Monday, November 2, 2015

சோதனை அல்ல வாய்ப்பு!


Dinamani

By ஆசிரியர்

First Published : 02 November 2015 01:37 AM IST


மக்களின் மருத்துவ நலன் கருதி சிறப்பு மருத்துவப் படிப்புகளுக்கு இடஒதுக்கீடு முறையை அமல்படுத்த வேண்டாம் என்றும், இதுதொடர்பாக மத்திய, மாநில அரசுகள் உரிய வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க வேண்டும் என்றும் அண்மையில் உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில் தெரிவித்திருந்தது.
உச்சநீதிமன்ற நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, பி.சி.பந்த் ஆகியோர் அளித்திருக்கும் இந்தத் தீர்ப்பில் தெரிவித்திருக்கும் கருத்து புதியதல்ல. இதே கருத்தை 1988-ஆம் ஆண்டும் உச்சநீதிமன்றம் வலியுறுத்தியது. தற்போதைய வழக்கில், ஆந்திரம், தெலங்கானா ஆகியன குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெற்றுள்ளதால், அந்த மாநிலங்களின் நடைமுறையில் தலையிட இயலாது என்று கூறியுள்ள நீதிமன்றம், தமிழ்நாட்டில் சிறப்பு மருத்துவப் படிப்புக்கு இடஒதுக்கீடு அமலில் உள்ளதால் அதுகுறித்த விசாரணையை வரும் நவம்பர் 4-ஆம் தேதி எடுத்துக் கொள்ளவிருக்கிறது.
இந்தத் தீர்ப்பு வெளியான நாள் முதல், தி.மு.க. தலைவர் கருணாநிதி உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் "சிறப்பு மருத்துவப் படிப்பில் இடஒதுக்கீட்டு முறை தொடர வேண்டும்' என்று தமிழக அரசுக்கு அழுத்தம் தந்து வருகின்றனர்.
உச்சநீதிமன்ற நீதிபதிகள் இதேபோன்றதொரு வழக்கில் முன்பு தீர்ப்பு வழங்கியபோது, மருத்துவம் போன்ற உயிர் காக்கும் அறுவைச் சிகிச்சை அளிக்க வேண்டிய உயர் கல்வியில் திறமைதான் மதிக்கப்பட வேண்டும், இடஒதுக்கீடு போன்ற சலுகைகளில் அடிப்படையில் உயர் மருத்துவக் கல்வியில் மருத்துவர்கள் சேர்க்கப்படுவது நன்மை அளிக்காது என்று தெரிவித்திருந்தனர்.
உச்சநீதிமன்றம் ஏன் சிறப்பு மருத்துவத்தில் திறமை மட்டுமே அடிப்படையாக இருக்க வேண்டும் என்று சொல்கிறது என்பதை எந்தப் பாமரனும் புரிந்துகொள்ள முடியும். மிகவும் சிறப்பு மருத்துவர்களாக இருப்பவர்கள் தனித்துவம் வாய்ந்த அறுவை சிகிச்சைகளையும், நுட்பமான மருத்துவ ஆலோசனைகளையும் வழங்க வேண்டியவர்கள். இருதயம், நரம்பியல், சிறுநீரகம், இரைப்பை, வயிறு, புற்றுநோய் என துறை சார்ந்த நிபுணத்துவம் பெறுவதற்காகவே சிறப்பு மருத்துவப் படிப்பு தேவையாக இருக்கிறது. இந்நிலையில், இத்தகைய உயிர் காக்கும் சிகிச்சை அளிக்கும் படிப்பில் இடஒதுக்கீடு தேவையில்லை என்பதையும், வெறும் வாக்கு வங்கி, ஜாதி அரசியலுக்காக இந்த விவகாரத்தை அரசியல்வாதிகள் எடுத்துக்கொள்கிறார்கள் என்பதையும் எவரும் புரிந்துகொள்ள முடியும்.
இடஒதுக்கீடு வேண்டும் என்று குரல் எழுப்பும் அரசியல்வாதிகள் அனைவருமே, தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் அறுவைச் சிகிச்சை தேவைப்படும்போது, எவர் திறமையானவரோ, யார் சிறந்த மருத்துவர் என்று மற்றவர்கள் பரிந்துரைக்கிறார்களோ அவர்களையே சாதி வேறுபாடு பார்க்காமல் தேர்வு செய்கின்றனர். அல்லது வெளிநாடு சென்று, பெருஞ்செலவு செய்து, அறுவை சிகிச்சை செய்துகொள்கிறார்கள். அவரவர் உயிர் என்றால் மட்டும் திறமை அவசியமாகிறது. பொதுமக்களின் தேவை என்று வரும்போது வாக்கு வங்கி, ஜாதி அரசியல்தான் முன்னுரிமை பெறுகிறது.
