அலகாபாத்,
தாய் கற்பழிக்கப்பட்டதால், பிறந்த குழந்தைக்கு குற்றவாளியின் சொத்தில் உரிமை உண்டு என்று அலகாபாத் ஐகோர்ட்டு ஒரு வழக்கில் பரபரப்பு தீர்ப்பு வழங்கி உள்ளது.
ஐகோர்ட்டில் வழக்கு
உத்தரபிரதேச மாநிலத்தில், தன்னை ஒருவன் கற்பழித்து பிறந்த பெண் குழந்தையின் தலைவிதி, வாரிசு உரிமை தொடர்பாக ஒரு பெண் வழக்கு தொடுத்தார்.
இந்த வழக்கை அலகாபாத் ஐகோர்ட்டின் லக்னோ பிரிவு விசாரித்து தீர்ப்பு வழங்கி உள்ளது.
பொருத்தமற்றது
அந்த தீர்ப்பில் கூறி இருப்பதாவது:–
இந்த வழக்கை பொறுத்தமட்டில், ஒருவர் எந்த விதத்தில் பிறந்தார் என்பது சம்பந்தம் இல்லாதது. ஒருவரின் வாரிசு உரிமைகள் என்பது, தனி நபர் சட்டத்தால் ஆளப்படுகிறது. இதில், வாரிசு உரிமை என்பது, ஒரு நபர் எந்த விதத்தில் பிறந்தார் என்பதைப் பொறுத்தது அல்ல.
புதிதாக பிறந்துள்ள குழந்தை– ஒரு ஆண், ஒரு பெண்ணை கற்பழித்ததின்மூலம் பிறந்ததா அல்லது ஒரு ஆணும், பெண்ணும் கருத்தொருமித்து தாம்பத்தியம் நடத்தி பிறந்ததா அல்லது வேறு விதத்தில் பிறந்ததா என்று ஆராய்வது பொருத்தமற்றது.
முறையற்ற உறவில் பிறந்தது
புதிதாக பிறந்துள்ள ஒரு குழந்தையின் வாரிசு உரிமை என்பது, தனி நபர் சட்டத்தின் மூலம் ஆளப்படும். அந்த வகையில், அந்த குழந்தை, உயிரியல் தந்தையின் முறையற்ற உறவால் பிறந்ததாக கருதப்படவேண்டும்.
உயிரியல் பெற்றோர் வழி வந்த சொத்துகளின் வாரிசு உரிமை என்பது சிக்கலான தனிநபர் சட்ட உரிமை ஆகும். இது சட்டத்தின்படியோ, வழக்கத்தின்படியோ காக்கப்படுகிறது.
சாத்தியம் இல்லை
கற்பழிப்பால் பிறந்த ஒரு மைனர் குழந்தையின் வாரிசு சொத்து உரிமையை பொறுத்தமட்டில், நீதித்துறை விதிமுறைகளை, கொள்கைகளை வகுப்பது என்பது சாத்தியம் இல்லை. கோர்ட்டு அத்தகைய முயற்சியில் இறங்கி, அறிவித்தால் அது சட்டத்திற்கு ஒப்பாகி விடும். அது இனி வரும் காலமெல்லாம் முன் உதாரணமாகி விடும்.
எனவே, இதில் இறங்குவது விரும்பத்தகுந்ததாக இருக்காது. எனவே இந்த சிக்கலான சமூக பிரச்சினையை உரிய சட்டமன்றம், கையாள விட்டு விடுகிறோம்.
உரிமை உண்டு
இந்த வழக்கை பொறுத்தமட்டில் குழந்தையை தத்துகொடுத்து விட்டால், அந்த குழந்தைக்கு தனது உயிரியல் தந்தையின் வாரிசு சொத்தில் உரிமை கிடையாது.
அந்த குழந்தையை யாரும் தத்து எடுக்காத நிலையில், கோர்ட்டு உத்தரவு பிறப்பிக்க தேவையில்லை. அந்த குழந்தைக்கு தனிநபர் சட்டத்தின்படி, தனது உயிரியல் தந்தையின் வாரிசு சொத்துகளில் உரிமை உண்டு.
இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட குழந்தையின் உயிரியல் தந்தை, அதன் தாயை கற்பழித்த குற்றவாளி என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment