Wednesday, November 25, 2015

அரசியல் நடத்துவது அழகல்ல!


Dinamani


By ஆசிரியர்

First Published : 24 November 2015 01:17 AM IST


கடந்த இரு வாரங்களாக தமிழகத்தில், குறிப்பாக சென்னை, கடலூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் பெய்துவரும் பலத்த மழை காரணமாக மழைச் சேதங்களை ஈடுசெய்ய வெள்ள நிவாரண நிதியாக மொத்தம் ரூ.8,481 கோடி தேவை என்றும், உடனடியாக ரூ.2,000 கோடி வழங்க வேண்டும் என்றும் தமிழக முதல்வர் ஜெயலலிதா கடிதம் அனுப்பிய அடுத்த சில மணி நேரங்களில், மத்திய அரசு 939.63 கோடியை உடனடியாக விடுவிக்க ஆணை பிறப்பித்துள்ளது.
தமிழகத்தில் ஏற்பட்டுள்ள மழைச் சேதம், உயிர்ச் சேதம் குறித்து பிரதமர் மோடி வருத்தம்கூட தெரிவிக்கவில்லை என்று எதிர்க்கட்சிகள் குறை கூறிக் கொண்டிருக்கும் வேளையில் இத்தகைய உடனடி நடவடிக்கை, ஆறுதலாக அமைந்துள்ளது. இந்த நிவாரணம் முதல் கட்டம்தான். தமிழக முதல்வர் ஏற்கெனவே ரூ.500 கோடியை வெள்ள நிவாரணப் பணிகளுக்காக விடுவித்துள்ளார். தற்போது மத்திய அரசு வழங்கும் நிதியும் கிடைத்துள்ளதால் நிவாரணப் பணிகள் முடுக்கிவிடப்படும். தமிழக முதல்வர் கோரியுள்ள முழு அளவு வெள்ள நிவாரண நிதியை மத்திய அரசு கணிசமாக வழங்கும் என எதிர்பார்க்கலாம்.
நிவாரணப் பணிகள் சரிவர நடைபெறவில்லை என்று எல்லா எதிர்க்கட்சிகளும் அறிக்கை மற்றும் பேட்டிகள் அளித்து வருகின்றன. வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் வசிப்போரை பாதுகாப்பான இடத்துக்கு அழைத்து வருவதும், வீடுகளை இழந்தவர்களுக்கு தாற்காலிக முகாம் அமைத்துத் தருவதும்தான் முதல் கட்டப் பணி. அதனை தமிழக அரசு செய்து வருகிறது. இன்னமும் மழை நீர் வடியவில்லை என்பதை அரசின் மீதும் குற்றச்சாட்டாகச் சொல்ல முடியாது.
சாதாரண சுரங்கப் பாதையில் தேங்கும் நீரைப் போன்று, ஒவ்வொரு புறநகர்ப் பகுதியிலும் தேங்கி நிற்கும் மழைநீரை உடனே வெளியேற்றுவது சாத்தியமல்ல. பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு, குடிநீர், உறைவிடம் ஆகியவற்றைத் தடையற வழங்குவதும், போக்குவரத்துக்கு வழி செய்வதும்தான் இப்போதைக்கு உடனடியாக இயலக்கூடியவை. மின் இணைப்புகளைச் சீர்செய்தல், பாதைகளைச் சரிசெய்தல் எல்லாமும் மழை நின்ற பிறகே மேற்கொள்ள வேண்டிய பணிகள். மழை வெள்ளச் சேதங்களை வைத்து அரசியல் நடத்துவது அழகல்ல.
எந்தவகையான இடர்பாடு என்றாலும் மாநகர் வாழ் மக்கள் முன்னுரிமை பெறுவதும், அதிகப் பயன்களை அள்ளிச் செல்வதும் வழக்கமான ஒன்று. தற்போது சென்னை மாநகரம் கடந்த 100 ஆண்டுகளில் காணாத மழையைக் கண்டுள்ள நிலையில், அதன் ஒவ்வொரு பகுதியினரும், மத்திய - மாநில அரசுகளின் வெள்ள நிவாரண நிதியைத் தங்களுக்கே திருப்பிவிட அழுத்தம் தருவர். பல கோரிக்கைகளை மனதாபிமான அடிப்படையிலும், அரசியல் நெருக்கடி மூலமும் சாதித்துக்கொள்ளவே முனைவர். இருப்பினும், சென்னைக்கு வெளியே ஏற்பட்டுள்ள மழைச் சேதங்களுக்கும் இணையான முன்னுரிமை தரப்பட வேண்டும். குறிப்பாக, கடலூர் மாவட்டத்துக்கு!