இன்றைய மருத்துவ உலகின் மிகப்பெரும் அவலம், திறமையுள்ள மருத்துவர்கள் பெரும்பாலும் வெளிநாடு சென்றுவிடுகின்றனர். தங்களது குடும்பச் சூழ்நிலை காரணமாகவோ தேசப்பற்று காரணமாகவோ இந்தியாவில் பணியாற்றும் சிலரை தனியார் மருத்துவமனைகள்தான் பயன்படுத்திக் கொள்கின்றன. அவர்களை அரசு மருத்துவமனைகள் போதிய ஊதியம் அளித்து பயன்படுத்திக் கொள்வது இல்லை.
இதனால் அரசு மருத்துவமனைகளும், அவற்றுக்கு அரசு ஒதுக்கும் பணமும் வீணாகிப் போவதுடன், சிறந்த மருத்துவர்கள், சாதனை மருத்துவர்கள் இல்லாத காரணத்தால் நடுத்தர மக்களின் நம்பிக்கையை அரசு மருத்துவமனைகள் இழக்க நேரிடுகிறது. அரசு மருத்துவமனைகள் ஏழைகளுக்கு மட்டுமே என்பதாகவும், அதனால் ஏனோ, தானோ என்று சிகிச்சை அளிக்கலாம் என்பதாகவும் நிலைமை மாறிவிடுகிறது.
எம்.பி.பி.எஸ். படிப்பில் இடஒதுக்கீட்டு முறையில் சேரும் தாழ்த்தப்பட்ட மாணவர்களில் 99% பேர் அதிக வருவாய் பெறும் அரசு ஊழியர் குடும்பப் பின்னணி கொண்டவர்களே. கிரீமி லேயர் முறை அமலில் இல்லாததால் முன்னேறியவர்களே இந்த இடஒதுக்கீட்டை ஆக்கிரமித்துக் கொண்டு, மற்ற தாழ்த்தப்பட்ட பின்தங்கிய மாணவர்களுக்குத் தடைக்கல்லாக இருக்கிறார்கள். இந்நிலையில், முதுநிலை மருத்துவத்திலும் (எம்.டி.) இடஒதுக்கீடு, சிறப்பு மருத்துவத்திலும் இடஒதுக்கீடு வழங்காவிடில், சமூகநீதி பாதிக்கப்படும் என்ற வாதம் பொருந்தாது.
தமிழகத்தில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் 15% எம்.பி.பி.எஸ். இடங்களும், முதுநிலை மருத்துவப் படிப்பில் 50% இடங்களும் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு வழங்கப்படுகிறது. சிறப்பு மருத்துவப் படிப்புக்கு தமிழ்நாட்டில் 189 இடங்கள் உள்ளன. இதில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு இடம் வழங்கப்படுவதில்லை. இருப்பினும், இடஒதுக்கீடு முறை அமலில் இருக்கிறது.
தமிழக அரசு நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு இணங்குவதாக இருந்தால் இந்த 189 இடங்களுக்கு மட்டும் முழுக்க முழுக்கத் திறமை அடிப்படையில் மருத்துவர்களைச் சேர்ப்பதுடன், இவர்கள் ஐந்து ஆண்டுகளுக்கு தமிழக அரசு மருத்துவமனைகளில் பணியாற்றவும், மருத்துவக் கல்லூரிகளில் விரிவுரையாற்றவும் வேண்டும் என்பதை உறுதிமொழியாகப் பெற வேண்டும்.
தமிழக அரசின் மருத்துவக் கல்லூரிகளில் போதுமான எண்ணிக்கையில் சிறப்பு மருத்துவர்கள் இல்லாத காரணத்தால், மருத்துவக் கல்லூரி அங்கீகாரம் தொடர்வதில் உள்ள சிக்கல்களுக்கு இது ஒரு தீர்வாக அமையும். மேலும், அரசு மருத்துவமனை திறமை அடிப்படையில் வந்த மருத்துவர்களால் நிரம்பும். உச்சநீதிமன்றம் அளித்திருக்கும் இந்தத் தீர்ப்பை தமிழக அரசு சாதகமாக மாற்றிக் கொள்ள நல்லதொரு வாய்ப்பு காத்திருக்கிறது.

No comments:

Post a Comment

NEET PG 2024 Exam Pattern REVISED, NMC Issues Official Notice; Here’s All You Need To Know

NEET PG 2024 Exam Pattern REVISED, NMC Issues Official Notice; Here’s All You Need To Know The NEET PG 2024 is scheduled to take place on Ju...