Thursday, November 19, 2015

இல்லாதோருக்கே இலவசமும், மானியமும்...

Dinamani


By மணவை எஸ்.கார்த்திக்

First Published : 19 November 2015 01:37 AM IST


ஆண்டு வருமானம் ரூ.10 லட்சத்துக்கு மேல் உள்ளவர்களுக்கு எரிவாயு மானியத்தை ரத்து செய்ய மத்திய அரசு முடிவு செய்திருப்பதாக நாடாளுமன்ற விவகாரத் துறை, நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு கூறியுள்ளார். இதற்கு அரசியல் கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரிடமிருந்து எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. எனினும், மத்திய அரசின் இந்த முடிவு வரவேற்கத்தக்க விஷயமே.
அந்தக் காலத்தில் பெரும்பாலானோர் விவசாயிகளாகவும், விவசாயத் தொழிலாளர்களாகவுமே இருந்தனர். இதனால், அவர்களுக்கு பணம் என்பது மிகப் பெரிய விஷயமாக இருந்தது. அந்தக் காலத்தில் மிதிவண்டி வைத்திருந்தாலே அவர்கள் மிகப் பெரிய பணக்காரர்களாகக் கருதப்பட்டனர்.
எனவே, நலிவடைந்த மக்கள் பயனடைய வேண்டும் என்ற நல்ல நோக்கத்தில் மத்திய, மாநில அரசுகள் அரிசி, மண்ணெண்ணெய் உள்ளிட்ட குடிமைப் பொருள்களை மானிய விலையில் வழங்கி வருகின்றன.
காலப்போக்கில் எரிவாயு பயன்பாட்டுக்கு வந்தபோது, அதையும் மத்திய அரசு மானிய விலையில் வழங்கியது. கச்சா எண்ணெய் விலை நிர்ணயம் தனியார் வசம் இருந்தாலும், டீசல், பெட்ரோல், எரிவாயு போன்றவற்றின் மானியத்தை மத்திய அரசே தீர்மானித்து வருகிறது.
அந்த வகையில், சமையல் எரிவாயுவுக்கு மத்திய அரசு மானியம் வழங்கி வருகிறது. இதனால், மத்திய அரசுக்கு ஏற்படும் கூடுதல் சுமையைக் குறைப்பதற்காக இந்த மானியத்தைத் தானாக முன்வந்து விட்டுக் கொடுக்கும்படி மத்திய அரசு பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்தது.
அதன்படி, இந்தியா முழுவதும் இதுவரை சுமார் 42 லட்சம் பேர் எரிவாயு மானியத்தை விட்டுக் கொடுத்துள்ளனர். ஆனால், வசதி படைத்த பலரும் எரிவாயு மானியத்தை விட்டுக் கொடுக்க முன்வரவில்லை.
இதையடுத்து சொந்த வீடு, கார், இரு சக்கர வாகனங்கள் வைத்திருக்கும் நபர்களின் எரிவாயு மானியத்தை ரத்து செய்ய மத்திய அரசு முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில், ஆந்திரம் - தெலங்கானா வர்த்தகக் கூட்டமைப்பு சார்பில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்ட வெங்கய்ய நாயுடு பேசுகையில், ஆண்டுக்கு ரூ.10 லட்சத்துக்கு மேல் வருமானம் உள்ளவர்களின் எரிவாயு மானியத்தை ரத்து செய்ய மத்திய அரசு முடிவு செய்திருப்பதாக உறுதிபடத் தெரிவித்தார். மேலும், வசதிபடைத்தவர்களுக்கு எதற்காக மானியம் வழங்க வேண்டும் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
அதாவது, இலவசங்களாகட்டும், மானியங்களாகட்டும் அவை நலிவடைந்த மக்கள் பயனடைய வேண்டும் என்ற நல்ல நோக்கத்தில் கொண்டு வரப்பட்ட திட்டமாகும். ஆனால், இவற்றை வசதி படைத்த பலரும் அனுபவித்து வருகின்றனர் என்பதுதான் உண்மை.
அதாவது, "அரசு சும்மா கொடுப்பதை நாம் ஏன் இழக்க வேண்டும்' என்ற எண்ணம் மக்களிடம் நிலவுவதே இதற்குக் காரணம். அதேசமயம், இதனால் அரசுக்கு பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் இழப்பு ஏற்படுகிறது என்பதையும், இது வேறுவகையில் பொதுமக்களையே பாதிக்கிறது என்பதையும் யாருமே சிந்திப்பதில்லை.
இதுபோன்ற இலவசங்கள், மானியங்களால் மத்திய, மாநில அரசுகளுக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் பட்ஜெட்டில் இடிக்கும். இதை ஈடுகட்ட பல்வேறு பொருள்களின் மீதான வரிகளை அரசுகள் உயர்த்தும். விளைவு... அந்தப் பொருள்களின் விலை உயர்ந்து, அது பொதுமக்களின் தலையில்தான் விடியும்.
அதுமட்டுமல்லாமல், அந்த இலவசங்களுக்குச் செலவிடும் தொகையை அரசுகள், சாலை, குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட மக்களின் பல்வேறு அடிப்படை வசதிகளை நிறைவேற்றுவதற்குப் பயன்படுத்தும் நல்ல நோக்கமும் தடைபடுகிறது.
தமிழகத்தை எடுத்துக் கொண்டால் 2011-ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள்தொகை 7.20 கோடி. இதில், வறுமைக் கோட்டுக்குக் கீழ் 82.63 லட்சம் பேர் இருப்பதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. இந்த அடிப்படையில் மத்திய, மாநில அரசுகள் வழங்கும் இலவசங்களையும், மானியங்களையும் பெறத் தகுதியுடைவர்கள் இவர்கள் மட்டுமே.
ஆனால், இதையும் மீறி மொத்த மக்கள் தொகையில் பாதிக்கும் மேற்பட்டோர் இலவசங்களையும், மானியங்களையும் பெற்று வருகின்றனர்.
கிராமப் புறங்களில்கூட இரு சக்கர வாகனங்கள் இல்லாத நபர்கள் யாரும் இல்லை என்ற நிலையே உள்ளது. அவர்கள் நாள்தோறும் பெட்ரோலுக்கு என குறைந்தது ரூ.50-ஐ செலவிடுகின்றனர். அதன்படி பார்த்தால், மாதத்துக்கு ரூ.1,500 செலவாகிறது. ஆனால், மாதத்துக்கு ஒரு எரிவாயு உருளைக்கு இவர்களுக்குக் கிடைக்கும் மானியம் ரூ.200 மட்டுமே.
அனாவசியமாக ரூ.1,500 செலவிடும் ஒரு நபர், அத்தியாவசியத் தேவைக்காக ரூ.200 ஏன் செலவிடக் கூடாது என்ற கேள்வியே எஞ்சி நிற்கிறது. ஆகவே, ஆண்டு வருமானம் ரூ.10 லட்சம் என்பதே அதிகம்தான்.
அதேபோல், மாநில அரசு வழங்கிவரும் இலவசங்களையும் ஏழை, எளிய மக்கள், அதாவது, குறைவாக சம்பாதிக்கும் மக்களுக்கு மட்டுமே வழங்க வேண்டும்.
இதனால், அரசுகளுக்கு செலவினங்கள் குறைவதோடு, உண்மையான பயனாளிக்கு அரசின் திட்டங்கள் போய்ச் சேரும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024