Sunday, November 15, 2015

தண்ணீரில் மிதக்கும் சென்னை நகரம்: இடி-மின்னலுடன் விடிய, விடிய கொட்டித்தீர்த்த கனமழை மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

logo




சென்னை,

சென்னையில் இடி-மின்னலுடன் விடிய, விடிய பெய்த கனமழை காரணமாக நகரின் பெரும்பாலான பகுதிகள் தண்ணீரில் மிதக்கிறது. மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

விடிய, விடிய மழை

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த மாதம் 28-ந் தேதி தொடங்கியது. வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக கடந்த 8, 9-ந் தேதிகளில் இடைவிடாமல் கனமழை பெய்தது. காற்றழுத்த தாழ்வுநிலை, காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறியதன் காரணமாக சென்னையில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று காலை வரை இடி, மின்னலுடன் அடைமழை கொட்டித்தீர்த்தது.

இதனால் பெரும்பாலான சாலைகளிலும் மழை நீர் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது. எங்கு பார்த்தாலும் மழை நீர் தேங்கி குளம்போல் காட்சி அளித்தது. தாழ்வான இடங்களில் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்குள் மழை நீர் புகுந்தது. இரவில் மழை பெய்தாலும், நேற்று பகலிலும் அந்த மழை நீர் வடிவதற்கு வழியின்றி சாலைகளில் பெருக்கெடுத்து ஓடியது.

வீடுகளுக்குள் வெள்ளம்

எழும்பூர், புரசைவாக்கம், கீழ்ப்பாக்கம், அண்ணாநகர், திருமங்கலம், முகப்பேர், வேப்பேரி, கோயம்பேடு, சேத்துப்பட்டு, வியாசர்பாடி, கிண்டி, சிந்தாதிரிப்பேட்டை, ராயப்பேட்டை, தியாகராயநகர், கோடம்பாக்கம், அயனாவரம், பெரம்பூர், கொளத்தூர், பாண்டி பஜார், மயிலாப்பூர், வண்ணாரப்பேட்டை, பென்சில் பேக்டரி, வால்டாக்ஸ் சாலை உள்பட பல்வேறு இடங்களிலும் சாலைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது.

புழல் வள்ளுவர் நகர் பகுதியில் 200-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது. அண்ணா நகர் ‘கோல்டன் ஜூப்ளி’ அடுக்குமாடி குடியிருப்பில் தரைதள வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது.

சுரங்கப்பாதைகள் மூழ்கின

ஓட்டேரி பிரிக்ளின் சாலை, ஜமாலியா, வியாசர்பாடி பிரதான சாலை உள்பட பல்வேறு இடங்களில் சாலையில் மழை நீர் முழங்கால் அளவுக்கு தேங்கியிருந்தது. பெரம்பூர் சுரங்கப்பாதை, ஜீவா ரெயில்வே சுரங்கப்பாதை, பேசின்பிரிட்ஜ், சேத்துப்பட்டு சுரங்கப்பாதை, நுங்கம்பாக்கம் சுரங்கப்பாதை உள்ளிட்ட பல்வேறு சுரங்கப்பாதைகளில் மழை நீர் தேங்கியதால் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டது.

சைதாப்பேட்டையில் அடையாறு ஆற்றங்கரையோரம் உள்ள குடிசை பகுதிகளுக்குள் வெள்ளம் புகுந்தது. இதனால் அப்பகுதியை சேர்ந்தவர்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டனர்.

சாலை மறியல்

புரசைவாக்கம் திடீர் நகர், அம்பத்தூர் பகுதிகளிலும் குடியிருப்பு பகுதிகளுக்குள் மழை நீர் புகுந்து இயல்பு வாழ்க்கையில் பாதிப்பு ஏற்பட்டது. கீழ்ப்பாக்கத்தில் உள்ள சட்டக்கல்லூரி மாணவர்கள் விடுதி வளாகத்திலும் மழை நீர் தேங்கியுள்ளது. இதனால் விடுதி வளாகத்தின் உள்ளே செல்ல மாணவர்கள் திண்டாடினார்கள்.

