By ஆசிரியர்
First Published : 07 November 2015 01:21 AM IST
தங்கத்தின் விற்பனையைக் கட்டுப்படுத்தும் நோக்கத்தில் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்துள்ள மூன்று திட்டங்களும், இதுவரை அவர் தொடங்கி வைத்த திட்டங்களுக்குக் கிடைத்த அதே வரவேற்பைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தங்கப் பத்திரம், தங்க வைப்பு நிதி, அசோக சக்கர முத்திரை பதித்த தங்க நாணயம் ஆகிய மூன்று திட்டங்களிலும், முதல் இரண்டு திட்டங்கள் தங்க விற்பனையைத் தவிர்க்கச் செய்பவை. மூன்றாவது திட்டம் தங்கத்தை வாங்கும்படி செய்பவை. இதில் பெண்கள் எதில் ஆர்வம் காட்டப் போகிறார்கள் என்பது விரைவில் வெளிப்படும்.
அரசு எதிர்பார்க்கும் வரவேற்பை இந்தத் திட்டங்கள் பெறாது என்று சொல்பவர்களும் இருக்கவே செய்கிறார்கள். அவர்கள் சொல்லும் காரணம்: இந்தத் தங்கப் பத்திரம் மற்றும் வைப்புத் தங்கம் இரண்டுக்கும் கிடைக்கும் வட்டியைவிட, வங்கியில் வழக்கமான வைப்பு நிதிக்குக் கிடைக்கும் 8% வட்டி வருவாய் அதிகமாக இருக்கும். ஆகவே, இதில் ஆர்வம் காட்ட மாட்டார்கள்.
இரண்டாவதாக, வைப்புத் தங்கம் திட்டத்தில் கொடுக்கப்படும் தங்கத்துக்கான வட்டி, முதல் அனைத்துக்கும் வருமான வரி கிடையாது என்றாலும், இவ்வளவு தங்கம் ஏது என்ற கேள்விக்கு பதில் சொல்ல முடியாது. அரசைப் பொருத்தவரை, அரை கிலோ கிராம் தங்கம் வரை, எந்தக் கேள்வியும் கேட்கப்படாது என்று உறுதி கூறியிருந்தபோதிலும், மக்களிடம் இயல்பான தயக்கம் இருக்கும். ஆகவே, இத்திட்டங்களுக்கு வரவேற்பு குறைவாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது.
திட்டத்தைத் தொடங்கி வைத்த பிரதமர் மோடி, தனது உரையில் குறிப்பிட்டதைப் போல, இந்தியாவில் 20,000 டன் தங்கம் ஆபரணங்களாக உள்ளன. இவை பயனுறு நிதியாக மாறும் எனில் இந்தியாவுக்கு மிகப்பெரிய அளவில் சுழல்நிதி கிடைக்கும்.
தங்கம் தொடர்ந்து இறக்குமதி செய்யப்படும் நிலைமைதான் உள்ளது. கடந்த அக்டோபர் மாதம் தங்கத்தின் இறக்குமதி வழக்கத்தைவிட 46% குறைந்தது என்று மகிழ்வதற்கு ஏதுமில்லை. ஏனெனில், அதற்கு முந்தைய செப்டம்பர் மாதம் தங்கத்தின் இறக்குமதி கூடுதலாக இருந்தது.
இந்தியாவில் பெட்ரோலியப் பொருள்கள், மின்னணு சாதனங்களுக்கு அடுத்தபடி, மூன்றாவதாக மிகப்பெரிய அளவில் இறக்குமதி செய்யப்படுவது தங்கம் மட்டுமே. இதனால், நடப்பு கணக்குப் பற்றாக்குறையில் மிகப்பெரும் இடைவெளியை தங்கம் உண்டாக்குகிறது. இதன் விளைவு பல்வேறு பொருளாதாரத் திட்டங்களிலும் தொடர் பாதிப்பை ஏற்படுத்துகிறது. ஆகவே, தங்கம் இறக்குமதியைக் கட்டுப்படுத்த மிகப்பெரும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
தங்கம் இறக்குமதி செய்யப்படுவது வெளிப்படையாகக் கட்டுப்படுத்தப்பட்ட போதிலும், கடத்தல் தங்கத்தின் வரத்து மிகமிக அதிகரித்துள்ளதே இதன் எதிர்மறையான பின்விளைவு. விமான நிலையங்களில் அன்றாடம் குறைந்தபட்சம் ஒரு கிலோ தங்கம் சிக்குகிறது. புதுப்புது முறைகளில், பெட்டிகளின் ரகசிய அறைகளிலும், தங்கத்தையே சாதாரண பொருள்கள் போல உருமாற்றியும், சிலர் தங்கமணிகளை சாப்பிட்டு வயிற்றில் சுமந்துகொண்டும் வரும் நிலைமைதான் இருக்கிறது. இறக்குமதி குறைந்ததாக நாம் திருப்தி அடைந்தாலும், கடத்தல் மூலமாக இந்தியாவுக்கு வரும் தங்கத்தின் அளவு முன்பைவிட பல மடங்கு அதிகமாகியுள்ளது என்பதே உண்மை.
