Monday, November 9, 2015

குறள் இனிது: ....வாய்ப்பை விட்டுடாதீங்க, தூள் கிளப்புங்க! ......சோம.வீரப்பன்


இன்று காலையில் எழுந்ததும் நீங்கள் குடித்தது காபியா, டீயா? கும்பகோணமோ, பெங்களுரோ காபிக்குத் தனிமவுசு தான்! பில்டர் காபி, காப்பிசினோ, பிளாக் காபி என வேறுபட்டாலும், கொட்டும் மழையில் பால்கனியிலோ, சாலையோரக் கடையிலோ அமர்ந்து கொண்டு ஆவி பறக்கும் காபியை மெல்ல மெல்ல ரசித்துக்குடிப்பது அலாதி மகிழ்ச்சிதான்! இந்தக் காபியை வைத்தே பெரிய கலக்குகலக்கி பணத்தைக் கொட்ட வைத்துள்ளனர் காபிடே நிறுவனத்தினர்.

20 வருடங்களில் சுமார் 1400-க்கும் மேல் கிளைகள்! விற்பனை ரூ.2,500 கோடியாம்!! அரட்டை அடிப்பதற்காகவே மக்கள் காபி குடிக்க வருவார்கள் எனும் மாபெரும் உண்மையைக் கண்டுபிடித்து அதையே பெரும் வியாபாரமாக்கி விட்டார்கள்!!!

நீங்கள் தங்க நகையை அடகுவைத்துக் கடன் வாங்கியிருக்கிறீர்களோ இல்லையோ, நிச்சயம் முத்தூட் பைனான்ஸ் பற்றித் தெரியாமல் இருக்காது. 128 வருட பழமையான நிறுவனம் என்றாலும், அவர்கள் விசுவரூபம் எடுத்தது 2011-12ல் தான். தங்கம் விலை தாறுமாறாக ஏறியதும், முன்னமே அடகு வைத்த நகையின் மேலேயே அதிகப்பணம் பெற்றுக் கொள்ளுங்கள் எனும் தனித்துவம் காட்டினார்கள்; தங்கத்திற்குக் கதவைத் திறந்து கொண்டார்கள்! இன்று அவர்களுக்கு 4000-க்கும் மேலே கிளைகள்.

நம்ம ஊர் ஸ்ரீகிருஷ்ணா ஸ்வீட்ஸையே எடுத்துக் கொள் ளுங்கள். மைசூர்பாக்கு எனும் நமது பாரம்பரிய இனிப்பை மைசூர்பா என்று பெயர்சுருக்கி, பெயர்சூட்டி இன்று உலகம் முழுவதும் கொண்டு சென்று விட்டார்கள்.

நாம் நம் வாழ்வில் பலமுறை தற்பொழுது சூழ்நிலை சரியில்லை என வருத்தப்படுகின்றோம். அச்சந்தர்ப்பங்களில் அடக்கி வாசிப்பது சரிதான். ஆனால் சில சமயங்களில் நாமே எதிர்பார்க்காத அளவில் சாதகமான சூழ்நிலையும் அமைவது உண்டா இல்லையா? கிடைப்பதற்கு அரிய வாய்ப்பு வரும் பொழுது உடனே அதைப் பயன்படுத்திக் கொண்டு செயற்கரிய சாதனைகளையும் செய்யுங்கள் என்கிறார் வள்ளுவர்.

வாய்ப்புக் கிடைக்கும் பொழுது தவறவிடாமல் பயன்படுத்திக் கொள்வது என்பதுதான் வெற்றி பெற்றவர்கள் பலரிடமும் காணப்படும் ஓர் ஒற்றுமை. அதிகாரம் கொடுக்கப்படுவதில்லை; அது எடுத்துக் கொள்ளப்படுவது என்பார்கள்! வாய்ப்புகளும் அப்படித்தானே!! பிஎஸ்என்எல் பல ஆண்டுகளாக இருந்துவரும் நிறுவனம். வீட்டுத் தொலைபேசியின் உபயோகம் குறைந்து, கைபேசியின் ஆதிக்கம் தொடங்கிய பொழுது மகத்தான வாய்ப்புகள் உருவாகின. ஆனால் அந்நிறுவனம் கோட்டை விட்டது. அக்கோட்டையை ஏர்டெல் போன்ற நிறுவனங்கள் பிடித்துக் கொண்டன.

வாய்ப்புகளை நாம் தவறவிடுவதற்குக் காரணம் அவை கடினமான சவால்களைப் போலத் தோற்றமளிப்பதுதான் என்றார் தாமஸ் ஆல்வா எடிசன். எனவே அரிய வாய்ப்புகளை அடையாளம் கண்டு கொள்ளுங்கள். தப்பிவிடாமல் பிடித்துக் கொள்ளுங்கள். வெற்றிக் கொடி நாட்டுங்கள்!

எய்தற்கு அரியது இயைந்தக்கால் அந்நிலையே

செய்தற்கு அரிய செயல் (குறள் 489)

தொடர்புக்கு: somaiah.veerappan@gmail.com

No comments:

Post a Comment

NEWS TODAY 14,11,2024