இந்த நிலையில், தீபாவளி வருகிற 10–ந் தேதி கொண்டாடப்பட இருக்கிறது. ‘உன்னைக்கண்டு நான் ஆட, என்னைக்கண்டு நீ ஆட, உல்லாசம் பொங்கும் இந்த தீபாவளி’ என்று மக்கள் அனைவரும் பட்டாசு போட்டு மகிழ்ந்து கொண்டாடினாலும், சில நேரங்களில் எதிர்பாராத நேரங்களில் சில நிகழ்வுகள் ஏற்பட்டு மக்கள் மருத்துவமனையை நாடும் நிலை ஏற்படலாம் என்ற சூழ்நிலையில், அரசு மருத்துவமனைகளில் தீத்தடுப்பு சிகிச்சை வார்டுகள், சர்க்கரை நோய் மருந்துகளின் இருப்பு உயர்வு போன்ற பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. நோயாளிகளை மருத்துவமனைகளுக்கு கொண்டுவரும் பணிகள் 108 ஆம்புலன்சு சேவையில்தான் இருக்கிறது.
2008–ம் ஆண்டு தொடங்கிய இந்த இலவச சேவை ஏழை மக்களுக்கு மிகவும் பயன் அளிக்கிறது. தமிழ்நாட்டில் உள்ள 32 மாவட்டங்களிலும், 684 ஆம்புலன்சுகள் 108 என்ற பெயரில் மருத்துவ சேவையாற்றுகிறது. தினமும் 6,500 பேர் மருத்துவ உதவிக்காக 108–க்கு போன் செய்கிறார்கள். விபத்துக்களில் பாதிக்கப்படுபவர்கள், திடீர் மாரடைப்பு போன்ற உயிர் காப்பாற்றவேண்டிய நிலையில் சீரியசாக இருப்பவர்கள், பிரசவத்துக்கு மருத்துவமனைக்கு செல்லவேண்டியவர்கள் என்று அனைவரும் 108–ஐத்தான் நம்பியிருக்கிறார்கள். தினமும் 108–க்கு வரும் 65 ஆயிரம் அழைப்புகளில் 3,500 அழைப்புகள் ‘எமெர்ஜன்சி’ என்று சொல்லப்படும் ‘அவசர சிகிச்சை’ தேடுபவர்கள்தான். இந்த ஆம்புலன்சு பணியில் 3,500 பேர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்த புனித சேவையில் ஈடுபட்டுள்ள இவர்கள், தீபாவளி நெருங்கும் நேரத்தில் 20 சதவீத போனஸ் கேட்டு வருகிற 8–ந் தேதி இரவு 8 மணி முதல் 24 மணி நேரம் வேலை நிறுத்தம் செய்வோம், 20 சதவீத போனஸ் தராவிட்டால் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவோம் என்று அறிவித்துவிட்டார்கள். இந்த சேவையை இயக்கும் நிறுவனம் நாங்கள் ஏற்கனவே ஊக்கத்தொகையாக ரூ.4,800 கொடுத்துவிட்டோம், இதற்குமேல் முடியாது என்று கூறிவிட்டது.
அறிவிக்கப்பட்ட இந்த வேலை நிறுத்தம் அரசை மட்டுமல்லாமல், பொதுமக்களையும் பெரிதும் அதிர்ச்சிக்குள்ளாக்கிவிட்டது. இதையொட்டி, சென்னை ஐகோர்ட்டில் ஒரு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் தமிழக அரசு சார்பில் இந்த வேலைநிறுத்தம் சட்டவிரோதமானது என்று அறிவிக்கப்படும் என்ற தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல், நீதிபதி புஷ்பா சத்திய நாராயணா ஆகியோர் கடந்த ஆண்டும் தீபாவளியின்போது இதுபோல 108 சேவை ஊழியர்கள் வேலைநிறுத்தம் அறிவித்ததைக்குறிப்பிட்டு, பொதுமக்களுக்கு ஆம்புலன்சு சேவை பாதிக்கப்படாத வகையில் தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று தமிழக அரசு உறுதி அளித்ததையும் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே தொழிலாளர் துறையில் நடந்த பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படாத நிலையில், இன்று மீண்டும் பேச்சுவார்த்தை நடக்கிறது. இதில் ஒரு சுமுக முடிவு ஏற்பட இருதரப்பும் முன்வரவேண்டும். வேலைநிறுத்தம் நடந்தால் பொதுமக்கள் பாதிக்கப்படும் நிலை ஏற்படும். மக்களுக்கு மருத்துவ சேவைகள் தேவைப்படும் நேரத்தில், அதிலும் குறிப்பாக, தீபாவளி நேரத்தில் மருத்துவமனைகளுக்கு கொண்டுசெல்லும் உயரிய சேவையை செய்யும் 108 ஆம்புலன்சின் சேவைகள் பாதிக்கக்கூடாது என்பதுதான் பொதுமக்களின் எதிர்பார்ப்பாகும்.
No comments:
Post a Comment