Saturday, November 14, 2015

பண்டித நேரு - நிறையும் குறையும்!

Dinamani
பண்டித நேரு - நிறையும் குறையும்!

By கே.எஸ். ராதாகிருஷ்ணன்

First Published : 14 November 2015 01:57 AM IST


ஆசியாவின் ஜோதி, மனிதர்களின் மாணிக்கம் என்று அழைக்கப்பட்ட பண்டிதர் நேரு பிறந்து 125 ஆண்டுகள் நிறைவடைகின்றன. அவர் மறைந்து 50 ஆண்டுகளும் கடந்துவிட்டன.
இதையொட்டி, அவரைப் பற்றிய பல நூல்கள் தற்போது வெளிவந்து கொண்டிருக்கின்றன.
நவீன இந்தியாவைப் படைக்க நேருவுடைய முயற்சிகள் ஏராளம். அவை பட்டியலில் அடங்காது. சோஷலிசம், மத நல்லிணக்கம், ஜாதிய மடமைகளுக்கு அப்பால் புதியதோர் சமுதாயம் படைக்க அவர் எடுத்துக்கொண்ட நடவடிக்கைகள் தான் இன்றைக்கு இந்தியாவின் அடித்தளமாக இருக்கின்றன.
1946-இல் மகாத்மா காந்தி, நேரு ஒரு தவிர்க்க முடியாத நபர் என்று குறிப்பிடுகின்றார். இந்தியா விடுதலை பெற்றவுடன் பெரும்பாலான மாநில காங்கிரஸ் கமிட்டிகளும், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர்களும் சர்தார் வல்லபபாய் படேல் பிரதமராவதைத்தான் விரும்பினார்கள். ஆனால், காந்தி அதை ஒப்புக்கொள்ளவில்லை. அவர் நேருவுக்கு ஆதரவாக இருந்தார். பிரிட்டிஷாருடன் இணக்கமான நட்புறவைத் தொடரும் இளைஞர் ஒருவர் பிரதமராக இருப்பதுதான் இந்தியாவுக்கு நல்லது என்று மகாத்மா காந்தி கருதியதுதான் அதற்குக் காரணம். பிரதமராக பொறுப்பேற்ற நேரு உள்துறை அமைச்சராக இருந்த படேலோடு பல பிரச்னைகளில் மாறுபட்டு இருவருக்கும் மத்தியில் தேவையற்ற கசப்புணர்வுகள் ஏற்பட்டதெல்லாம் வரலாற்றுச் செய்திகள்.
நேரு இந்திய-மேற்கத்திய கலாசாரங்களின் கலவையாக இருந்தார். ஆனால், சர்தார் படேலோ ஓர் இந்திய விவசாயியைப் போன்ற அணுகுமுறை கொண்டவர். காங்கிரஸுக்குள் நேதாஜி சுபாஷ் சந்திர போஸுக்கும், நேருவுக்கும்கூட சரியான உறவு இருக்கவில்லை. நேதாஜி போஸ் காங்கிரஸ் கட்சியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டபோதுகூட அந்தப் பொறுப்பில் தொடர முடியவில்லை. காந்தியடிகளுக்கும் நேதாஜி போஸுக்கும் இடையேயான மனக் கசப்புக்கு நேரு ஒரு முக்கியக் காரணம் என்று கூறுபவர்களும் உண்டு.
ஆனால், நேதாஜி தன்னுடைய உறவினருக்கு ஒரு தேவையின்போது நேருவிடம் கேளுங்கள் என்று வழிகாட்டியபோது, நேரு அதற்கு அக்கறை காட்டினார் என்று ஒரு செவிவழிச் செய்தி உண்டு. நேருவுக்கும், போஸுக்கும் மாறுபட்ட அணுகுமுறைகள் இருந்தாலும், இருவரும் தங்களுக்குள் நட்பு கொண்டிருந்தார்கள் என்றும் கூறப்படுகிறது.
