Friday, July 28, 2017

காற்றாடும் ஸ்டேஷன்களில் உள்ள ரயில்வே பிளாட்பாரத்தில் திருமணம், ரிசப்ஷன்: வருவாயை அதிகரிக்க குவியும் யோசனைகள்

2017-07-26@ 00:53:19


புதுடெல்லி : ரயில்வே பிளாட்பாரங்களை திருமணம், ரிசப்ஷன் போன்றவற்றுக்கு வாடகைக்கு விட்டு வருவாய் ஈட்டலாம் என ரயில்வேக்கு யோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது. ரயில்வே துறை நஷ்டத்தில் இயங்கி வருவதாக, ரயில்வே அமைச்சகம் கூறி வருகிறது. ரயில்வே அமைச்சரும், ரயில்வேயை நஷ்டத்தில் இருந்து மீட்க வேண்டும், தனியார் முதலீட்டுடன் வசதிகளை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி வருகிறார். டிக்கெட் கட்டணம் தவிர பிற வழிகளில் வருவாய் ஈட்ட இந்த துறை முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், ரயில் நிலையங்களை பயன்படுத்தி வருவாய் ஈட்டும் யோசனைகளை பொதுமக்கள், சில அமைப்புகள் தெரிவித்து வருகின்றன.

சிலர் ரயில் நிலைய பிளாட்பாரங்களில் திருமணம், ரிசப்ஷன் நடத்தலாம் எனவும் யோசனை கூறி வருகின்றனர். இதுகுறித்து ரயில்வே அதிகாரி ஒருவர் கூறியதாவது: ரயில்வே துறையின் சில மண்டலங்கள் மற்றும் கோட்டங்களை அணுகி, அதிக ரயில் போக்குவரத்து அற்ற  ரயில்வே பிளாட்பாரங்களில் திருமணம், ரிசப்ஷன் போன்றவை நடத்த அனுமதி கிடைக்குமா என கேட்டு வருகின்றனர். புதுமையான முறையாக இது இருப்பதோடு, ரயில்வேக்கும் வருவாய் கிடைக்கும் என கூறுகின்றனர். குறிப்பாக, திருமண கான்டிராக்டர்கள் சிலர் இவ்வாறு தெரிவித்துள்ளனர். பொதுமக்களிடம் இருந்து சில யோசனைகள் வந்துள்ளன.

இந்த யோசனைகளை ரயில்வே பரிசீலனை செய்து வருகிறது. இது செயல்படுத்துவதாக இருந்தால், ஒப்பந்த முறையில் பணிகள் ஒப்படைக்கப்படும். அதாவது ஒப்பந்தப்புள்ளி வெளியிட்டு வெளிப்படையான முறையில் ஏலம் நடைபெறும். குறைந்தது ஐந்து ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் விடப்படும். ரயில் நிலையம் உள்ள பகுதி, அங்கு வருவாய் ஈட்டுவதற்கான அதிகபட்ச வாய்ப்புகள் ஆகியவற்றை பொறுத்து ஏல தொகை முடிவு செய்யப்படும். டிக்கெட் கட்டணம் அல்லாத பிற வழிகளில் வருவாய் ஈட்ட அதற்கான குழு ஆராய்ந்து வருகிறது. இந்த யோசனைகளும் அக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. குறுகிய கால அடிப்படையிலான ஒப்பந்தங்களும் விட திட்டமிடப்பட்டுள்ளன.

இதுபோன்ற புதுமையான யோசனைகளை மக்கள் தெரிவித்தால், சாத்தியக்கூறு அடிப்படையில் அவை பரிசீலனை செய்யப்படும்  என ரயில்வே அதிகாரி தெரிவித்தார். இந்திய ரயில்வேயின் கட்டணம் அல்லாத வருவாயாக கடந்த 2016-17 நிதியாண்டில் ரூ.10,181 கோடி வசூலாகியுள்ளது. அதற்கு முந்தைய ஆண்டு இது ரூ.5,928 கோடி. அதாவது 72 சதவீதம் அதிகரித்துள்ளது. அடுத்த 10 ஆண்டுகளில் கட்டணம் அல்லாத பிற வழிகளில் கூடுதல் வருவாயாக ரூ.34,350 கோடி ஈட்ட ரயில்வே திட்டமிட்டுள்ளது. இதில் விளம்பரம், ஆப்ஸ் மூலம் வாடகை கார் புக்கிங், பார்க்கிங் வசதி, ஏடிஎம் வசதி போன்றவை மூலம் கிடைக்கும் வருவாயும் அடங்கும்.

No comments:

Post a Comment

NEWS TODAY 22.04.2024