Thursday, July 27, 2017

மாவட்ட செய்திகள்

ஊதிய குறைப்பு நடவடிக்கையை கண்டித்து அண்ணாமலை பல்கலைக்கழக பதிவாளர் அலுவலகம் முற்றுகை








ஊதிய குறைப்பு நடவடிக்கையை கண்டித்து அண்ணாமலை பல்கலைக்கழக பதிவாளர் அலுவலகத்தை ஊழியர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஜூலை 26, 2017, 03:45 AM

சிதம்பரம்,

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் நிதிநெருக்கடி காரணமாக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அரசுடமையாக்கப்பட்டது. இதை தொடர்ந்து பல்கலைக்கழகத்தில் நிர்வாகம் சீர்திருத்த நடவடிக்கையின்படி அதிகப்படியான செலவினங்களை குறைப்பது, ஆட்கள் மற்றும் ஊதிய குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது.

அதன்படி, ஏராளமான ஊழியர்களை தமிழகம் முழுவதும் உள்ள அரசு சார்ந்த நிறுவனங்களுக்கு பணியிட மாற்றம் செய்து வருகிறது. நிதி நெருக்கடியை குறைக்க தற்போது ஊழியர்களுக்கு ஊதிய குறைப்பு செய்ய பல்கலைக்கழக நிர்வாகம் ஆலோசித்து வருவதாக தெரிகிறது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் படிப்பு மைய அதிகாரி மற்றும் சிறப்பு அதிகாரி சங்கம் சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் ஊதிய குறைப்பு நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், ஊழியர்களுக்கு ஊதிய குறைப்பு நடவடிக்கையை கண்டித்து நேற்று காலை 10.30 மணி அளவில் படிப்பு மைய அதிகாரி மற்றும் சிறப்பு அதிகாரி சங்கத்தை சேர்ந்த 500–க்கும் மேற்பட்டவர்கள் ஒன்று சேர்ந்து பல்கலைக்கழக பதிவாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து, அவர்கள் பதிவாளர் அலுவலக நுழைவு வாயில் முன்பு அமர்ந்து, கோ‌ஷங்களை எழுப்பி தங்களது கோரிக்கையை வெளிப்படுத்தினர்.

இது பற்றி தகவல் அறிந்த சிதம்பரம் உதவி போலீஸ் சூப்பிரண்டு நிஷா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர், உதவி போலீஸ் சூப்பிரண்டு நிஷா, பதிவாளர் ஆறுமுகம் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது, போராட்டக்காரர்கள், ஊழியர்களின் சம்பளத்தை குறைக்கக்கூடாது என்று முறையிட்டனர். இதற்கு பதில் அளித்த பதிவாளர் ஆறுமுகம், எங்களது உயர் அதிகாரிகளின் உத்தரவுபடி தான் செயல்பட முடியும் என்று கூறினார்.

இதனை கேட்ட போராட்டக்காரர்கள் பதிவாளர் அலுவலகம் முன்பே சிறிது நேரம் தங்களது போராட்டத்தை தொடர்ந்து நடத்தினர். பின்னர், அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.













No comments:

Post a Comment

NEWS TODAY 22.04.2024