இந்தியாவின் முதல் அமைச்சரவை அமைக்கும்போது, ஜெயப் பிரகாஷ் நாராயணனையும், அச்சுதபட்வர்த்தனையும் அமைச்சரவையில் சேரச் சொல்லி நேரு அழைத்தபோது, அவர்கள் மறுத்து மக்கள் பணி ஆற்றப்போகிறோம் என்று சர்வோதயம், பூமிதான இயக்கம் மற்றும் கிராமப்புற வளர்ச்சியில் கவனம் செலுத்தினார்கள்.
இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவராக இருந்த ராஜேந்திர பிரசாத்துக்கும் நேருவுக்கும் கூட தங்களில் அதிகாரம் படைத்தவர் யார் என்ற பனிப்போர் உருவானது. உச்சநீதிமன்றம் வரை இதற்காக கருத்தும் கேட்கப்பட்டது. இவர்கள் இருவருடைய உறவுகள் சீராக இல்லை என்றாலும், இருவரும் அடக்க ஒடுக்கமாகவே தங்கள் பனிப்போரை நடத்தினார்கள்.
அன்றைக்கு மாநில ரீதியாக காங்கிரஸ் கமிட்டி பிரதேச காங்கிரஸ் என்று அழைக்கப்பட்டு, அதன் தலைமைக்கு உரிய கெüரவமும் அதிகாரங்களும் வழங்கப்பட்டன. நேரு காலத்தில் மாகாண காங்கிரஸ் தலைவர்களான, தமிழகத்தில் காமராஜர், கேரளத்தில் சங்கர், ஆந்திரத்தில் நீலம் சஞ்சீவ ரெட்டி, கர்நாடகத்தில் நிஜலிங்கப்பா, மராட்டியத்தில் எஸ்.கே.பாட்டில், பிற மாகாணத் தலைவர்களான மொரார்ஜி தேசாய், அதுல்யா கோஸ், டாக்டர் பி.சி. ராய் எனப் பல தலைவர்கள் அந்தந்த மாகாணங்களில் காங்கிரûஸ வளர்த்தார்கள். நேரு, அவர்களுக்கு உரிய அதிகாரங்களை அளித்து, அவர்களும் சுயமாகத் தங்கள் முடிவுகளை எடுத்தனர்.
தட்சண பிரதேசம் என்று தமிழகம், ஆந்திரம், கர்நாடகம், கேரளம் இணைந்து தென் மாநிலங்களை ஒரு மாநிலத் தொகுப்பாக நேரு அமைக்கத் திட்டமிட்டபோது, பெருந்தலைவர் காமராஜர் அதைக் கடுமையாக எதிர்த்தார். ஆகவே, அத்திட்டத்தை நேருவும் கைவிட்டார். அவ்வளவு அதிகாரங்கள் மாகாண காங்கிரஸ் தலைவர்களுக்கு அன்றைக்கு இருந்தது. இந்திரா காந்தி காலத்தில் இந்த மாகாணத் தலைவர்கள் தஞ்சாவூர் பொம்மை போல மாற்றப்பட்டதால்தான் காங்கிரஸ் பல இடங்களில் படிப்படியாகத் தன் செல்வாக்கை இழந்தது.
நேரு, நாடாளுமன்ற ஜனநாயகம், மக்களின் அடிப்படைத் தேவைகள், கனரகத் தொழிற்சாலைகள், அணைகள், கட்டமைப்புப் பணிகள், அறிவியல் தொழில்நுட்ப ஆராய்ச்சி, அணுசக்தி போன்ற முக்கிய விஷயங்களில் ஆர்வம் செலுத்தி, அதற்கான வளர்ச்சிக்கு வித்திட்டார்.÷இந்தி பேசாத பிற மாநிலங்களில் இந்தியைத் திணிக்கமாட்டோம் என்ற உத்தரவாதத்தை அளித்த நேருவின் மென்மையான போக்கை இன்றைக்கும் நினைத்துப் பார்க்க வேண்டியுள்ளது.
இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, உலக நாடுகள் இரண்டு பக்கமாக பகைமை கொண்ட அணிகளாகப் பிரிந்தன. அமெரிக்கா தலைமையில் ஓர் அணியும், ரஷியா தலைமையில் மற்றோர் அணியும் உருவாகின. இதனால் உலகில் பதற்றமான நிலை மற்றும் அமைதியின்மை ஏற்பட்டது. இந்தியா இவ்விரண்டு அணிகளிலும் சேராமல் நடுநிலை நாடாக இருந்தது. இதன் விளைவாக உருவான நேருவின் அணிசாராக் கொள்கையின் மூலம் இந்தியா உலக அமைதியை நிலைநாட்டியது.
அமெரிக்கா, ரஷியா என்று உலகின் இரண்டு வல்லரசுகள் கோலோச்சிய காலத்தில் அணிசாரா நாடுகளை ஒன்றிணைத்து அணிசாரா இயக்கம் பெல்கிரேடில் உருவானது. ஜவாஹர்லால் நேருவோடு, யுகோசுலோவாக்கியாவின் அதிபர் யோசிப் பிரோசு டிட்டோ, எகிப்து அதிபர் நாசர், கானாவின் தலைவர் குவாமே நிக்ரூமா, இந்தோனேசியாவின் தலைவர் சுகர்ணோ ஆகியோரின் முயற்சியில் இந்த இயக்கம் துவங்கியது.
இந்த ஐவருமே பனிப்போரில் ஈடுபட்டிருந்த மேற்கத்திய மற்றும் கிழக்கத்திய அதிகார மையங்களுக்கு இடையே, நடுநிலையில் வளரும் நாடுகள் உலக அமைதியை முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்ற கருத்துடையவர்களாக இருந்தனர். இந்தச் சொல்லாடலை ஐக்கிய நாடுகள் அவையில் 1953-ஆம் ஆண்டிலேயே இந்தியாவின் பிரதிநிதியாக இருந்த வி.கே. கிருஷ்ண மேனன் வலியுறுத்தினார்.
எந்தவொரு அதிகார மையத்தின் சார்பாகவோ, எதிராகவோ அணிசாரா நாடுகளின் குழுமமான இந்த இயக்கத்தில் தற்போது 120 நாடுகள் உறுப்பினர்களாகவும், 17 நாடுகள் பார்வையாளர்களாகவும் உள்ளன. நேருவின் முன்முயற்சியில் உருவான பஞ்சசீலக் கொள்கை உலகத்தையே திரும்பிப் பார்க்க வைத்தது. இந்தோனேசியாவின் பாண்டூங் நகரில் வடித்த அந்த ஐந்து கொள்கைகள், "எந்த நாடும் பிற நாட்டை தாக்கக்கூடாது; ஒரு நாட்டின் உள்நாட்டு விவகாரங்களில், பிற நாடுகள் தலையிடக்கூடாது; அனைத்து நாடுகளும் சமத்துவம் மற்றும் பரஸ்பர நல்லுறவு கொண்டிருக்க வேண்டும்; ஒவ்வொரு நாடும் பிற நாடுகளுடன் அமைதியான முறையில் இணங்கியிருத்தல் வேண்டும்; ஒவ்வொரு நாடும் பிற நாடுகளின் ஒற்றுமை மற்றும் இறையாண்மையை மதிக்க வேண்டும்' என்பவை. இவையே உலக ஒற்றுமைக்கும், உறவுக்கும் பாலபாடமாகும்.
இவ்வாறான உலக அமைதிக்கும், நல்லிணக்கத்துக்கும் குரல் கொடுத்த பண்டித நேருக்கு அமைதிக்கான நோபல் பரிசு கிடைத்திருக்க வேண்டும். ஆனால் மேலை நாடுகள் அவரை ஏனோ புறக்கணித்தன.
இந்தியா விடுதலை பெற்றவுடன் நாட்டின் தேவைகளையும், வளர்ச்சிகளையும் கவனத்தில்கொண்டு பணிகளை மேற்கொள்ள வேண்டிய கடமை ஒருபுறமும், பாகிஸ்தான் பிரிந்து சென்றபோது அங்கிருந்து வந்த அகதிகளைப் பாதுகாக்கவும், ஏனைய பிரச்னைகளைக் கவனிக்கவும், அரசியலமைப்பு ரீதியாக நாட்டைத் திடப்படுத்தவும் எனப் பல பணிகளில் நேரு ஈடுபட்டதோடு, உலக அரங்கிலும் இந்தியாவின் கீர்த்தியை தன்னுடைய அணுகுமுறையினால் நிலைநிறுத்தினார். ஆனாலும், அவர் மீது இன்றைக்குவரை வைக்கப்படுகின்ற விமர்சனங்கள் பல உள்ளன.
