Thursday, July 27, 2017

வயதான கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்யலாமா : அரசுக்கு உத்தரவு

பதிவு செய்த நாள் 26 ஜூலை
2017
23:41

மதுரை: வயதான கைதிகளுக்காக அனைத்து சிறைகளிலும் அறிவுரை குழுமம் அமைக்க தாக்கலான வழக்கில், உள்துறை செயலர் அறிக்கை தாக்கல் செய்ய, உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.

மதுரை சின்ன சொக்கிகுளம் ராஜா தாக்கல் செய்த பொதுநல மனு: மத்திய சிறைகள், பெண்களுக்கான சிறப்பு சிறைகளில் ஆயுள் கைதிகள் உள்ளனர். இவர்களில் 55 வயதிற்கு மேல் பெண்கள், 65 வயதிற்கு மேல் ஆண் கைதிகள் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் தண்டனை காலத்தில் இரண்டரை ஆண்டுகள் பூர்த்தி செய்திருந்தால், சிறை அதிகாரிகள் அடையாளம் கண்டு, அறிவுரை குழுமம் முன் ஆஜர்படுத்த வேண்டும். முன்கூட்டியே விடுதலை செய்ய சிறை விதிகளில் இடமுண்டு. இதை அதிகாரிகள் பின்பற்றுவதில்லை.
வயதான கைதிகளுக்காக அனைத்து சிறைகளிலும் அறிவுரை குழுமம் அமைக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனு செய்திருந்தார்.நீதிபதிகள் கே.கே.சசிதரன், ஜி.ஆர்.சுவாமிநாதன் அமர்வு விசாரித்தது.

அரசு வழக்கறிஞர்: அனைத்து மாவட்ட சிறைகளிலும் அறிவுரை குழுமங்கள் செயல்படுகின்றன. சிறைகளுக்கு தனி விதிகள் உள்ளன. அனைத்து கைதிகளையும் சமமாக பார்க்க
முடியாது.

உச்சநீதிமன்றம், 'விதிகளுக்குட்பட்டு கைதிகள் விவகாரத்தில் பரிசீலித்து முடிவெடுக்க வேண்டும். இது தொடர்பாக தமிழக உள்துறை செயலர் அரசாணை பிறப்பிக்க வேண்டும்,' என உத்தரவிட்டுள்ளது. கைதிகள் விவகாரத்தில் குற்றவியல் நடைமுறை சட்டம், சிறை விதிகளுக்குட்பட்டுத்தான் முடிவெடுக்க முடியும், என்றார்.
நீதிபதிகள்: உச்சநீதிமன்ற உத்தரவுப்படி அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதா? என்பது குறித்து உள்துறை செயலர் (சிறைத்துறை) ஆக.,9ல் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும், என்றனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 22.04.2024