்றால், படிக்க வகையில்லாமல், பட்டம் பெறாமல், கல்வி வாசனையே ஏதுமின்றி இந்நாட்டில் பல கோடிக்கணக்கான மக்கள் வாழ்கின்றனரே, அவர்களெல்லாம் உடல் உழைப்பின் மூலம் தாங்கள் வாழும் வாழ்க்கைக்கானத் தேவைகளை நிறைவேற்றிக்கொண்டு வாழவில்லையா?
அந்த உழைப்பின் பயனாக இந்நாட்டின் உற்பத்தி பெருகவில்லையா? நீங்கள் பணியாற்றிடும் அமைப்புச் சார்ந்த தொழில்களில் இந்நாட்டினர் 18 விழுக்காடுதான் வேலைவாய்ப்புப் பெறுகின்றனர் என்பதும், அமைப்புச் சாரா (Un-organised sector)  தொழில்களில்தான் 80 விழுக்காட்டினர் வேலைவாய்ப்புப் பெறுகின்றனர் என்பதும், அவர்களுக்கு எந்த வேலை உத்தரவாதமும் கிடையாது என்பதும் நீங்கள் அறிவீர்களா?
அவர்கள் எப்படி வாழ்கிறார்கள்? அவர்களுக்கு நம்பிக்கையே வாழ்வாகிறது. இப்படி தற்கொலை செய்து கொள்கிறவர்கள் பெரும்பாலும் தங்களின் புறத்தகுதிகளை மட்டுமே நம்பி வாழ்கிறவர்களாக உள்ளனர். நாம் பெறும் கல்வி நமக்கு புற உலகைப் பற்றிய அறிதலையும் புரிதலையும் தருகிறது என்பது உண்மையே.
ஆனால் அதுவே நமது வாழ்விற்குப் போதுமான பலமாக ஆவதில்லை. மானுடப் பிறப்பான நமக்கு பிறவியின் அடிப்படையில் பல ஆற்றல்கள் உள்ளன. இதனை ஆழ்ந்துணர்ந்து செயல்படுவதே நமக்கு மேன்மையைத் தரும். இதுவே அக நம்பிக்கையாகும், இதையே தன்னம்பிக்கை என்றும் கூறலாம்.
ஆற்றலே மனிதருக்கு ஆதாரம், அவையும் எப்போதெனில் அவனிடம் அசைக்க இயலாத நம்பிக்கை உள்ளதுபோது மட்டுமேயாகும். இளைஞர்கள், மாணவர்கள் இதனை உணர்ந்து துணிவுடன் வாழ்வை எதிர்கொள்ள வேண்டும்.

No comments:

Post a Comment

NEWS TODAY 25.12.2024