காஷ்மீர் பிரச்னையை அவர் கையாண்ட விதமும், ஐ.நா. மத்தியஸ்தத்துக்கு ஒத்துக்கொண்டதும் தவறானது என்று இன்றுவரை பேசப்பட்டு வருகின்றது. பாகிஸ்தானுக்கு அதிகமான சலுகைகளும், இடமும் நேரு அளித்துவிட்டார் என்றும், சீனாவுடைய எல்லை தாவாக்களில் இந்திய-சீன எல்லையை வரையறுக்கும் மக்மோகன் எல்லைக்கோடு பிரச்னையும், மணிப்பூரில் சில இடங்கள் அப்போது பர்மாவுக்கு விட்டுக்கொடுத்ததும், நாகாலாந்து பிரச்னையை சரியாகக் கையாளவில்லை போன்ற விவாதங்கள் தற்போதும் உள்ளன.
மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கும்போது, மாநில எல்லைகள் சரியாக வரையறுக்கப்படவில்லை. உதாரணத்திற்கு தமிழகத்தின் நெய்யாற்றங்கரை, நெடுமாங்காடு, தேவிகுளம் பீர்மேடு, பாலக்காடு அருகே சில கிராமங்கள் கேரளத்துக்கும், கொள்ளேகால் மற்றும் மாண்டியாவின் சில கிராமங்கள் கர்நாடகத்திற்கும், திருப்பதி, சித்தூர், நெல்லூர் பகுதிகள் ஆந்திரத்துக்கும், தமிழகத்தின் எதிர்ப்பை மீறி பிரித்துக் கொடுக்கப்பட்டதை நேரு கண்டுகொள்ளவில்லை என்ற குறைபாடுகள் இன்றைக்கும் உண்டு.
நாட்டில் சமஸ்டி அமைப்பு முறையினுடைய வீரியத்தைக் குறைத்து வலுவான மத்திய அரசு, நேரு என்ற ஆளுமை மாயையால் உருவாக்கப்பட்டது. அவரிடம் நிறைவும் உண்டு. அவருடைய பணிகள் மீதான விமர்சனங்களும் உண்டு.
தங்களுக்கு இடையே மாறுபட்ட கருத்துகள் இருந்தாலும், காந்தியை தன்னுடைய வழிகாட்டியாகக் கருதினார். கிராமியப் பொருளாதாரம் என்ற அடிப்படையில் ராம ராஜ்ஜியம் காணவும், கிராமங்களிலே உண்மையான இந்தியா வாழ்கிறது என்றும் காந்தி நினைத்தார். ஆனால் நேருவோ, மேலைநாட்டு தொழில்நுட்பத்தைக் கொண்டு இந்தியாவின் ஆளுமையை உலகளவில் நிலைநிறுத்த வேண்டுமென்ற கொள்கையில் முனைப்பாக இருந்தார்.
உலக வரலாற்றையும், இந்திய வரலாற்றையும் சுருக்கமாக அறிந்துகொள்ள, The Discovery of India, Glimpses of World History மற்றும் தன்னுடைய சுயசரிதையை நூல்களாக்கி நமக்குச் சீதனமாக விட்டுச் சென்றுள்ளார்.
இலக்கியத்திலும், ஆங்கிலப் புலமையிலும், நாட்டு நிர்வாகத்திலும், உலக அமைதிக்கு குரல் கொடுத்த உலகத் தலைவர் நமது முதல் பிரதமர் பண்டித ஜவாஹர்லால் நேரு. அவரைப் பற்றி இன்றைய இளைய தலைமுறைகள் அறிந்து கொள்வதோடு ஆய்வுகளும் மேற்கொள்ள வேண்டும்.

இன்று ஜவாஹர்லால் நேரு
125}ஆவது பிறந்தநாள்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024