Wednesday, July 26, 2017

பள்ளி, கல்லூரிகளில் 'வந்தே மாதரம்' பாடல் : சென்னை ஐகோர்ட் உத்தரவு


பதிவு செய்த நாள் 25 ஜூலை
2017
23:55

சென்னை: பள்ளி, கல்லுாரிகளில், வாரம் ஒரு முறை, 'வந்தே மாதரம்' பாடலை ஒலிபரப்பவும், பாடவும், சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பட்டதாரி ஆசிரியர் தேர்வு எழுதிய, வீரமணி தாக்கல் செய்த மனு:
ஆசிரியர் பணிக்கான தேர்வில், 'வந்தே மாதரம் பாடல், முதலில் எந்த மொழியில் எழுதப்பட்டது?' என்ற கேள்வி இடம் பெற்றிருந்தது. அதற்கு, 'வங்க மொழி, உருது, மராத்தி, சமஸ்கிருதம்' என, விடைகள் அளிக்கப்பட்டிருந்தன. நான், 'வங்க மொழி' என, விடை அளித்தேன். ஆசிரியர் தேர்வு வாரியம் அளித்த விடையில், 'சமஸ்கிருதம்' என, குறிப்பிடப்பட்டிருந்தது.
அனைத்து புத்தகங்களிலும், 'வங்க மொழி' என்பதே விடையாக அளிக்கப்பட்டிருந்தது; சமஸ்கிருதம் என, எங்கும் குறிப்பிடப்படவில்லை. சரியான விடை அளித்த எனக்கு, கூடுதலாக ஒரு மதிப்பெண் வழங்க வேண்டும். ஆசிரியர் பணியிடங்களில், ஒரு இடத்தை காலியாக வைக்க, உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.
மனுவை விசாரித்த, நீதிபதி எம்.வி.முரளிதரன் பிறப்பித்த உத்தரவு:
வந்தே மாதரம், முதலில் எந்த மொழியில் எழுதப்பட்டது என்பது குறித்து வழக்கறிஞர்கள், எஸ்.சுஜாதா, பிலால், அண்ணாதுரை ஆகியோர் கடுமையான முயற்சிகளை எடுத்து, தகவல்களை திரட்டி அளித்துள்ளனர். அவர்களை, இந்த நீதிமன்றம் பாராட்டுகிறது. நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஆவணங்களில் இருந்து, வந்தே மாதரம் பாடல், வங்க மொழியில் எழுதப்பட்டது உறுதியாகிறது.
பின், இந்தப் பாடல் சமஸ்கிருதத்தில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. பாடலில், சமஸ்கிருத மொழி பயன்படுத்தப்பட்டாலும், வங்க மொழியில் எழுதப்பட்டது என்பதை ஆவணங்கள் வெளிப்படுத்துகின்றன. சரியான விடை அளித்ததற்காக, கூடுதலாக ஒரு மதிப்பெண் பெற, மனுதாரருக்கு உரிமையுள்ளது. அவருக்கு, ஒரு மதிப்பெண் கூடுதலாக வழங்க வேண்டும்.
ஆதி திராவிடர் பொதுப் பிரிவை சேர்ந்த மாணவர் ஒருவர், 54.12 மதிப்பெண் பெற்று, பணி நியமனம் பெற்றிருப்பதாக, அரசு வழக்கறிஞர் தெரிவித்தார். மனுதாரரை பொறுத்தவரை, 58.57 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். ஆதிதிராவிடர் பொதுப் பிரிவில், ஏதாவது காலியிடத்தில், மனுதாரரை நியமிக்க வேண்டும்.
நம் நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும், தேச பக்தி மிக முக்கியம். சுதந்திர போராட்டத்திற்காக, பலர் தங்கள் உயிரை, குடும்பத்தை தியாகம் செய்துள்ளனர். வந்தே மாதரம் போன்ற தேச பக்தி பாடல்கள், மக்கள் மத்தியில் மன உறுதியையும், நம்பிக்கையையும் ஏற்படுத்தும். இந்த நவீன உலகில், நம் வாழ்க்கை முறை மாறியுள்ளது.
சில நேரங்களில், நம் தேசத்தை நாம் மறந்து விடுகிறோம். அதை உணர்ந்து தான், சினிமா தியேட்டர்களில் தேசிய கீதம் ஒலிக்கவும், அதற்கு மரியாதை செலுத்தவும், உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. எனவே, பொது நலன் கருதி, ஒவ்வொரு மக்களின் மனதிலும், தேச பக்தி உணர்வை ஊட்டும் விதத்தில், கீழ்க்கண்ட உத்தரவுகளை இந்த நீதிமன்றம் பிறப்பிக்கிறது.
* அனைத்து பள்ளிகள், கல்லுாரிகள், பல்கலைகள் மற்றும் கல்வி நிறுவனங்களில், வந்தே மாதரம் பாடலை ஒலிபரப்ப வேண்டும்; பாட வேண்டும். வாரத்தில் ஒரு நாளாக, திங்கள் அல்லது வெள்ளியில் இதை மேற்கொள்ள வேண்டும்
* மாதம் ஒரு முறையாவது, அனைத்து அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள், பொது நிறுவனங்கள், தொழிற்சாலைகளில் வந்தே மாதரம் பாடலை பாட வேண்டும்; ஒலிபரப்ப வேண்டும்
* வந்தே மாதரம் பாடலின் தமிழ் மற்றும் ஆங்கில மொழி பெயர்ப்பை, அரசு இணையதளத்திலும், சமூக வலைத்தளங்களிலும் பதிவேற்றம் செய்ய, பொது தகவல் துறை இயக்குனருக்கு உத்தரவிடப்படுகிறது
* இந்த உத்தரவின் நகல், அரசின் தலைமை செயலாளருக்கு அனுப்ப வேண்டும். அவர், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உரிய உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும்
* வந்தே மாதரம் பாடலை பாடுவதில் அல்லது ஒலிபரப்புவதில், யாருக்காவது அல்லது எந்த அமைப்புக்காவது பிரச்னை இருந்தால், அவர்களை கட்டாயப்படுத்தக் கூடாது. ஆனால், அவ்வாறு பாடாமல் இருப்பதற்கு உகந்த காரணங்கள் இருக்க வேண்டும்
* இளைய சமுதாயம் தான், நம் நாட்டின் எதிர்காலம். நீதிமன்றத்தின் இந்த உத்தரவை, சரியான உணர்வுடன், பின்பற்றுவர் என நம்புகிறேன்.
இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 22.04.2024