Monday, November 9, 2015

இனிமேல்தான் தலைவலியே...!

Dinamani


By ஆசிரியர்

First Published : 09 November 2015 01:03 AM IST


தில்லியைத் தொடர்ந்து பிகார் சட்டப்பேரவைத் தேர்தலிலும் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி மிகப் பெரிய தோல்வியைச் சந்தித்திருக்கிறது. எதிர்பார்த்தது போலவே, பிகாரில் அரிச்சுவடி வாக்கு வங்கிக் கணக்கு மிகப் பெரிய வெற்றியை அடைந்திருக்கிறது.
கடந்த மக்களவைத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி பிகாரில் வரலாறு காணாத வெற்றி அடைந்ததற்கு, முதல்வர் நிதீஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளமும், லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரீய ஜனதா தளமும் தனித்தனியாகப் போட்டியிட்டதுதான் காரணம். அதற்கு முன்பும்கூட, பா.ஜ.க.வுடன் ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டதால்தான் கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் முதல்வர் நிதீஷ் குமார் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க முடிந்தது. கூட்டணி பலத்தின் வெற்றி பிகாரில் மறுபடியும் உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது.
பா.ஜ.க.வையும், பிரதமர் நரேந்திர மோடியையும் பொருத்தவரை, பிகார் சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் மிகப்பெரிய பின்னடைவு என்பதில் சந்தேகமே இல்லை. பிகாரில் வெற்றி பெறுவதை ஒரு கெüரவப் பிரச்னையாகவே எடுத்துக் கொண்டு பிரதமர் மோடி பிரசாரத்தில் இறங்கியபோது, இதை விபரீத முயற்சி என்று விமர்சித்தவர்களின் எச்சரிக்கைகள் உண்மையாகி இருக்கின்றன. ஏற்கெனவே அத்தனை எதிர்க்கட்சிகளும் நரேந்திர மோடி அரசை நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் செயல்படாமல் தடுப்பதில் வரிந்து கட்டிக் கொண்டு நிற்கும் நிலையில், பிகார் சட்டப்பேரவைத் தேர்தல் பின்னடைவு மத்தியில் ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு மேலும் பிரச்னைகளையும், தலைவலிகளையும் அதிகரிக்கக்கூடும். அதுமட்டுமல்ல, மத்திய அரசு எந்தவித வளர்ச்சிப் பணிகளையும் மேற்கொள்ள முடியாமல் தடுக்கப்படும் சூழல்கூட ஏற்படலாம்.
பிகார் தேர்தல் முடிவுகள் பா.ஜ.க.வுக்கு ஒரு மிக முக்கியமான பாடத்தைக் கற்றுக் கொடுத்திருக்கிறது. காங்கிரஸ் கட்சி செய்த அதே தவறை பா.ஜ.க.வும் செய்ததால் வந்த விளைவுதான் இந்தத் தோல்வி என்பதை பா.ஜ.க. தலைமை புரிந்து கொள்ள வேண்டும். இந்திரா காந்தி காலத்திலிருந்து காங்கிரஸ் கட்சி எப்படி பலமான மாநிலத் தலைமை வளராமல் பார்த்துக் கொண்டதோ, அதே பாணியை பா.ஜ.க.வும் கையாள முற்பட்டதன் விளைவுதான் இந்தத் தோல்விக்கு ஒரு முக்கியமான காரணம்.
கடந்த 15 ஆண்டுகளில் பா.ஜ.க.வின் வளர்ச்சிக்கு மிக முக்கியமான காரணம் நிதின் கட்கரி (மகாராஷ்டிரம்), நரேந்திர மோடி (குஜராத்), வசுந்தரா ராஜே சிந்தியா (ராஜஸ்தான்), சிவராஜ் சிங் செüஹான் (மத்தியப் பிரதேசம்), ரமண் சிங் (சத்தீஸ்கர்), ஹர்ஷவர்தன் (தில்லி), எடியூரப்பா (கர்நாடகம்), சுசில்குமார் மோடி (பிகார்) உள்ளிட்ட பல மாநிலத் தலைவர்களின் வளர்ச்சி. நரேந்திர மோடி பிரதமரானது முதல், அவர்கள் பின்னுக்குத் தள்ளப்பட்டு மத்தியத் தலைமை முன்னிலைப்படுத்தப்படுவதுதான் பா.ஜ.க.வின் மிகப்பெரிய பலவீனம் என்பதை தில்லியும், பிகாரும் உணர்த்தி இருக்கின்றன.