இந்த மூன்று திட்டங்களும் வெற்றியடைந்து, உள்நாட்டில் வெளிப்படாமல் பெட்டிக்குள் உறங்கும் தங்கம் வெளியே வருவதற்கு உதவக் கூடியவர்கள் பெண்கள் மட்டுமே. ஆகவே, பெண்கள்தான் இந்தத் திட்டத்தின் வெற்றி, தோல்வியைத் தீர்மானிக்கப் போகிறவர்கள்.
பெண்கள் தங்கள் பொருளாதார வலிமையை உணர்த்தும் அடையாளமாகவே தங்க ஆபரணங்களைக் கருதுகின்றனர். அழகுப் பொருளாக, ஆபரணங்களாகத் தங்கத்தைப் பெண்கள் பயன்படுத்தும் அளவு இத்திட்டத்தால் குறையாது. தங்க நகை விற்பனையும் அளவில் குறையாது. ஆனால், தங்கள் பொருளாதார வலிமையை பிறருக்கு உணர்த்துவதற்குச் சேர்த்து வைத்திருக்கிற தங்கத்தை பாதுகாப்பான இடத்தில் வைக்க இத்திட்டம் வகை செய்யும்.
தங்க நகைகளை, தங்கக் காசுகளை வங்கிகளின் பாதுகாப்புப் பெட்டகத்தில் மக்கள் வைக்கிறார்கள். திருட்டு பயம் கருதி வங்கி பாதுகாப்புப் பெட்டகத்தில் வைக்கும் இவர்களது தங்கம் திருடுபோனால், வங்கி அதற்குப் பொறுப்பேற்காது என்பது எத்தனை பேருக்குத் தெரியும்? காரணம், பாதுகாப்புப் பெட்டகத்தில் எவ்வளவு தங்கம் வைக்கப்பட்டது என்பது வங்கிக்குத் தெரியாது என்பதால் வங்கி அதற்குப் பொறுப்பேற்பதில்லை.
ஆனால், வங்கியில் அடமானம் வைக்கப்பட்ட தங்க நகைகள் திருடுபோனால், அடமானம் வைத்த ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் அவரது ரசீதைப் பெற்றுக்கொண்டு அவர்கள் அடகு வைத்த தங்கத்தின் எடைக்கு, இன்றைய தங்க மதிப்புக்கு ஏற்ப விலை நிர்ணயித்து இழப்பீடு தருகிறார்கள்.
இந்த ஒரு விஷயத்தைக் கவனத்தில் கொண்டால் போதும். வங்கி பாதுகாப்புப் பெட்டகத்தில் உள்ள அனைத்து சேமிப்பு தங்க நகைகளையும் தற்போது அரசு அறிவித்துள்ள வைப்புத் தங்கம் திட்டத்துக்கு மாற்றிவிடுவார்கள். வட்டி குறைவாக இருப்பினும், பாதுகாப்புப் பெட்டகத்தைவிட பாதுகாப்பானது இந்தத் திட்டம்.
தங்கத்தில் அதிக அளவு முதலீடு செய்யப்படுவதற்குப் பெண்களுக்கு நகை மீதான மோகம் மட்டுமே காரணமல்ல. ஊழல் பணம் தங்கமாக பத்திரப்படுத்தப்படுவது, மக்களுக்கு ரூபாய் மதிப்பிலும், வங்கி வைப்பு நிதியிலும், பங்குச் சந்தையிலும் நம்பிக்கை இல்லாதது ஆகியவையும் காரணங்கள். இந்தக் காரணிகள் அகற்றப்பட்டாலே போதும், தங்கத்தின் மீதான நாட்டம் கணிசமாகக் குறைந்துவிடும்!
No comments:
Post a Comment