Monday, November 9, 2015

வாழ்த்துகள் நிதிஷ்!

Return to frontpage

இன்னொரு மக்களவைத் தேர்தல் நடந்து முடிந்ததுபோல் இருக்கிறது. அந்த அளவுக்கு மிகப் பெரிய எதிர்பார்ப்பை பிஹார் சட்டப்பேரவைத் தேர்தல் ஏற்படுத்தியிருந்தது. மத்தியில் ஆளும் கட்சியான பாஜக இந்தத் தேர்தலில் காட்டிய அதீதமான ஈடுபாடுதான் காரணம். முக்கியமாக பிரதமர் மோடி. தொடர்ந்து, நாட்டின் மிகப் பெரிய மாநிலமான உத்தரப் பிரதேசத்தில் அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலிலும் இதன் தாக்கம் எதிரொலிக்கும் என்ற சூழலில், மிக முக்கியமான தேர்தலாகிவிட்டது பிஹார் தேர்தல்.

மக்களவைத் தேர்தலுக்குப் பின் விஸ்வரூபம் எடுத்த பாஜகவின் எழுச்சி பிஹாரின் பிரதான அரசியல் எதிரிகளான முதல்வர் நிதிஷ்குமாரையும் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவையும் ஒன்றிணைய வைத்தது. காங்கிரஸும் இதன் பின்னணியில் நின்று அவர்களோடு கை கோத்தது. ஒட்டுமொத்த இந்தியாவும் உன்னிப்பாக எதிர்பார்த்த தேர்தல் முடிவுகள் எல்லாக் கணிப்புகளையும் பின்னுக்குத் தள்ளி, ஐக்கிய ஜனதா தளம், ராஷ்ட்ரிய ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் மகா கூட்டணிக்கு அறுதிப் பெரும்பான்மையைக் கொடுத்திருக்கின்றன.

கூட்டணிக் கணக்குகள், சாதி - இன ஓட்டுக் கணக்குகள், அரசியல் சாதுரியங்கள் எல்லாவற்றையும் தாண்டி நிதிஷ் எனும் நல்லாட்சியாளருக்கு மக்கள் கொடுத்திருக்கும் தொடர் பரிசு என்றுதான் இந்தத் தேர்தல் முடிவைப் பார்க்க வேண்டும். நிதிஷுக்குக் கிடைத்த வெற்றி என்பது ஒருபுறம் இருக்க, பாஜகவுக்குக் கிடைத்த தோல்வி என்றும் சொல்லலாம். மக்களவைத் தேர்தலுக்குப் பின், குறிப்பாக டெல்லி தேர்தல் தோல்விக்குப் பின் பாஜகவின் தேர்தல் வியூகம் மாறியது இங்கே கவனிக்க வேண்டியது. மக்களவைத் தேர்தலின்போது பொருளாதார வளர்ச்சியை முன்னிறுத்தி எல்லாத் தரப்பு மக்களையும் ஈர்த்த பாஜக, ஆட்சிக்கு வந்த பின் மதஅடிப்படைவாதப் பிரச்சினைகளைக் கையில் எடுத்தது. சிறுபான்மையினர், விளிம்புநிலை மக்களின் வாழ்வில் அச்சுறுத்தல்களை உருவாக்கியது. அரசினரும் சங்கப் பரிவாரங்களும் சென்ற இடங்கள் எல்லாம் வெறுப்பூட்டும் பேச்சுகள் உதிர்ந்தன. பொறுப்பற்ற வெறுப்புப் பேச்சுகளுக்கு மூன்று உதாரணங்கள் இவை. “ஒருவேளை பாஜக தோற்றால் பாகிஸ்தானில் பட்டாசு வெடிக்கும்” என்றார் அக்கட்சியின் தலைவர் அமித் ஷா. “இடஒதுக்கீடு மறுபரிசீலனைக்கு உள்ளாக்கப்பட வேண்டும்” என்றார் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத். ஃபரிதாபாதில் இரு தலித் குழந்தைகள் எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாகக் கருத்து தெரிவித்த மத்திய அமைச்சர் வி.கே. சிங், “எங்கோ நாய்கள் மீது சிலர் கல்லெறிகிறார்கள் என்பதற்கெல்லாம் மத்திய அரசு பொறுப்பாக முடியுமா?” என்றார். கூடவே, தேர்தல் பின்னணியில், மாட்டிறைச்சி விவகாரம் பெரிதாக்கப்பட மனிதர்களின் உயிர்களை வகுப்புவாதம் சூறையாடியது. பிஹார் மக்கள் எல்லாவற்றையும் கவனித்துக்கொண்டிருந்தனர்.

மக்களவைத் தேர்தலில் நிதிஷின் ஐக்கிய ஜனதா தளத்துக்கும் லாலுவின் ராஷ்ட்ரிய ஜனதா தளத்துக்கும் 6 இடங்கள்தான் கிடைத்தன. பாஜக கூட்டணி 31 இடங்களை வென்றது. ஆனால், ஒன்றரை ஆண்டுகளில் சூழல் தலைகீழாக மாறியிருக்கிறது என்றால், மக்கள் எதை எதிர்பார்த்து பாஜகவுக்கும் மோடிக்கும் வாக்களித்தார்கள், இந்த அரசாங்கம் எதை அவர்களுக்குத் திரும்ப அளித்திருக்கிறது என்பதை ஆட்சியாளர்கள் யோசிக்க வேண்டும்.

மூன்றாவது முறையாக முதல்வராகும் நிதிஷ் முன் சவால்கள் ஏராளமாக உள்ளன. ஊழல் - வன்முறைகளுக்குப் பேர் போன கூட்டணிக் கட்சியை அடக்கி ஆள்வதுதான் முதல் சவால். 10 ஆண்டுகள் ஆட்சிக்குப் பின்னரும் பிஹார் மக்களின் தலையெழுத்து அப்படியே மாறிவிடவில்லை. மத்தியில் நேர் எதிரான அரசு ஆட்சியில் இருக்கும் சூழலில், கிடைக்கும் உதவிகள் சொற்பமாகவே இருக்கும். முன்பைவிடவும் அவர் நிறையப் போராட வேண்டியிருக்கும். ஆனால், மக்களைத் தன் பக்கம் வைத்திருக்கும் வரை நிதிஷால் எல்லாவற்றையும் எதிர்கொள்ள முடியும் என்றே தோன்றுகிறது!

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024