Monday, November 16, 2015

பாரீசில் நடந்த தீவிரவாத தாக்குதல் சம்பவம் 2008–ம் ஆண்டு மும்பை தாக்குதலை நினைவூட்டுகிறது உறவினர்கள் கண்ணீர் பேட்டி

பதிவு செய்த நாள்:
திங்கள் , நவம்பர் 16,2015, 3:32 AM IST
மும்பை,
பாரீசில் நடந்த தீவிரவாத தாக்குதல் சம்பவம் 2008–ம் ஆண்டு மும்பையில் நடந்த தாக்குதலை நினைவூட்டுவதாக அந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் கண்ணீர்மல்க கூறினர்.
பாரீசில் தாக்குதல்பிரான்ஸ் தலைநகர் பாரீசில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு 6 இடங்களில் தனித்தனி குழுக்களாக புகுந்த 8 தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டும், வெடிகுண்டுகளை வீசியும் தாக்குதல் நடத்தினர். இந்த கொடூர தாக்குதல் சம்பவத்தில் ஒன்றும் அறியாத அப்பாவி மக்கள் 129 பேர் பலியாகினர். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. குறிப்பாக இந்த சம்பவம் பல தீவிரவாத பேரழிவுகளை சந்தித்துள்ள மும்பை நகர மக்களை மேலும் ஆழமாக பாதித்துள்ளது என்றே கூறலாம்.
காரணம் இந்த தாக்குதல் கடந்த 2008–ம் ஆண்டு மும்பையில் நடந்த தொடர் தீவிரவாத தாக்குதலை நினைவுபடுத்துவது போலவே உள்ளது தான்.
மும்பை தாக்குதல்மும்பையில் 2008–ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் நடந்தது இந்த சம்பவம், லஷ்கர்–இ–தொய்பா தீவிரவாதிகள் 12 இடங்களில் ஈவு, இரக்கமின்றி மக்களை கொன்று குவித்தனர். நான்கு நாட்கள் இந்த தாக்குதல் நீடித்தது. மொத்தம் 164 பேர் உயிரிழந்தனர், 300–க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த தாக்குதலை நகல் எடுத்தது போலவே தற்போதைய பாரீஸ் நகர தாக்குதலும் உள்ளது.
இதுகுறித்து 2008–ம் ஆண்டு மும்பை தாக்குதலின் போது உயிரிழந்த போலீஸ் கூடுதல் கமிஷனர் அசோக் காம்தேவின் மனைவி வினிதா காம்தே கூறியதாவது:–
மேற்கத்திய நாடுகளில் சிறப்பு வாய்ந்த பாதுகாப்பை கொண்ட பிரான்ஸ் தலைநகர் பாரீசில் இதுபோன்ற தாக்குதல் சம்பவம் நடந்திருப்பதை கண்டு நான் மிகவும் அதிர்ச்சி அடைந்தேன். ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளனர். தங்கள் மதத்தை வளர்ப்பதற்காக இவ்வாறு செய்ததாக அவர்கள் அறவித்துள்ளனர். மதத்தை பரப்புவதற்கு இது தவறான வழிமுறையாகும் மாறாக வன்முறையை விரும்பாதவர்களுக்கு அவர்களின் மதத்தின்மீது மேலும் கோபத்தையே இது ஏற்படுத்தும்.
கணவனை இழந்தேன்...இந்த சம்பவம் என் கணவரை இழந்த அந்த மோசமான நாளை மீண்டும் நினைவூட்டுவதாக உள்ளது. இதேபோன்ற தாக்குதலில் தான் நான் என் கணவரை இழந்தேன். அவருடன் வாழ்ந்த காலத்தின் பசுமையான நினைவுகளே எனக்கு இருக்கும் ஒரேயொரு ஆறுதலான விஷயம்.
இவ்வாறு வினிதா காம்தே கூறினார்.
இதேபோல் 2008–ம் ஆண்டு மும்பை தாக்குதலின் போது தன் குடும்பத்தினர் 6 பேரை இழந்தவர் சமீம் சாயிக்(வயது 39). இவர் கூறுகையில், ‘‘ பாரீஸ் தாக்குதல் சம்பவம் எனக்கு பழைய சில வலிமிகுந்த சம்பவங்களை நினைவூட்டுகிறது. 2008–ம் ஆண்டு நவம்பர் மாதம் அன்றைய தினம் இரவு நானும் எனது குடும்பத்தினரும் எங்கள் சொந்த ஊருக்கு செல்வதற்காக ரெயில் நிலையத்திற்கு சென்றோம்.
6 பேரை இழந்தேன்...அது ஒரு வித்தியாசமான இரவு. ரெயில் நிலையத்தில் எங்கு நோக்கினும் துப்பாக்கி சத்தமும், மக்கள் பதறியடித்துக்கொண்டு ஓடுவதையுமே காண முடிந்தது. எங்கும் ரத்தமாக காட்சியளித்தது. அங்கு என்ன நடக்கிறது என்பதை நான் புரிந்துகொள்வதற்கு முன்னதாகவே என் குடும்பத்தினர் 6 பேரை நான் அநியாயமாக இழந்துவிட்டேன்.
இதேபோன்ற சம்பவம் தற்போது பாரீஸ் நகரில் நடந்துள்ளதை கேள்விபட்டதும் என் இதயத்துடிப்பே சிறிதுநேரம் நின்றுவிட்டது. இதை கேள்விப்படும்போது, ஒரு நாளைக்கு ஒருமுறை மட்டுமே உணவு கிடைத்தால் கூட நம் சொந்த கிராமத்திற்கு சென்று நிம்மதியாக வாழ்ந்துவிடலாம் என்று தோன்றுகிறது. பெரிய நகரங்களில் வாழ்வது பீதியை ஏற்படுத்துகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

NEET PG 2024 Exam Pattern REVISED, NMC Issues Official Notice; Here’s All You Need To Know

NEET PG 2024 Exam Pattern REVISED, NMC Issues Official Notice; Here’s All You Need To Know The NEET PG 2024 is scheduled to take place on Ju...