Monday, November 9, 2015

இலவசங்கள் என்கிற மனநோய்!

Dinamani

By பூ. சேஷாத்ரி

First Published : 07 November 2015 01:24 AM IST


நலிந்த, ஏழை மக்களின் வாழ்க்கைத் தரம் மேம்பாடு அடைய, அரசு பல திட்டங்கள் தீட்டி, அவற்றைச் செயல்படுத்த முயற்சிகள் எடுத்து வருகிறது. அவ்வாறு செயல்படுத்தப்படும் திட்டங்கள் சில சரிவர மக்களைச் சென்றடைவதில்லை.
அப்படிச் சென்றடைந்தாலும் மக்கள் அவற்றைச் சரிவரப் பயன்படுத்துவதும் இல்லை. சில நேரங்களில் அரசு பொதுமக்களுக்காக தீட்டப்படும் திட்டங்கள் குறித்து சரியான புரிதலும் மக்களிடையே இல்லை என்பது வேதனையைத் தரும் செய்தி.
பொது விநியோகத் திட்டத்தின் மூலம் வழங்கப்படும் இலவச அரிசியை எத்தனை குடும்பங்களில் பயன்படுத்துகிறார்கள் என்பது மிகப் பெரிய கேள்வி.
இந்த இலவச அரிசியானது ஏழைகளுக்குப் பயன்படுவதைவிட, தெருவோரச் சிற்றுண்டிக் கடைகள், சிறு உணவு விடுதிகளில் சிற்றுண்டி தயாரிக்கத் தான் பயன்படுகிறது.
தமிழ்நாட்டின் எல்லையோரத்தில் உள்ள வெளிமாநில பகுதிகளுக்கு ரயில், பேருந்து மூலம் அரிசி கடத்தப்பட்டு விற்கப்படுகிறது.
முந்தைய ஆட்சியில், வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள், இலவச எரிவாயு இணைப்பு - அடுப்பு போன்றவை இலவசமாக வழங்கப்பட்டன.
வழங்கப்பட்ட தொலைக்காட்சிப் பெட்டிகள் கணிசமான எண்ணிக்கையில் சரியாக இயங்கவில்லை. பலர் அந்தத் தொலைக்காட்சிப் பெட்டிகளை விலைக்கும் விற்றுவிட்டார்கள்.
எரிவாயு இணைப்பு இல்லாத வீடு இன்று உண்டா? அங்கிங்கெனாதபடி எல்லா இல்லங்களிலும், கிராமங்களில் உள்ள வீடுகள் உள்பட எரிவாயு இணைப்பு இருக்கிறது.
அரசு இலவசமாகக் கொடுக்கிறதே என்று வீட்டில் உள்ள மற்ற குடும்ப உறுப்பினர்களுக்கு எரிவாயு இணைப்பை வாங்கி, மாதாமாதம் கிடைக்கும் நிரப்பப்பட்ட எரிவாயு உருளைகளை தேநீர்க் கடை, உணவு விடுதிகளுக்கு அதிகப்படியான விலைக்கு விற்கத்தான் பெரும்பாலும் இது பயன்படுகிறது.
பல குடும்பங்களில் எரிவாயு இணைப்பு இருக்கிறது. ஆனால், எரிவாயு உருளை கிடையாது. அதையும் விற்றாகி விட்டது.
சமீபத்தில் தொலைக்காட்சி செய்தி சேனலில் ஒளிபரப்பட்ட ஒரு செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.
பண்டிகைக் காலங்களையொட்டி ஏழைகளுக்கு வழங்கப்படும் இலவச வேட்டி, சேலை துணியானது கேரள மாநிலத்தின் பல துணிக் கடைகளில் ரூ.200-க்கு விற்கப்படுவதை ஆதாரத்துடன் (மறைத்து வைக்கப்பட்டிருந்த கேமரா மூலம்) செய்தி ஒளிபரப்பியது.
உண்மையிலேயே பரம ஏழைகளைத் தவிர இந்த வேட்டி, சேலையை யாருமே உடுத்துவது கிடையாது.
சில தினங்களுக்கு முன்பு அரக்கோணம் நகர, கிராம நிர்வாக அதிகாரியின் அலுவலகத்தில் முதியோர் ஓய்வூதியம் வாங்குபவர்கள் கூட்டம் அலைமோதியது. காரணம் கேட்டால், அரசின் இலவச வேட்டி, சேலையை வாங்குவதற்காக அந்த வரிசை.
அரசுப் பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு விலையில்லா (இலவசம் என்று சொல்லக்கூடாதாம்) மடிக் கணினியை அரசு வழங்கிவருகிறது.
விலையில்லா மடிக்கணினி பெற்ற மாணவர்களில் எத்தனை சதவீதம் பேர் அதை தங்கள் வாழ்க்கை முன்னேற்றத்துக்காகப் பயன்படுத்துகிறார்கள் என்பது அவர்களுக்கே வெளிச்சம்.
கிராமப்புற மாணவர்களில் பலர், வீட்டில் இருக்கும்போதும், விடுமுறைக் காலங்களில் மாடு மேய்ச்சலுக்குப் போகும்போதும், படம் பார்க்கவும், விளையாட்டுக்கும் தான் இதைப் பயன்படுத்தி வருகிறார்கள்.
ஏழை, எளிய மக்கள் வாழ்வில் மேம்பாடு அடைய அரசால் வழங்கப்படும் விலையில்லா அரிசி, வேட்டி, சேலை, மின்விசிறி, மிக்ஸி, கிரைண்டர், மடிக் கணினி, வண்ணத் தொலைக்காட்சி, எரிவாயு அடுப்பு போன்ற பொருள்கள் வெளிமாநிலக் கடைகளில் விற்கப்படுகின்றன என்பது மோசமான நிலை அல்லவா?
இதுகுறித்து ஆட்சியாளர்கள் சிந்திக்க வேண்டும்.
பொதுமக்கள் மத்தியில் அரசுகள் அறிவிக்கும் இலவசங்கள் குறித்து போதிய விழிப்புணர்வு ஏற்படாத வரை, பொதுமக்களுக்கான திட்டங்கள் அவர்களின் பெயரால் அதிகாரிகளின் பையை நிரப்புவதற்கு உதவிடுமே தவிர, இலவசங்களின் முழுப் பயனும் அவர்களுக்குக் கிடைக்காது.
வாக்கு வங்கிக்காக அரசுகள் வழங்கும் விலையில்லாப் பொருள்களால் விரயமாகும் மக்கள் வரிப் பணம் ஒருபுறம்; இலவசங்களை அறிவிக்கச் செய்து மக்கள் மனங்களைக் கெடுத்து, இலவசங்களை எதிர்நோக்கிக் கையேந்திக் காத்திருக்கும் அவல மனநிலையை ஏற்படுத்திய ஆட்சியாளர்கள் ஒருபுறம் என நாடு எங்கு சென்று கொண்டிருக்கிறது?
இலவசங்கள் என்கிற மனநோயிலிருந்து மக்கள் எப்போது விடுபடுவர்? இலவசங்கள் என்ற அரக்கனுக்கு கடைசி மணி கட்டுவது யார்?
பொது விநியோகத் திட்டத்தின் மூலம் வழங்கப்படும் இலவச அரிசியானது ஏழைகளுக்குப் பயன்படுவதைவிட, தெருவோரச் சிற்றுண்டிக் கடைகள், சிறு உணவு விடுதிகளில் சிற்றுண்டி தயாரிக்கத் தான் பயன்படுகிறது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024