அந்தமான் அருகே உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு நிலையால் தமிழகத்தில் மீண்டும் கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. இந்த ஆண்டு மழை அளவு அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. சமீபத்தில் வங்கக்கடலில் உருவான தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம், புதுச்சேரி அருகே கடந்த 9-ம் தேதி இரவு கரையைக் கடந்தது. இதனால், தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. நேற்றைய நிலவரப்படி சராசரியாக 31 செ.மீ. மழை கிடைத்துள்ளது.
புதிய காற்றழுத்தம்
இந்நிலையில், லட்சத்தீவுகள் மற்றும் அதை ஒட்டிய பகுதியில் நிலைகொண்டிருந்த வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தென்கிழக்கு, அதை ஒட்டிய கிழக்கு மத்திய அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தின் தென் மாவட்டங்களில் பெரும்பாலான பகுதிகளிலும் வட மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளிலும் இன்று மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். வட கடலோர மாவட்டங்களில் ஆங்காங்கே கனமழைக்கும் வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும், தெற்கு அந்தமான் கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது. இதனுடன், வளிமண்டல மேலடுக்கு சுழற்சியும் நிலவி வருகிறது. இதன் பாதிப்பால், தென்கிழக்கு வங்கக்கடலில் 14-ம் தேதி (நாளை) காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும். இதனால், நாளை முதல் வட தமிழகத்தில் பெரும்பாலான பகுதிகளிலும் உள் மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், நாகை, கடலூர் உள்ளிட்ட வட கடலோர மாவட் டங்கள், புதுச்சேரியில் நாளை கனமழையும், நாளை மறுதினம் முதல் மிக கனமழைக்கும் வாய்ப்புள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதிகபட்ச மழை
வியாழக்கிழமை காலை வரையான 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக காஞ்சிபுரம், பெரும்புதூர் மற்றும் செய்யூரில் 10 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. அரக்கோணம்-9, மதுராந்தகம்-8, சென்னை விமான நிலையம், திண்டுக்கல்-7, தாம்பரம், நுங்கம் பாக்கம்-6 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
No comments:
Post a Comment