By ஆசிரியர்
First Published : 12 November 2015 01:46 AM IST
தமிழ்நாட்டில் கடந்த ஒரு வார காலத்தில் மழையினால் 42 பேர் இறந்துள்ளனர். இவர்களில் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்களே அதிகம். மழையினால் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிக்கி இறந்தவர்களைவிட, மழை ஓதம் காரணமாக வீட்டுச் சுவர் இடிந்து விழுந்ததில் இறந்தவர்களே அதிகம். ஓரிருவர் மின் கம்பி அறுந்து விழுந்ததில் இறந்துள்ளனர்.
வானிலை மையத்தின் மழை அறிவிப்பு வெளியானவுடன், அனைத்து மாவட்ட ஆட்சியர்களையும் மீட்புப் பணி மற்றும் மாற்று ஏற்பாடுகள் குறித்து தீவிர கவனம் செலுத்த தமிழக முதல்வர் உத்தரவிட்டிருந்தார். மழைச் சேதங்களுக்கான இழப்பீடுகளை உயர்த்தி அறிவித்திருந்தார். இறந்தவர் குடும்பத்துக்கு வழங்கப்படும் கருணைத் தொகை அளவை இரட்டிப்பாக்கி ரூபாய் நான்கு லட்சமாக அறிவித்திருந்தார்.
இறந்தவர்களின் குடும்பங்கள் அனைத்துக்கும் அரசு அறிவித்த ரூபாய் நான்கு லட்சம் கருணைத் தொகை வழங்கப்பட்டு வருகின்றன. இதனிடையே, மழை வெள்ளத்தால், சுவர் இடிந்ததால், மின் கம்பியால் இறந்தவர்கள் நீங்கலாக, மழைக்கால காய்ச்சலால் இறந்தவர்களையும் இந்தப் பட்டியலில் சேர்த்து ரூபாய் நான்கு லட்சம் பணம் பார்த்துவிடத் துடிக்கும் சில சுயநலக் கூட்டம் கிளம்பியிருக்கிறது. மழை விபத்தினால் இறக்காத போதும், இறந்தவர்களை வைத்துப் பணம் பார்க்க இக்கூட்டம் துடிக்கிறது. இது குறித்து அரசு நிர்வாகம் மிகக் கவனமாக இருக்க வேண்டும்.
வழக்கமாக தீபாவளி நேரத்தில் பட்டாசு வெடிப்போருக்கு சலிப்பு தரும் விதமாக லேசான மழை பல இடங்களில் காணப்படும். ஆனால், நிகழாண்டைப் போல இந்த அளவுக்கு கொட்டித் தீர்த்ததில்லை. தமிழகம் முழுவதிலும் மழை நீடிக்கும் என்றும், குறிப்பாக புதுச்சேரி, கடலூர் மாவட்டங்களில் மழை அதிகமாக இருக்கும் என்றும் வானிலை மையம் தெரிவித்திருந்தது. கடலூரில் அதிகக் கவனம் தரப்பட்டிருந்தால் இந்த மரணங்களின் எண்ணிக்கையை பெருமளவு குறைத்திருக்க முடியும்.
இந்த மழையினால் ஏரிகள் அனைத்தும் நிரம்பியுள்ளன என்பது மகிழ்ச்சி தரும் செய்தி. ஆனால், சாலைகள் அனைத்தும் பொத்தலாகிப் போயின என்பது நகர மக்களின் வேதனை. சாலைகளில் மழை வெள்ளம் தேங்கியதுதான் தார்ச் சாலைகள் பெயர்ந்து போகக் காரணம். மழை நீர் ஒரு மணி நேரத்தில் வடிகின்ற சாலைகளை அமைக்க இன்னமும் நம்மால் முடியவில்லை.
பெருநகரங்களிலும், சிறு நகரங்களிலும் சாலைகளை மட்டுமல்ல, சாலையோரச் சாக்கடைகளையும்கூட ஆக்கிரமிப்பு செய்து குறுக்கியாகிவிட்டது. அதனால், மழையின் அளவு அதிகரிக்கும்போது, இந்தக் குறுகிய சாக்கடைகளால் மழை நீரை வெளியேற்ற முடிவதில்லை. ஆக்கிரமிப்புகளை அகற்றும் தைரியம் அதிகாரிகளுக்கு இல்லை. சில அதிகாரிகள் தைரியமாக நடவடிக்கை எடுத்தாலும், நீதிமன்றத்தை அணுகி இடைக்காலத் தடை பெற்று, நிரந்தரமாக வழக்கை நீட்டிக்கிறார்கள்.
