Friday, July 28, 2017

பாலிடெக்னிக் கல்லூரிகள் கட்டும் ஒப்பந்த பணிகளை வழங்க அமைச்சர் லஞ்சம் கேட்டதாக வழக்கு 

dailythanthi




அமைச்சர் லஞ்சம் கேட்டதாக தொடரப்பட்ட வழக்கிற்கு உயர் கல்வித்துறை செயலாளர் உள்ளிட்டோர் பதில் அளிக்க வேண்டும் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

ஜூலை 28, 2017, 04:15 AM

சென்னை,

பாலிடெக்னிக் கல்லூரிகள் கட்டும் ஒப்பந்த பணி வழங்க உயர் கல்வித்துறை அமைச்சர் லஞ்சம் கேட்டதாக தொடரப்பட்ட வழக்கிற்கு உயர் கல்வித்துறை செயலாளர் உள்ளிட்டோர் பதில் அளிக்க வேண்டும் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்தவர் வெங்கன். இவர், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

தமிழக பொதுப்பணித்துறையில், முதல்நிலை ஒப்பந்ததாரராக உள்ளேன். தேனி, மதுரை, வேலூர், விழுப்புரம், கிருஷ்ணகிரி, புதுக்கோட்டை, அரியலூர், திருச்சி ஆகிய மாவட்டங்களில் புதிய பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கான கட்டிடங்கள் கட்டுவதற்கு ஒப்பந்த அறிவிப்பை கடந்த மே மாதம் 8-ந் தேதி பொதுப்பணித்துறை தலைமை என்ஜினீயர் வெளியிட்டார்.

இந்த ஒப்பந்த பணிகளை பெறுவதற்காக கடந்த ஜூன் 9-ந் தேதி ஒப்பந்த விண்ணப்பத்தை தாக்கல் செய்தேன். அன்று இந்த ஒப்பந்த பணி கேட்டு விண்ணப்பம் செய்யும் நிறுவனங்களின் தகுதி தொடர்பான ஆவணங்கள் திறக்கப்பட்டன. அதில் என்னுடைய நிறுவனம் தகுதி பெற்றது.

இதையடுத்து, பொதுப்பணித்துறை தலைமை என்ஜினீயர், ஒப்பந்த பணி தொடர்பாக உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகனை சந்திக்கும்படி கூறினார். இதன்படி, கடந்த 14-ந் தேதி அமைச்சர் அன்பழகனை சந்தித்தேன்.

அப்போது, ஒப்பந்த விண்ணப்பங்களை திரும்பப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும், இந்த ஒப்பந்த பணிகளை ஈரோட்டை சேர்ந்த ‘நந்தினி’ என்ற கட்டுமான ஒப்பந்த நிறுவனத்துக்கு வழங்கப்போவதாகவும் கூறினார். அந்த நிறுவனம், கட்டுமான ஒப்பந்தப் பணிக்காக நிர்ணயிக்கப்பட்ட மொத்த தொகையில் 16 சதவீதத்தை ‘கமிஷன்’ தர சம்மதித்துள்ளதாகவும், இந்த ஒப்பந்த பணியை எனக்கு வழங்கவேண்டும் என்றால், 20 சதவீத தொகையை லஞ்சமாக நான் கொடுக்கவேண்டும் என்றும் அப்படி தரவில்லை என்றால், எந்த காரணமும் கூறாமல் என் ஒப்பந்த விண்ணப்பத்தை நிராகரித்துவிடுவோம் என்றும் அவர் கூறினார்.

ஆனால், நான் லஞ்சம் கொடுக்க முடியாது என்றும், தமிழ்நாடு ஒப்பந்த பணிக்கான விதிகளில் அமைச்சருக்கு லஞ்சம் கொடுக்க வேண்டும் என்று கூறப்படவில்லை என்றும் கூறினேன்.

இதன்பின்னர், கடந்த 21-ந் தேதி தலைமை என்ஜினீயர் என்னை தொடர்பு கொண்டு, அமைச்சருக்கு லஞ்சப் பணம் கொடுத்துவிட்டாயா? என்று கேட்டார்.

அதற்கு, அரசு நிர்ணயித்த தொகையைவிட குறைவாக குறிப்பிட்டு, ஒப்பந்த விண்ணப்பம் கொடுத்துள்ளதால், அமைச்சருக்கு லஞ்சம் கொடுக்க தேவையில்லை என்று நான் கூறிவிட்டேன். இதனால், இதுவரை அந்த ஒப்பந்த புள்ளிகளை திறக்காமல், கிடப்பில் போட்டு வைத்துள்ளனர்.

அமைச்சர் லஞ்சம் கேட்டது குறித்து, கடந்த 22-ந் தேதி தமிழக கவர்னரிடம் புகார் செய்துள்ளேன். எனவே, பாலிடெக்னிக் கல்லூரி கட்டிடங்கள் கட்டுவது தொடர்பான ஒப்பந்த புள்ளி விவரங்களை திறக்கவும், அதுகுறித்து எனக்கு முன்கூட்டியே தகவல் தெரிவிக்கவேண்டும் என்றும் பொதுப்பணித்துறை தலைமை என்ஜினீயருக்கு உத்தரவிட வேண்டும்.


மேலும், இந்த ஒப்பந்த பணிகளை அமைச்சர் கே.பி.அன்பழகனிடம் ஆலோசனை செய்யாமல், 7 நாட்களுக்குள் ஒப்பந்த பணி வழங்குவதை இறுதி செய்யவும் உத்தரவிடவேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனு நீதிபதி எம்.துரைசாமி முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் எஸ்.டி.எஸ்.மூர்த்தி ஆஜராகி, ‘மனுதாரர் ஒப்பந்தப் பணி தொடர்பாக ஏதாவது புகார் தெரிவிக்கவேண்டும் என்றால், அரசிடம் தெரிவித்து இருக்கலாம். கடந்த 21-ந் தேதி தனக்கு ஒப்பந்த பணி வழங்கவேண்டும் என்று தலைமை என்ஜினீயருக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், அமைச்சர் லஞ்சம் கேட்டார் என்று எதுவும் குறிப்பிடவில்லை. ஆனால், தமிழக அரசிடம் புகார் செய்யாமல், கவர்னரிடம் போய் புகார் செய்துள்ளார். எனவே, இந்த வழக்கை தள்ளுபடி செய்யவேண்டும்’ என்று வாதிட்டார்.

மனுதாரர் தரப்பில் ஆஜரான வக்கீல், ‘மொத்தம் ரூ.79 கோடிக்கான ஒப்பந்த பணிக்கு 16 சதவீதம் லஞ்சமாக அமைச்சர் கேட்டுள்ளார். அதாவது சுமார் ரூ.12 கோடி லஞ்சம் கேட்டுள்ளார். இதை தர மறுத்ததால், மனுதாரருக்கு இந்த ஒப்பந்த பணி கிடைக்கக்கூடாது என்ற ரீதியில் அமைச்சரும், அதிகாரிகளும் செயல்படுகின்றனர்’ என்று வாதிட்டார்.

இதையடுத்து இந்த மனுவுக்கு உயர் கல்வித்துறை அமைச்சர், செயலாளர், உயர் கல்வித்துறை ஆணையர், பொதுப்பணித்துறை தலைமை என்ஜினீயர் ஆகியோர் 3 வாரத்துக்குள் பதில் மனு தாக்கல் செய்யவேண்டும் என்று நோட்டீஸ் அனுப்ப நீதிபதி எம்.துரைசாமி உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 22.04.2024