Wednesday, November 18, 2015

சபரிமலையில் சமுதாய மையம்

புதன், நவம்பர் 18,2015, 2:30 AM IST


logo

நேற்று கார்த்திகை மாதம் 1–ந் தேதி பிறந்தது. ஏராளமான அய்யப்ப பக்தர்கள் 41 நாட்கள் விரதம் இருப்பதற்காக கழுத்தில் ருத்ராட்ச மாலை அல்லது துளசி மாலை அணிந்து, எளிய கருப்பு அல்லது நீலம் அல்லது காவி உடை அணிந்து தொடங்கினார்கள். இந்த 41 நாட்களும் கடுமையான விரதம் இருந்து பின்பு தலையில் இருமுடி கட்டிக்கொண்டு, கேரளாவில் மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள சபரிமலைக்கு அய்யப்பனை தரிசிக்க செல்வார்கள். ஆயிரக்கணக்கில் என்று தொடங்கி, லட்சக்கணக்காகி, இப்போது கோடிக்கணக்கில் பக்தர்கள் கேரளா மட்டுமல்லாமல், தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகம், புதுச்சேரி மாநிலங்களில் இருந்தும் செல்கிறார்கள். தமிழ்நாட்டில் இருந்து செல்லும் அய்யப்ப பக்தர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்துக்கொண்டேப்போகிறது.

மற்ற கோவில்கள் போல, சபரிமலை அய்யப்பன் கோவில் ஆண்டு முழுவதும் திறந்து இருப்பதில்லை. ஒவ்வொரு மலையாள மாதத்தின் கடைசி நாளன்று மாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, அடுத்த மாதம் 5–வது நாளன்று நடை சாத்தப்படும். இதுதவிர, ஆண்டுதோறும் ஜனவரி மாதம் 1–ந் தேதி முதல் 15–ந் தேதிவரை மகரஜோதிக்காகவும், கார்த்திகை மாதம் முழுவதும் மண்டல பூஜைக்காகவும் நடை திறந்து இருக்கும். இந்த நாட்களில் வரும் அய்யப்ப பக்தர்களுக்காக கேரள அரசாங்கமும், தேவஸ்தானமும் அனைத்து வசதிகளையும் செய்துவருகிறது. பாதுகாப்புக்காக கேரளா போலீசாருடன், தமிழ்நாடு உள்பட அண்டை மாநில போலீசாரும் நியமிக்கப்படுகிறார்கள். பிளாஸ்டிக் பொருட்கள் தடை செய்யப்பட்டுள்ளது. சபரிமலைக்கு போகும் வழியில் நிலக்கல் என்ற இடத்தில் தென்மாநிலங்கள் அனைத்துக்கும் தலா 5 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளதாக கேரள முதல்–மந்திரி அறிவித்திருக்கிறார். தெலங்கானா அரசாங்கம் இந்த நிலத்தை பெற்றுக்கொண்டுவிட்டது. இதை தமிழக அரசு எடுத்துக்கொண்டு, தமிழ்நாட்டில் இருந்து செல்லும் பக்தர்களின் வசதிக்காக பயன்படுத்தவேண்டும். கேரள அரசாங்கம் இந்த நிலம் கொடுப்பதன் முக்கிய நோக்கம் அங்கு அந்தந்த மாநில அரசுகள் சார்பில் சமுதாய மையங்கள் அமைத்து, அந்தந்த மாநிலங்களில் இருந்து வரும் அய்யப்ப பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கவேண்டும் என்பதுதான். தமிழக அரசும் உடனடியாக இங்கு சமுதாய மையம் அமைத்து, தமிழ்நாட்டில் இருந்து சபரிமலை செல்லும் அய்யப்ப பக்தர்களுக்கு என்னென்ன வசதிகளை செய்து கொடுக்கலாம் என்று ஆலோசித்து உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும்.

கேரள அரசு கேட்டுக்கொண்டதற்கு இணங்க சென்னையிலும், பம்பா ஆற்றின் கரையிலும், சன்னிதானத்திலும் கட்டுப்பாட்டு அறைகள் அமைத்து, தமிழக பக்தர்களுக்கு துணையாக இருக்கவேண்டும். சபரிமலைக்கு வரும் பக்தர்கள் பம்பை ஆற்றில் குளித்துவிட்டு, தாங்கள் பயன்படுத்திய ஆடைகள் மற்றும் சில உடமைகளை ஆற்றில் போட்டுவிடுவது வழக்கம். ஐகோர்ட்டு ஆணைப்படி, இவ்வாறு ஆற்றில் போடுவது தடை செய்யப்பட்டுள்ளது, இதை மீறி போடுபவர்களுக்கு 18 மாதம் வரை ஜெயில் தண்டனை விதிக்கப்படும் என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளதை, தமிழக பக்தர்களுக்கு தெரிவிக்கவேண்டும்.

இப்படி ஆற்றில் பயன்படுத்திய ஆடைகளையும், உடமைகளையும் போடவேண்டும் என்று ஒரு தவறான நம்பிக்கைதான் இருக்கிறது. அப்படி ஒரு ஐதீகமே இல்லை என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதுமட்டுமல்லாமல், இந்த ஆண்டு செல்லும் பக்தர்கள் என்னென்ன நடைமுறைகளை மேற்கொள்ளவேண்டும்?, என்னென்ன செய்யக்கூடாது?, எந்தெந்த வசதிகள் அவர்களுக்காக செய்யப்பட்டுள்ளன என்பது போன்ற தகவல்களையெல்லாம் சபரிமலை அடிவாரத்திலேயே தேவஸ்தானம், பக்தர்களுக்கு தெரிவிக்கவேண்டும்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024