தீர்வு!
By ஆசிரியர் |
Published on : 29th July 2017 01:56 AM |
நீட் தகுதித் தேர்வில் கலந்து கொண்ட
சமச்சீர் கல்வி பயின்ற மாணவர்களில் வெறும் 5 விழுக்காட்டினர் மட்டும்தான்
மருத்துவக் கல்லூரியில் இடம்பெறத் தகுதி பெற்றிருக்கிறார்கள். சமச்சீர்
கல்வி முறையில் 12 ஆண்டுகள் கஷ்டப்பட்டுப் படித்து நல்ல மதிப்பெண்
பெற்றும்கூட நீட் தேர்வு எழுதாததால் மருத்துவம் படிக்க முடியாமல் போனவர்கள்
ஒருபுறம்; சமச்சீர் கல்விமுறையில் படித்து அதிக மதிப்பெண் பெறாமல்,
தனியார் பயிற்சி வகுப்புகள் மூலம் தங்களைத் தயார் செய்துகொண்டு நீட்
தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று மருத்துவப் படிப்புக்கு நீட் தேர்வு மூலம்
தகுதி பெற்றிருப்பவர்கள் இன்னொருபுறம்.
தமிழகத்திலுள்ள 22 அரசு மருத்துவக் கல்லூரிகளில் 2,900 இடங்கள் இருக்கின்றன. அவற்றில் 434 இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்குத் தரப்படுகின்றன. மீதமுள்ள 2,466 இடங்கள் தமிழக அரசால் நிரப்பப்பட வேண்டும். இதுமட்டுமல்லாமல், அரசால் நிர்வகிக்கப்படும் இராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் உள்ள 128 இடங்களும் அரசின் நேரடி ஒதுக்கீட்டில் உள்ளன. தமிழகத்தில் உள்ள 10 தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 1,300 இடங்கள் இருக்கின்றன. அவற்றில் நிர்வாகத்துக்கான இடங்கள் போக அரசு ஒதுக்கீட்டுக்கு 783 இடங்கள் இருக்கின்றன.
நீட் தேர்வின் அடிப்படையில் மருத்துவப் படிப்புக்கான இடங்கள் நிரப்பப்பட வேண்டும் என்பது கட்டாயப்படுத்தப்படுமேயானால், தமிழக அரசின் சமச்சீர் கல்வி முறையில் படித்த மாணவர்
களுக்கு 85 விழுக்காடு இடங்களையும், மீதமுள்ள இடங்களை மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் மூலம் கல்வி பெற்றிருப்பவர்
களுக்கும் ஒதுக்கலாம் என்பதுதான் தமிழக அரசின் வேண்டுகோள். அதாவது, அரசிடமுள்ள 2,466 இடங்களில் 2,094 இடங்களையும் தனியார் கல்லூரிகளில் உள்ள 763 இடங்களில் 664 இடங்களையும் சமச்சீர் கல்வி பயின்ற மாணவர்களுக்கு ஒதுக்கித் தருவதன் மூலம் அவர்களது நலனைப் பாதுகாக்க முடியும் என்று கருதுகிறது மாநில அரசு. இதை நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதுதான் பிரச்னை.
85% இடங்களை சமச்சீர் கல்வி மாணவர்களுக்கு வழங்க ஏக
மனதாகத் தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறது தமிழக சட்டப்பேரவை. கடந்த ஜனவரி 31-ஆம் தேதி தமிழக சட்டப்பேரவை நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று இயற்றிய சட்டம் இதுவரையில் குடியரசுத் தலைவரின் ஒப்பு
தலைப் பெறவில்லை. அரசு நடத்தும் மருத்துவக் கல்லூரிகளுக்கு அடுத்த இரண்டு ஆண்டுகளுக்காவது நீட் தகுதித்தேர்வின் அடிப்
படையிலான மாணவர் சேர்க்கையிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று அவசரச் சட்டம் இயற்றுவது குறித்து மத்திய அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டிருக்கிறது. குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெற்றால் மட்டுமே இந்தக் கோரிக்கை சாத்தியமாகும்.
