Monday, November 30, 2015

இயற்கையை நாம் அழித்தால்...

logo


தமிழ்நாட்டில் கடந்த பல நாட்களாகவே, வடகிழக்கு பருவமழை வானத்தில் இருந்து பெருக்கெடுத்தோடும் அருவிபோல பொழிந்து, மண்மகளை கடல் மகளாக்கி பல சேதத்தை ஏற்படுத்திவிட்டது. இந்த பேரழிவுக்கு என்ன காரணம் என்பதை சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் நெற்றி அடியாக ஒரேவாக்கியத்தில் சொல்லிவிட்டார். ‘இயற்கையை நாம் அழித்தால், இயற்கை நம்மை அழித்துவிடும்’ என்று இவ்வளவு மழை சேதத்துக்கான காரணத்தை மட்டுமல்லாமல், இனி செய்யவேண்டிய நடவடிக்கைக்கான பாடமாகவும் சொல்லிவிட்டார். கடந்த 23–ந் தேதி மாலையில் 4 மணி நேரம் பெய்த மழை சென்னையை வெள்ளத்தில் மூழ்கடித்துவிட்டது. மாலையில் சாலையில் நடந்தும் செல்ல முடியவில்லை. வாகனங்களும் ஊர்ந்துகூட போகமுடியாத அளவு சாலைகளில் எல்லாம் தண்ணீர் நிறைந்து இருந்தது. இந்த போக்குவரத்து நெரிசல் தொடர்பாக ஐகோர்ட்டில் ஒருவழக்கு தொடரப்பட்ட நேரத்தில், நானும் அன்று ஐகோர்ட்டில் இருந்து வீட்டுக்கு செல்ல 3 மணி நேரம் போக்குவரத்து நெரிசலில் மாட்டிக்கொண்டேன். இயற்கை சீற்றங்களால் ஏற்படும் பின்விளைவு இது. இயற்கையை நாம் அழிக்கிறோம், பதிலுக்கு இயற்கை நம்மை அழிக்கிறது என்று தலைமை நீதிபதி கூறியிருக்கிறார்.

நிச்சயமாக இந்த கருத்தை அரசு, உள்ளாட்சி அமைப்புகள், பொதுமக்கள் அனைவரும் சிந்தித்து, இனியும் இதுபோல ஒரு நிலைமை ஏற்படாதவகையில் நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும். இந்த மழையிலும் சில ஏரிகள், குளங்களில் முழு கொள்ளளவை தேக்கி வைக்கமுடியவில்லை. காரணம் ஏரிகளின் கரைகள் பலப்படுத்தப்படவில்லை. தூர் வாரப்படாததால் முழுமையாக தண்ணீரை தேக்கி வைக்க முடியவில்லை. பல ஏரிகள், குளங்களில் ஆக்கிரமிப்புகள் அதிகமாகி பாதி நீர்நிலைகள் வீடுகளாகிவிட்டன. இதற்கு காரணம் ஆக்கிரமிப்பு தொடங்கியவுடனேயே நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள், அங்கு வீடுகள் கட்டப்பட்டவுடன் அரசு செலவில் சாலைகள் அமைத்துக்கொடுத்து, மின்சார சப்ளை, குடிநீர், கழிவுநீர் வசதி செய்துகொடுத்து, சட்டவிரோதமாக வசிப்பவர்களுக்கு ரேஷன் கார்டு கொடுத்து இலவசங்களையும் வாரி வாரி வழங்குவதுதான். மேலும் மன்னர்கள், ஆங்கிலேயர் ஆட்சிகாலங்களில் கட்டப்பட்ட ஏரி, குளங்களில் பெரும்பகுதியை மக்களாட்சியில் காணாமல் போகத்தான் செய்துவிட்டார்களே தவிர, பெருகிவரும் மக்கள் தொகைக்கேற்ப புதிய ஏரிகள், குளங்கள், வாய்க்கால்கள் தோண்டப்படவில்லை.

இந்த மழையிலும் பல கோவில்குளங்கள் வறண்ட நிலையில் அல்லது மழைதண்ணீரால் சற்று மட்டும் நிறைந்து இருக்கிறது. காரணம் அந்த குளங்களுக்கு மழைநீர் கொண்டுவரும் வரத்து கால்வாய்களில் ஆக்கிரமிப்புதான். மேலும் ஆறுகள், ஏரிகளில் பெருக்கெடுத்து ஓடி வீணாக கடலில் போய் கலக்கும் நீரை சேமிக்க புதிய கால்வாய்கள், ஏரிகள் தோண்டப்படவேண்டும். நகர்ப்புறங்களில் தண்ணீர் தேங்காதவாறு மழைநீர் வடிகால் கால்வாய்கள் சீரமைக்கப்பட்டு, அந்த தண்ணீரை சேமித்துவைக்க புதிய நீர்நிலைகள் உருவாக்கப்பட வேண்டும்.

மொத்தத்தில், அழிக்கப்பட்ட இயற்கைக்கு மீண்டும் உயிரூட்டவேண்டும். உடனடியாக நீர்நிலைகளின் ஆக்கிரமிப்புகளைக் கணக்கிட்டு, தயவு தாட்சணியம் இல்லாமல் அகற்றவேண்டும். நீர்நிலைகளில் தூர்வாருவதற்கான திட்டங்களைத்தீட்டி பட்ஜெட்டில் பணம் ஒதுக்கி, நீர் வற்றியவுடன், அல்லது நீர்மட்டம் குறைந்தவுடன் தூர்வாரவேண்டும். தேர்தல் வரப்போகிறது, அரசியல் கட்சிகள் அழிந்துபோன இயற்கையை, புதிய இயற்கை வசதிகளை உருவாக்கும் திட்டங்களை தேர்தல் வாக்குறுதிகளாக அறிவித்து, ஆட்சிக்கு வருபவர்கள் அதை உடனடியாக நிறைவேற்றவேண்டும்.

ஏனெனில் தேர்தல் அறிக்கைகளில் மக்கள் இப்போது அடைந்துவரும் இன்னல்களை தீர்க்க அரசியல் கட்சிகள் இப்போது இல்லாத என்னென்ன உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்கப் போகிறோம் என்று சொல்கிறார்கள் என்பதை பார்க்க ஆவலோடு இருப்பார்கள்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024