Wednesday, November 11, 2015

வேதாளம் - படம் எப்படி?

cinema.vikatan.com
தங்கைக்காக எதையும் செய்யும் அண்ணன் இல்லை, "தங்கைக்காக எவனையும் செய்யும் அண்ணன்" தான் வேதாளம்.
லட்சுமி மேனனின் படிப்பிற்காக கொல்கத்தாவிற்கு தங்கையோடு வருகிறார் அஜித். லட்சுமி மேனனுக்கு ஓவியக் கல்லூரியில் சீட் கிடைக்க, அஜித்திற்கு டாக்ஸி ஓட்டுநராக வேலை கிடைக்கிறது. சாதாரண குடும்பமாக வாழ்ந்துவரும் அண்ணன் தங்கை வாழ்வில் புயல் வீச ஆரம்பிக்கிறது. 

டாக்ஸி டிரைவர்கள் அனைவரிடமும் போலீஸ் துறை ஒரு சட்டவிரோதக் கும்பலைப் பிடிக்க உதவுமாறும், நீங்கள் இந்தக் குற்றவாளிகளைக் கண்டால் எங்களுக்குத் தகவல் கொடுங்கள் எனவும் கூற, அஜித்தும் ஆர்வத்தால் ஒரு பெரிய போதை மருந்து கும்பல் பற்றியான தகவலை போலீஸிடன் கொடுத்துவிடுகிறார்.
போலீஸ் கூண்டோடு போதைக் கும்பலைப் பிடிக்க, வில்லன்கள் டார்கெட் நினைத்தது போல் அஜித் மேல் விழுகிறது. ஆட்டம் ஆரம்பம்.  அஜித்தை வில்லன்கள் தேடி பிடித்து தூக்கிக்கொண்டு போக,
“நீ என்னத் தூக்கிட்டு வந்தியா,  நான் தாண்டா உன்னைத் தேடி வந்துருக்கேன்” 
என அஜித்தின் இன்னொரு ஆக்‌ஷன் அவதாரம் அரங்கேறுகிறது.
அஜித் ஏன் அப்பாவியாகவும்,ஆக்ரோஷமாகவும் இருவாழ்க்கை வாழ்கிறார் என்பதற்கு மாஸ் ஃப்ளாஷ்பேக்காகவும், க்ளைமாக்ஸாகவும் விரிகிறது மீதிக் கதை..

படத்தின் இரண்டு முக்கிய கதாப்பாத்திரங்களான அஜித், லட்சுமி மேனன். இருவரும் நடிப்பில் மிரட்டுகிறார்கள்.
வெறித்தனமாக அடித்துக் கொண்டிருக்கையில் தங்கையை பார்த்த அடுத்த கணம் கீழே விழுந்து அடிவாங்குவது அடடே தருணம். எப்படி ஒரு முன்னணி நடிகை தங்கையாக நடிக்க ஒப்புக்கொண்டார் என்றால் உண்மையில் படமே லட்சுமி மேனன் தான் என்பது படம் பார்த்தப் பிறகு தான் புலப்படுகிறது.
மருமகனாக சூரி, மாமியாராக கோவை சரளா இருந்துமே காமெடி காட்சிகள் எடுபடவில்லை என்றே சொல்லலாம்.
நாயகியான ஸ்ருதி ஹாசனுக்கு படத்தில் சொச்ச காட்சிகளே.  ஒரு நாயகியாக எத்தனையோ மொழிகளைக் கடந்து நடித்துவரும் நிலையில் தனக்கான ஸ்கோப்பை கேட்காமல் எப்படி ஸ்ருதி நடிக்க ஒப்புக்கொண்டார்.  இதில் பெரிய தவறாக படத்தின் இடைவேளைக்குப் பிறகு ஸ்ருதிக்கு வேறு யாரோ குரல் கொடுத்துள்ளனர். 

தம்பி ராமையா, ரத்னா காட்சிகள் சென்டிமெண்ட் மக்களுக்கு பந்தியில் வைக்கப்பட்ட இனிப்பு. எனினும் கொஞ்சம் நீளமான காட்சிகள். அதை சரி செய்திருக்கலாம்.
“போகட்டும் பொண்ணுங்க ஸ்கூலுக்கு, கலேஜூக்கு
அவங்கள நிம்மதியா போக விடுங்க”  என அஜித் பேசும் இடம் சமூக அக்கறை. 

“உன் வாழ்க்கையில மறக்க முடியாத ரெண்டு விஷயம்
ஒண்ணு உன்ன பெத்தவங்க  இன்னொன்னு நான்”
“அவங்க உனக்கு பிறப்பக் குடுத்தாங்க,
நான் உனக்கு இறப்பக் குடுக்கபோறவன்டா” 
“பணத்துக்காகவே பண்ணும் போது பாசத்துக்காகப் பண்ணமாட்டேனாடா என் வென்று”  இப்படி படம் முழுவதும் கைத்தட்டலுக்காகவே படபட பன்ச்கள் பறக்கின்றன.
ஆலுமா டோலுமா அஜித் ஸ்பெஷல், உயிர் நதி கலக்குதே எமோஷனல் ஸ்பெஷல் எனினும் பாடல்களில் கொஞ்சம் சறுக்கலே. ஆனால் பின்னணியில் தெறிக்கவிட்டிருக்கார் அனிருத். 

ஆக்‌ஷன் காட்சிகளில் அனல் பறக்கும் சண்டைக் காட்சிகள், எல்லாவற்றிற்கும் மேல் இடைவேளை யாரும் எதிர்பாரா தருணமாக அஜித் மழையில் வெறியுடன் கத்துவது,  சிவாவின் டச்.

சண்டைக் காட்சிகளிலும், பாடல் காட்சிகளிலும் வெற்றியின் ஒளிப்பதிவு கண்கட்டி வித்தை. எல்லாம் சரி தான் பாஸ் அந்த நீளம் சத்தியமா பொருத்துக்க முடியலை. முன் பாதி அப்படியே தொங்கி நிற்கிறது. அதைக் கொஞ்சம் செதுக்கினால் இன்னும் நன்று.
அதென்ன கும்பல் கும்பலாக பெண்களைத் தூக்கி வெளிநாட்டில் விற்பது. வேலாயுதம் முதல் வேதாளம் வரை தொடரும் அதே போரடிக்கும் வில்லன் காட்சி. ப்ளீஸ் மாத்துங்க. 
மியூசிக்கை போட்டுவிட்டு வெறித்தனமாக நடனம் ஆடி சண்டைப்போடுவதெல்லாம் அஜித் ரசிகர்களுக்கு அசத்தல் ட்ரீட். மொத்தத்தில் அஜித் ரசிகர்கள் பில்லா, மங்காத்தா, ஆரம்பம் என கொஞ்சம் தனியாக பார்த்தவர்கள் தங்கள் குடும்பத்தோடு பார்க்க தேர்ந்தெடுக்க வேண்டிய சென்டிமெண்ட் படம் தான் வேதாளம்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024