திருமங்கலம் பாடிகுப்பம் சாலையில் உள்ள அன்னை அடுக்ககம், ‘பைவ் ஸ்டார் குடியிருப்பு’ மற்றும் அந்த பகுதியில் உள்ள குடியிருப்புகளில் தரை தளத்தில் மழை நீருடன் கழிவு நீரும் கலந்து உள்ளே புகுந்தது. இதையடுத்து அந்த பகுதி மக்கள் பாடிகுப்பம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் 30 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று மாநகராட்சி தரப்பில் கூறியதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.

மின்வினியோகம் பாதிப்பு

தாழ்வான பகுதிகளில் தேங்கிய மழை நீரை மாநகராட்சி ஊழியர்கள் உறிஞ்சும் எந்திரங்கள், மின் மோட்டார்கள் மூலமாக போர்க்கால அடிப்படையில் அகற்றும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். வள்ளுவர் கோட்டம் நெடுஞ்சாலை, மயிலாப்பூர் உள்பட பல்வேறு இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்தன. அவைகளை மாநகராட்சி ஊழியர்கள் அகற்றினர்.

வெள்ளத்தில் மிதக்கும் பல்வேறு இடங்களில் பாதுகாப்பு கருதி மின்சார வினியோகமும் துண்டிக்கப்பட்டது. இது பொதுமக்களுக்கு மேலும் சிரமத்தை ஏற்படுத்தியது.

அமைச்சர்கள்-மேயர் ஆய்வு

முதல்-அமைச்சர் ஜெயலலிதா உத்தரவின் பேரில் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, பா.வளர்மதி, எஸ்.கோகுலஇந்திரா, சென்னை மாநகராட்சி மேயர் சைதை துரைசாமி ஆகியோர் சென்னையில் மழையினால் பாதிக்கப்பட்ட தியாகராயநகர் ஜி.என்.செட்டி சாலை, வடக்கு போக் சாலை, கோபாலபுரம், சாந்தோம் பிரதான சாலை, எழும்பூர் கெங்குரெட்டி சுரங்கப்பாதை, புரசைவாக்கம், சிந்தாதிரிப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை பார்வையிட்டனர்.

அப்பகுதிகளில் நடைபெற்று வரும் நிவாரண பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தினர். சமூகநல கூடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு அமைச்சர்கள் மற்றும் மேயர் சைதை துரைசாமி ஆகியோர் உணவு பொட்டலங்களை வழங்கினர்.

ஆட்டோக்களில் அதிக கட்டணம்

மழை நீர் தேங்கியதால் பஸ் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. ஆட்டோக்களில் வழக்கத்தைவிட அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட பல இடங்களுக்கு ஆட்டோ டிரைவர்கள் செல்ல மறுத்தனர். கால்-டாக்சிகளுக்கும் நேற்று கடுமையான கிராக்கி நிலவியது. பெரும்பாலானவர்கள் நேற்று வீட்டை விட்டு வெளியே வராததால் பல அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டது.

தண்ணீர் தேங்கியதால் ஜீவா மேம்பாலத்தில் ஒரு புறத்தில் இருந்து இன்னொரு புறம் மோட்டார் சைக்கிள்களை மூன்று சக்கர சைக்கிளில் ஏற்றிச்செல்ல ரூ.50 பணம் வசூலிக்கப்பட்டது.

ஸ்தம்பித்த சென்னை

வடசென்னை பகுதியை சேர்ந்தவர்கள் நகரின் பல பகுதிகளுக்கு செல்லும் வழியெங்கும் மழை வெள்ளம், சாலைகள் போக்குவரத்துக்கு தடை என ஒவ்வொன்றையும் கடந்துசெல்வதில் பெரிதும் சிரமப்பட்டனர். விடிய, விடிய பெய்த கனமழை சென்னையை மிதக்கவிட்டு, ஸ்தம்பிக்க வைத்துவிட்டது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024