ஐக்கிய ஜனதா தளம் - ராஷ்ட்ரீய ஜனதா தளம் - காங்கிரஸ் கூட்டணி மிகப்பெரிய வெற்றி அடைந்திருக்கிறது என்கிற அளவில், தாற்காலிகமாக மகிழ்ச்சி அடையலாமே தவிர, முன் எப்போதும் இல்லாத அளவுக்குப் பிரச்னைகளை முதல்வர் நிதீஷ் குமார் எதிர்கொள்ளப் போகிறார் என்பதுதான் யதார்த்த உண்மை. 2005-இல் இருந்து பத்து ஆண்டுகள் பா.ஜ.க.வுடன் கூட்டணி ஆட்சி நடத்தியபோது, அந்தக் கூட்டணியில் அதிக இடங்களைக் கொண்டிருந்தது நிதீஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம்தான். இப்போது நிலைமை அதுவல்ல. கூட்டணியில் அதிக இடங்களைப் பெற்றிருப்பது லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரீய ஜனதா தளம். கடந்த 10 ஆண்டுகளாகப் பதவி சுகத்திலிருந்தும், அதிகாரத்திலிருந்தும் அகற்றி நிறுத்தப்பட்டிருந்த லாலு பிரசாத் யாதவின் கட்சியினர் தங்களுக்கு மீண்டும் கிடைத்திருக்கும் வாய்ப்பை முழுமையாகப் பயன்படுத்தி கொள்ளவே விரும்புவார்கள்.
அமைச்சரவை அமைப்பதிலிருந்து முதல்வர் நிதீஷ் குமாருக்குப் பிரச்னைகள் தொடங்கிவிடும். அதிகாரிகள், அரசு ஊழியர்கள் இடமாற்றத்தில் தொடங்கி அரசின் எல்லா வளர்ச்சிப் பணிகளிலும் பங்கு கேட்பது வரை, லாலு பிரசாத் யாதவ் கட்சியினரின் கோரிக்கைகளுக்குத் தலைவணங்காமல் முதல்வர் நிதீஷ் குமாரால் பதவியில் தொடர முடியாது. முன்பு, சுசில்குமார் மோடி தலைமையிலான பா.ஜ.க.வினர்போல ராஷ்ட்ரீய ஜனதா தளத்தினர் நிதீஷ் குமாரின் கட்டுப்பாட்டில் இருக்கப் போவதில்லை.
பா.ஜ.க. கூட்டணியிலிருந்து விலகியபோது லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரீய ஜனதா தளத்துடன் கைகோத்துக் கொள்ள முதல்வர் நிதீஷ் குமாரால் முடிந்தது. ஆனால், இந்தக் கூட்டணியிலிருந்து விலகினால், 2014 மக்களவைத் தேர்தல் முடிவைத்தான் சந்தித்தாக வேண்டும் என்பது அவருக்குத் தெரியும். லாலு பிரசாத் யாதவும் சரி, நிதீஷ் குமாரை முதல்வராகத் தொடரவைத்துத் தனது கட்சியை பலப்படுத்திக் கொள்வதில்தான் முனைப்பாக இருப்பார் என்பதையும மறந்துவிடக் கூடாது.
பா.ஜ.க. கூட்டணியில் இருந்தபோதும் சரி, இப்போதும் சரி நிதீஷ் குமார் தலைமையில் பிகார் எதிர்க்கட்சி மாநிலமாகத்தான் தொடரப் போகிறது. இந்த நிலையில் முதல்வர் நிதீஷ் குமாருக்கு எந்த அளவுக்கு மத்திய அரசின் ஒத்துழைப்பும், நிதியுதவியும் கிடைக்கும், வளர்ச்சிப் பணிகளை முடுக்கிவிட முடியும், நல்ல நிர்வாகத்தைத் தந்துவிட முடியும் என்பது மிகப் பெரிய கேள்விக்குறி.
பிகார் சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி அடைந்திருப்பது லாலு பிரசாத் யாதவ்; பிரச்னைகளை சந்திக்கப் போவது பிரதமர் மோடியும், முதல்வர் நிதீஷ் குமாரும்!

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024