மாநில அரசுகளின் கல்வித் தரம் மிகவும் மோசமானதாக இருக்
கிறது என்பதும், பெருநகரங்களில் இயங்கும் என்.சி.இ.ஆர்.டி. பாடப்புத்தகங்களின் அடிப்படையில் இயங்கும் தனியார் சி.பி.எஸ்.இ. பள்ளிகளின் தரத்துடன் ஒப்பிடும்படியாக இல்லை என்பதும் உண்மைதான். கிராமப்புற மாணவர்கள் அந்தத் தரத்துக்கு உயர்த்தப்பட வேண்டும் என்பது லட்சியமாக இருந்தாலும்கூட, அது உடனடி சாத்தியமா என்றால் இல்லை. இன்னும்கூட சத்துணவு கிடைக்கிறது என்பதற்காகக் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பும் பெற்றோர் லட்சக்கணக்கில் இருக்கும் நிலையில் அடித்தட்டு மக்கள் அதிக நன்கொடையும் கல்விக் கட்டணமும் அளித்துத் தங்கள் குழந்தைகளை மருத்துவர்களாக்க விழைவது அசாத்தியமானதே.
அதேபோல, அரசின் சமச்சீர் கல்வியின் தரத்தை "என்.சி.இ.ஆர்.டி.' புத்தகங்களின் அடிப்படையில் மாற்றியமைத்து கிராமப்புற மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்த வேண்டும் என்பதும், லட்சியத்தின் பாற்பட்டதாக இருக்குமேயொழிய நடைமுறை சாத்தியமாக இல்லை. நூற்றாண்டுகளாக கல்வி வாசனையே இல்லாத சாமானியர்களை, ஆங்கில வழிக் கல்விக்கோ அல்லது அவர்களுடைய புரிதலுக்கு எட்டாத கல்வி முறைக்கோ உடனடியாக உட்படுத்த வேண்டும் என்பது அவலை நினைத்து உரலை இடிப்பதாக அமையும்.
அதற்காக தகுதி இல்லாதவர்களும் வருங்காலத்தில் நல்ல மருத்துவர்களாக உருவாக முடியாதவர்களும் மருத்துவப் படிப்பில் அனுமதிக்கப்பட வேண்டும் என்பதல்ல நமது வாதம். அடித்தட்டு மாணவர்களிலும் சமச்சீர் கல்வி முறையில் படித்த புத்திசாலி மாணவர்
களுக்கு, அதிகக் கல்விக் கட்டணம் அளித்துப் படித்த வசதியான மாணவர்களுக்குக் கிடைக்கும் வாய்ப்புத் தரப்பட வேண்டும். நீட் தேர்வு எழுதாதவர்கள் தகுதியற்றவர்கள் என்று நீதிமன்றம் கருதுவது சரியல்ல.
தமிழகத்தில் 6,877 பள்ளிக்கூடங்களில் மருத்துவப் படிப்புக்கான தகுதி பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை 4.2 லட்சம். 268 தனியார் பள்ளிகளில் கட்டணமும் நன்கொடையும் அளித்து சி.பி.எஸ்.இ. முறையில் மருத்துவப் படிப்புக்கான தகுதி பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை 4,276. மாவட்டந்தோறும் அரசு நிறுவியிருக்கும் மருத்துவக் கல்லூரிகளில் இருக்கும் பெரும்பாலான இடங் களும் 4.2 லட்சம் மாணவர்களுக்கு மறுக்கப்பட்டு, வசதி படைத்த 4,276 மாணவர்களுக்கு மட்டுமே கிடைக்கும் என்று சொன்னால் இதைவிட பெரிய அநீதி எதுவும் கிடையாது. இந்த வாதத்தை தமிழக அரசு நீதிமன்றத்தில் எடுத்துரைக்கத் தவறியதா அல்லது நீதிமன்றம் அதைப் புரிந்துகொள்ளத் தவறியதா என்று தெரியவில்லை.
இந்தப் பிரச்னைக்கு ஒரு தீர்வு இருக்கிறது. நீட் தேர்வில் பெற்ற மதிப்பெண்ணையும் பிளஸ்2-வில் அவர்கள் பெற்ற மதிப்பெண்ணையும் கூட்டிப் பார்த்து அவற்றின் சராசரியைக் கணக்கிட்டு அதனடிப்படையில் மருத்துவக் கல்விக்கான தகுதி நிர்ணயிக்கப் படுவதுதான் அது.
No comments:
Post a Comment