கடலூர், விழுப்புரம், காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஏழைகளும், விவசாயிகளும் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்குத் தேவை சாலைகள் அல்ல, உடனடியாக வெள்ளம் வடிய வேண்டும் என்பதும் அல்ல. அவர்களது பயிர்களுக்கும், மீன்பிடி உள்ளிட்ட வாழ்வாதாரங்களுக்கும் ஏற்பட்டுள்ள இழப்பை ஈடுசெய்வதைத்தான் எதிர்பார்த்திருக்கிறார்கள்.
கடலூர் மாவட்டத்தில் 2011}ஆம் ஆண்டு, டிசம்பரில் ஏற்பட்ட தானே புயலின் போது 80,000 ஹெக்டேரில் பயிர்ச் சேதம் ஏற்பட்டது. 2.67 லட்சம் குடிசை வீடுகள் சேதமடைந்தன. ஆயிரக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்தன. மீன்பிடி வலைகளும், படகுகளும் சேதமடைந்ததும், 4,500 மின்மாற்றிகள் சாய்ந்ததும், 46 பேர் இறந்ததும் என அந்த மாவட்ட மக்கள் சந்தித்த இழப்புகள் சொல்லொணாதவை.
அதே மாவட்டத்தில், தற்போது மழை கொட்டித் தீர்த்துள்ளது. மீண்டும் ஏழைகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இடம்பெயர்ந்த ஏழைகளுக்கு மீண்டும் வீடு கட்டவும், பயிர் இழப்பீட்டை தாமதமின்றி மதிப்பீடு செய்யவும் தொழில்கருவிகள் வழங்கவும் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்.
மழைநீர் வடிகால்களையும், கழிவுநீர் வடிகால்களையும் அமைப்பதற்கும், பராமரிப்பதற்கும் அரசு போதிய நிதி ஒதுக்கீடு வழங்காமல் இல்லை. சென்னை மாநகராட்சியின் மழைநீர் வடிகால் துறை, 2012-13இல் ரூ.136.05 கோடி, 2013-14இல் ரூ.215 கோடி, 2014-15இல் ரூ.450 கோடி என்று ஒதுக்கீடு பெற்றிருக்கிறது. மழைநீர் வடிகால் குழாய்கள் வழியாக வடிந்ததெல்லாம் மக்களின் வரிப் பணம்தானே தவிர, தண்ணீர் அல்ல என்பதை வெள்ளம் தேங்கிக் கிடக்கும் சாலைகள் வெளிச்சம் போடுகின்றன.
சென்னை மாநகரைப் பொருத்தவரை, தற்போது மழை நீர் தேங்கியுள்ள பகுதிகளை செயற்கைக்கோள் உதவியுடன் படம் பிடித்து, இந்த நீர் வெளியேறும் பாதைகளை இன்றைய மாறுபட்ட புவிச்சூழலுக்கு ஏற்ப கணிக்கவும், மழைநீர் வடிகால் அமைக்கவும் வேண்டும். இதே அளவுக்கு மழை மீண்டும் பெய்தாலும், வெள்ளம் தேங்காத அளவுக்கு பெரிய வடிகால்கள் அமைப்பதுதான் நிரந்தரத் தீர்வாக இருக்கும்.
தமிழ்நாட்டில், பரவலாக மிகப் பலத்த மழை பெய்திருந்த போதிலும், இப்போதும்கூட நிரம்பாத ஏரிகள் குறித்த செய்திகள் நாளிதழ்களில் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. தமிழ்நாடு முழுவதும் இந்த இரு வார மழையில் நிரம்பாத ஏரிகள் எவை என பொதுப்பணித் துறை மூலம் கணக்கெடுத்து, அதற்கான காரணங்களைக் கண்டறிந்து, நீர்வரத்துப் பாதைகளைச் சீரமைப்பதற்கும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறுகளிலிருந்தாவது பாடம் படிக்க நமது அதிகாரிகள் கற்றுக் கொண்டால் அதுவே பெரிய உபகாரம்!

No comments:

Post a Comment

NEET PG 2024 Exam Pattern REVISED, NMC Issues Official Notice; Here’s All You Need To Know

NEET PG 2024 Exam Pattern REVISED, NMC Issues Official Notice; Here’s All You Need To Know The NEET PG 2024 is scheduled to take place on Ju...