Saturday, November 7, 2015

ஐயா, பேசியது போதும் காரியத்தில் இறங்குங்கள்!.....சிந்தனைக் களம் » தலையங்கம்



இது தீபாவளிப் பருவம். ஆடைகள், தங்க, வெள்ளி நகைகள், நுகர்வுப் பண்டங்கள் என்று அனைத்தின் விற்பனையும் உச்சத்தில் இருக்க வேண்டிய நேரம். ஆனால், பொருளாதாரச் சுணக்கம் காரணமாகப் பல்வேறு துறைகளிலும் தொழில், வர்த்தக நிறுவனங்களின் உற்பத்தி, விற்பனை, விற்றுமுதல் போன்றவை சுணங்கிக்கிடக்கிறது. செப்டம்பர் மாதத்துடன் முடிந்த காலாண்டுக்கான வரவு - செலவுக் கணக்குகளை வெளியிட்ட நிறுவனங்களில் சரிபாதிக்கும் மேல், கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டு வருவாய் குறைந்திருக்கிறது. இது நிறுவனங்களின் நிகர லாபத்தை நெருக்கடிக்கு உள்ளாக்கியிருக்கிறது. பாதிக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் லாபம் குறைந்துவிட்டதாக வெளிப்படையாகத் தெரிவித்துள்ளன. கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது விற்பனையில் 7% வீழ்ச்சி ஏற்பட்டிருக்கிறது.

அயல்நாடுகளில் உள்ள தங்களுடைய விற்பனை அல்லது உற்பத்திப் பிரிவுகளிலிருந்து வருவாய் பெறும் இந்திய நிறுவனங்களுக்கு, உலக அளவிலான பொருளாதார மந்தம் காரணமாக வருவாயில் சரிவு ஏற்பட்டிருக்கிறது. தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் வளர்ச்சியை நிலைநிறுத்த தடுமாறிக்கொண்டிருக்கின்றன. மேல்வரிசை நிறுவனங்கள் தங்களுடைய எல்லாவிதச் செலவுகளையும் குறைத்துவருகின்றன. உலக அளவில் நுகர்வு குறைந்திருப்பதாலும் சீனத்திலிருந்து அளவுக்கு அதிகமாகக் கொண்டுவந்து குவிப்பதாலும் உருக்கு, உலோகம் போன்ற துறைகளில் விற்பனைக்குப் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. வெளிநாட்டுக் காரணங்கள் தவிர, உள்நாட்டிலும் பல அம்சங்கள் தொழில், வர்த்தகத்துக்கு அனுகூலமாக இல்லை. வீடு, அடுக்ககம் போன்ற விற்பனைத் துறையில் தேவையைவிட அளிப்பு அதிகமாகிவிட்டது. எனவே, கூவிக்கூவி விற்க வேண்டியிருக்கிறது. வங்கிகளும் லாபம் ஈட்ட முடியாமல் இருக்கின்றன. உள்நாட்டிலும் நுகர்வுப் பண்டங்களுக்கும் இயந்திரங்களுக்கும் கிராக்கி அதிகரிக்காததால் இந்தச் சரிவுத் தொடர் சுழல்வட்டமாகவே நீடிக்கிறது. கிராமப்புறங்களைப் போலவே நகர்ப்புறங்களிலும் தேவையிருந்தும் பொருட்களை வாங்குவதைத் தள்ளிப்போடுகின்றனர்.

உலக அளவில் நடக்கும் நிகழ்ச்சிகளை இந்திய அரசால் மாற்ற முடியாது. ஆனால், உள்நாட்டில் தேவைகளை அதிகப்படுத்த அடித்தளக் கட்டமைப்புத் துறைகளிலும் அரசுத் துறைகளிலும் உற்பத்தியைப் பெருக்குவது, புதிய வேலைகளை மேற்கொள்வது, கையில் உள்ள திட்டங்களை முழு மூச்சுடன் செய்துமுடிப்பது போன்றவை நிச்சயமாக அரசு கையில்தான் இருக்கின்றன. பொருளாதாரத்தை முடக்கிவிட அரசு நடவடிக்கை எடுத்தால்தான், உள்நாட்டில் வேலைவாய்ப்பும் நுகர்வும் அதிகரிக்கும். இந்தியாவின் பொருளாதார பலமே உள்நாட்டு நுகர்வும் சேமிப்பும்தான். அவற்றை ஊக்கப்படுத்தும் வகையில் அரசின் நடவடிக்கைகள் இருக்க வேண்டும். அடித்தளக் கட்டமைப்புத் துறைகளில் பல திட்டங்கள் இன்னும் மத்திய, மாநில, உள்ளாட்சி அரசுகளின் அனுமதிக்காக இன்னமும் காத்திருக்கின்றன. பல திட்டங்கள் பாதியில் நிற்கின்றன. யார் நடவடிக்கை எடுப்பது? நிலையற்ற இச்சூழலில் தனியார் முதலீட்டாளர்கள் அதிகம் முதலீடு செய்ய முன்வர மாட்டார்கள். அரசுதான் அடித்தளக் கட்டமைப்பில் முதலீட்டை ஊக்குவிக்கும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். ஒரு உதாரணம், கட்டுமானத் துறைக்கு உத்வேகம் அளிக்கும் வகையில் வட்டி வீதத்தைக் குறைத்தது. இது நல்ல விஷயம். ஆனால், நிலம், வீட்டு மனை, அடுக்ககம் போன்றவற்றைக் கட்டி விற்பனை செய்வோர் விலையைச் சிறிது குறைத்தால்தான் விற்பனை சூடுபிடிக்கும். யார் அவர்களிடம் பேசுவது? அரசு செய்ய வேண்டியது நிறைய இருக்கிறது. ஆனால், பேச்சு சத்தம்தான் எப்போதும் கேட்கிறது. பொருளாதாரம் சத்தத்தால் பெருகாது ஐயா!

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024