பெரும்பாலான புதிய பேருந்து நிலையங்கள் ஏரிகளின் மீது உருவாக்கப்பட்டவைதான். ஏரிகள் இயல்பாகவே தாழ்வான பகுதியில் அமைக்கப்பட்டவை. அங்கே பேருந்து நிலையங்கள் அமைத்துத் தண்ணீர் உள்ளே புகாதபடி அடைத்து, வேறு இடங்களுக்கு மழை வெள்ளத்தைத் திருப்பிவிடுவதால், புறம்போக்கு நிலங்களில் குடிசை கட்டியிருக்கும் ஏழைகள் பாதிக்கப்படுகிறார்கள். பேருந்து நிலையங்களை அமைக்கும்போது இதுகுறித்து யாரும் கவலைப்படுவதில்லை.
தாழ்வான பகுதிகளிலும், புறம்போக்கு இடங்களிலும் ஆக்கிரமிப்பு செய்து குடிசை போடுவோருக்கு அரசு வேறு இடம் கொடுத்தால், அதைப் பெற்றுக்கொள்கிறார்கள். ஆனால், அவர்கள் அங்கே குடி போவதில்லை. தொழில் செய்ய வசதியாக இருக்கிறது என்று பழைய இடத்திலேயே தொடர்ந்து வசிக்கிறார்கள். இதற்கு உள்ளூர் அரசியல்வாதிகள் ஆதரவும் காரணம்.
தமிழகத்தின் எந்த நகரிலும், எந்தச் சாலையிலும் மழை நின்ற சில நிமிடங்களில் சாலையில் தண்ணீர் இல்லாத நிலைமையை உருவாக்கிட, ஆக்கிரமிப்புகளை அகற்றுவது இன்றியமையாதது. இதற்கு எந்த ஆளும் கட்சியும் தயாராகாது என்பதுதான் யதார்த்த உண்மை.
நகர்ப்புறங்களில் மழை நீர் சாலைகளில் தேங்கி நிற்பதற்கு இன்னொரு முக்கியமான காரணம் நடமாடும் தள்ளுவண்டி உணவங்கள். இதுபோன்ற "கையேந்தி பவன்கள்' ஆங்காங்கே கொட்டுகின்ற மாமிசக் கழிவுகளும், எலும்புத் துண்டுகளும், தட்டின் மீது வைத்துக் கொடுக்கும் பிளாஸ்டிக் காகிதங்களும் ஓடைகளை அடைத்துக் கொள்கின்றன.
கூவத்தின் இருமருங்கிலும் இருக்கும் ஆக்கிரமிப்புகளை தயவுதாட்சண்யம் இல்லாமல் அகற்றினாலே போதும், சென்னையின் கழிவுநீர் பிரச்னை பாதி குறைந்துவிடும். மதுரையின் கிருதுமால் நதி இப்போது ஆறடி ஓடையாக மாறியிருப்பதைப் பற்றி யாரும் கவலைப்படுவதாக இல்லை. இதுதான் அனைத்து நகரங்களின் அவலமும். இதற்கு விடை காணாமல் மழைக்காலங்களில் சாலையில் நீர் தேங்குவதையும், அதன் தொடர்விளைவாக சாலைகள் பழுதடைந்து மக்கள் வரிப்பணம் வீணாவதையும் தடுக்கவே முடியாது.
மழை ஓதம் காரணமாக மண் சுவர் இடிந்து விபத்து நடப்பது இயல்புதான். ஆனால், பள்ளிக்கூடங்களில் தரமற்ற ஒப்பந்தக்காரர்களால் தரமற்று கட்டப்பட்டுள்ள பள்ளிக் கூரைகள் பெயர்ந்து விழுந்தால் மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள். தற்போது விடுமுறை விடப்பட்டுள்ள பள்ளிகள் மீண்டும் திறக்கும்முன்பாக, ஒவ்வோர் அரசுப் பள்ளியையும் பொதுப்பணித் துறைப் பொறியாளர்கள் நேரில் சென்று ஆய்வு செய்து அறிக்கை தரவும், பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு ஆலோசனைகள் வழங்குவதும் அவசியம். குறிப்பாக, கடலூர் மாவட்டத்தில் இதைச் செய்தாக வேண்டும்.
No comments:
Post a Comment