Wednesday, July 26, 2017

பிறப்பு சான்றுக்கு பதிலாக இறப்பு சான்று வழங்கிய பஞ்சாயத்து: 14 ஆண்டுகளுக்குப் பிறகு கண்டுபிடித்த மாணவி

Published : 26 Jul 2017 10:29 IST

காசர்கோடு

கேரளாவில் காசர்கோடு மாவட் டத்தைச் சேர்ந்த பெல்லூர் பஞ்சாயத்து, பிறப்புச் சான்றித ழுக்குப் பதிலாக இறப்புச் சான்றிதழை வழங்கியுள்ளது. தற்போது 10-ம் வகுப்பு படிக்கும் மாணவி, 14 ஆண்டுகளுக்குப் பிறகு தவறை கண்டுபிடித்துள் ளார்.

கேரளாவின் காசர்கோடு மாவட்டம் பெல்லூர் பஞ்சாயத்து கின்னிங்கர் கிராமத்தைச் சேர்ந்த தம்பதி ரமணா பூஜாரி, லட்சுமி. அவர்களின் மகள் சுவேதா பூஜாரி. அங்குள்ள அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார்.


பள்ளி பதிவேட்டில் அவரது பிறந்த தேதி தவறாக குறிப்பிடப் பட்டிருந்ததால் அதில் திருத்தம் செய்ய சுவேதா கோரினார். அதற்காக மாணவியின் பிறப்புச் சான்றிதழை கொண்டு வரும்படி ஆசிரியை அறிவுறுத்தினார்.

அதன்படி தனது பிறப்புச் சான்றிதழை ஆசிரியையிடம் சுவேதா அளித்தார். அதைச் சரிபார்த்தபோது 14 ஆண்டுகளுக்கு முன்பு சுவேதா இறந்துவிட்டதாகக் குறிப்பிடப்பட்டிருந்ததை பார்த்து ஆசிரியை அதிர்ச்சி அடைந்தார். மாணவி சுவேதா அப்படியே அதிர்ச்சியில் உறைந்துவிட்டார்.

நடந்தது என்ன?

கடந்த 2002 செப்டம்பர் 12-ம் தேதி சுவேதா பிறந்தார். அவரது தந்தை ரமணா பூஜாரி, மகளுக்கு பிறப்புச் சான்றிதழ் கோரி பெல்லூர் பஞ்சாயத்து அலுவலகத்தில் விண்ணப்பித்தார். நான்கு மாத காலதாமதத்துக்குப் பிறகு 2003 பிப்ரவரியில் பஞ்சாயத்து நிர்வாகம் சான்றிதழை வழங்கியது.

ரமணா பூஜாரி எழுத, படிக்கத் தெரியாதவர். அவரால் மகளின் சான்றிதழில் என்ன எழுதியிருக்கிறது என்பதை படித்து அறிய முடியவில்லை. எனினும் சான்றிதழை மிகவும் பத்திரமாக பாதுகாத்து வந்தார்.

ஆரம்ப கல்வியின்போது அந்த சான்றிதழைப் பயன்படுத்தியே மகளை பள்ளியில் சேர்த்துள்ளார். சுவேதா 10-ம் வகுப்புக்கு வந்தபிறகுதான், பஞ்சாயத்து நிர்வாகம் பிறப்புச் சான்றிதழுக்குப் பதிலாக இறப்புச் சான்றிதழ் வழங்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.

பஞ்சாயத்து நிர்வாகம் வருத்தம்

இந்த விவகாரம் குறித்து பெல்லூர் பஞ்சாயத்து செயலாளர் அச்சுதா மணியானி கூறியபோது, ‘‘மாணவியின் பிறப்புச் சான்றிதழில் தவறு நேர்ந்திருக்கிறது. அதற்காக வருந்துகிறோம். அந்த தவறை சரிசெய்து புதிய சான்றிதழ் வழங்கப்படும். எனது அனுபவத்தில் இதுபோன்ற தவறை பார்த்தது இல்லை’’ என்று தெரிவித்தார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 24.11.2024