Thursday, July 27, 2017

என்ஜினீயரிங் கல்லூரிகளில் புதிய பாடத்திட்டம் அமல் இனி ‘அரியர்ஸ்’ என்பதே கிடையாது

என்ஜினீயரிங் கல்லூரிகளில் இந்த கல்வி ஆண்டில் புதிய பாடத்திட்டம் அமல்படுத்தப்படுகிறது.

ஜூலை 27, 2017, 05:15 AM

சென்னை,

என்ஜினீயரிங் கல்லூரிகளில் இந்த கல்வி ஆண்டில் புதிய பாடத்திட்டம் அமல்படுத்தப்படுகிறது. மாணவர்கள் எடுத்த துறை தவிர, வேறு துறைகளில் உள்ள 2 விருப்ப பாடங்களை தேர்வு செய்து படிக்க வேண்டும். மேலும் ‘அரியர்ஸ்’ இல்லாத புதிய தேர்வு முறை கொண்டு வரப்படுகிறது.

தமிழ்நாட்டில் அண்ணா பல்கலைக்கழக கல்லூரிகளில் 4 ஆண்டுக்கு ஒரு முறை பாடத்திட்டம் மாற்றப்பட வேண்டும். 2013-ம் ஆண்டு பாடத்திட்டம் மாற்றப்பட்டது. இதையடுத்து இந்த கல்வி ஆண்டில் புதிய பாடத்திட்டம் அமல்படுத்தப்படுகிறது.

இது குறித்து ஆலோசனை நடத்த சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் கல்விக்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. உயர் கல்வித்துறை முதன்மை செயலாளர் சுனில் பாலிபால், தமிழ்நாடு தொழில்நுட்பக்குழு ஆணையர் ராஜேந்திர ரத்னு, அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் கணேசன், கிண்டி என்ஜினீயரிங் கல்லூரி டீன் டி.வி.கீதா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டம் முடிந்ததும் கல்விக்குழு டீன் டி.வி.கீதா நிருபர்களிடம் கூறியதாவது:-

சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள 3 கல்லூரிகளிலும், குரோம்பேட்டையில் உள்ள எம்.ஐ.டி. கல்லூரியிலும் பாடத்திட்டம் மாற்றப்பட்டு நடைமுறையில் இருந்து வருகிறது. அதேபோல் ஒரு துறையை தேர்ந்து எடுத்து படிக்கும் போது அவர் வேறு ஒரு துறையில் கண்டிப்பாக அவரது விருப்பப்படி 2 பாடங்களை தேர்ந்து எடுத்து படிக்க வேண்டும். இந்த முறை ஏற்கனவே இந்த 4 கல்லூரிகளிலும் அமலில் உள்ளது.
ந்த கல்வி ஆண்டில் தமிழகத்தில் உள்ள 518 என்ஜினீயரிங் கல்லூரிகளிலும் புதிய பாடத்திட்டம் அமல்படுத்தப்படுகிறது. புதிய பாடத்திட்டத்தில் வேலைவாய்ப்புக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் தொழிற்சாலைகளில் பயிற்சி, கம்ப்யூட்டர் அறிவு ஆகியவையும் இடம் பெற்றுள்ளது.

புதிய பாடத்திட்டத்தின்படி ஒரு துறையை தேர்ந்து எடுத்து படிக்கும் மாணவர்கள் மற்றொரு துறையில் குறைந்தது 2 விருப்ப பாடங்களையாவது படிக்க வேண்டும். இது விருப்பத்தின் அடிப்படையில் படிக்கும் முறை என்று அழைக்கப்படுகிறது.

உதாரணமாக மெக்கானிக்கல் பிரிவை எடுத்து படிக்கும் மாணவர், மெக்கானிக்கல் பிரிவில் உள்ள 2 பாடங்களுக்கு பதிலாக கணினி அறிவியல் பாடத்தில் ஏதாவது இரு பாடங்களை எடுத்து படிக்க வேண்டும். இது கட்டாயம். பி.இ. படிக்கும் போது 3-வது ஆண்டு கடைசியில் மாணவர்கள் 8.5 கிரேடு மதிப்பெண்கள் எடுத்திருந்து, அவர்கள் கடைசி ஆண்டு படிக்க முடியாவிட்டால் 5-வது ஆண்டு கல்லூரிக்கு வந்து 4-வது வருட படிப்பை தொடரலாம்.

இனி ‘அரியர்ஸ்’ என்ற பேச்சுக்கே இடம் இல்லை. ஒரு மாணவர் பி.இ. முதல் பருவ தேர்வில் ஒரு பாடத்தில் தேர்ச்சி பெறவில்லை என்றால் அவருடைய ‘இன்டர்னல்’ மதிப்பெண் ரத்து ஆகிவிடும். அவர் மீண்டும் 3-வது பருவ தேர்வில் தேர்ச்சி பெறாத முதல் பருவத்திற்கான ‘இன்டர்னல்’ தேர்வை எழுத வேண்டும். பிறகு அவர் பருவ தேர்வை எழுத வேண்டும். அவர் விரும்பினால் தேர்ச்சி பெறாத பாடத்திற்கு உரிய வகுப்பில் உட்கார்ந்து கேட்கலாம்.

தேர்ச்சி பெறாத பாடத்திற்கு உரிய ‘இன்டர்னல்’, பருவ தேர்வை 7 ஆண்டுக்குள் எழுதலாம். இதனால் ‘அரியர்ஸ்’ என்ற வார்த்தை ஒழிக்கப்படுகிறது.

தற்போது சிறிய அளவில் கிரேடு முறையில் மாற்றம் கொண்டு வரப்படுகிறது.

‘0’ என்றால் மிகச்சிறப்பு. 10 கிரேடு புள்ளிகள். மதிப்பெண்கள் 91 முதல் 100 வரை.

‘ஏ+’ என்றால் சிறப்பு. 9 கிரேடு புள்ளிகள். மதிப்பெண்கள் 81 முதல் 90 வரை.

‘ஏ’ என்றால் மிகவும் நல்லது. 8 கிரேடு புள்ளிகள். மதிப்பெண்கள் 71 முதல் 80 வரை.

‘பி+’ என்றால் நல்லது. 7 கிரேடு புள்ளிகள். மதிப்பெண்கள் 61 முதல் 70 வரை.

‘பி’ என்றால் சராசரி நிலை. 6 கிரேடு புள்ளிகள். மதிப்பெண்கள் 50 முதல் 60 வரை.

50 மதிப்பெண்களுக்கு கீழே உள்ளவர்கள் மீண்டும் தேர்வு எழுத வேண்டும்.

இவ்வாறு டி.வி.கீதா தெரிவித்தார்.

பேட்டியின் போது கல்விக்குழு துணை இயக்குனர் ஜி.கீதா உடன் இருந்தார்.

No comments:

Post a Comment

NEWS TODAY 25.12.2024