Wednesday, November 25, 2015

திருமணங்களும், தனி மனித பொருளாதாரமும்!

Dinamani


By எஸ். ராமன்

First Published : 23 November 2015 12:56 AM IST


தனி மனித வாழ்க்கையில், திருமணம் என்பது ஒரு முக்கிய நிகழ்வாகும். அந்த நிகழ்வு, பலருடைய வாழ்வில் ஒரு திருப்பு முனையாகவும் அமைகிறது. சமூகத்தில் பல மட்டங்களில் உள்ளவர்கள், தங்கள் சமூக அந்தஸ்துக்கு ஏற்றபடி, திருமண நிகழ்ச்சியை நடத்துகின்றனர். அதற்குத் தகுந்தாற்போல், திருமண செலவினங்களிலும் பெருத்த வேறுபாடுகள் காணப்படுகின்றன. தங்கள் வருமானத்துக்கு மேல், திருமண செலவுகள் செய்வதற்கு, இந்திய நடுத்தர வர்க்கம் தயங்குவதில்லை. கல்வி செலவைவிட, திருமண செலவுகள் பல மடங்கு அதிகம் என்பதுதான் உண்மை.
நடுத்தர வர்க்கத்தினரைப் பொருத்தவரை குடும்ப திருமணங்கள், சந்தோஷ சுமைகளாக அமைகின்றன என்று சொன்னால் அது மிகையாகாது. பெண்ணைப் பெற்றவர்களுக்கு திருமண நிகழ்வுகள் சந்தோஷத்தை அளித்தாலும், அது பெரும் பொருளாதார சுமையாகவும் உருவெடுத்து, வாழ்க்கை முழுவதும் அந்த சுமை அவர்களை அழுத்துகிறது என்பதுதான் நடைமுறை நிகழ்வுகளாகும்.
நம் சமூக அமைப்பைப் பொருத்தவரை, பெண்ணின் பெற்றோர்கள்தான் பெரும்பாலும் அந்த பொருளாதாரச் சுமையைச் சுமக்கின்றனர். தங்கள் பெண்ணின் நிம்மதியான எதிர்கால வாழ்க்கைக்கு வழிவகுக்கும், அத்தியாவசிய முதலீடாகத்தான் பெற்றோர்கள் அந்தச் சுமையைக் கருதுகின்றனர். இது ஒரு சூதாட்டம் போல்தான். பெண்ணின் வாழ்க்கை, எதிர்பார்த்ததுபோல் சரியாக அமையவில்லை என்றால், பொருளாதாரச் சுமையோடு, மனக்கஷ்டத்தையும் சேர்த்து, அவர்கள் சுமக்க ஆரம்பிக்கின்றனர்.
வரதட்சணை பரிமாற்றம் சட்டத்தால் தடை செய்யப்பட்டது என்றாலும், அதை அனைத்து தரப்பினரும் மதித்து செயல்படுவதாகத் தெரியவில்லை. மணமகனின் படிப்பு, வேலை, சம்பளம், குடும்பச் சொத்து மற்றும் பிற வருமானங்களைச் சுற்றி வரதட்சணை தேவைகள் வட்டமிடுகின்றன.
மணமகளின் கல்வித் தகுதி, வேலை, மாத வருவாய் ஆகிய காரணிகள் வரதட்சணை அளவீட்டை ஓரளவு குறைக்கும் வல்லமை படைத்தவை. நாங்கள் ஒன்றும் கேட்கமாட்டோம். ஆனால், உங்கள் பெண்ணுக்கு செய்ய வேண்டியதை செய்யுங்கள் என்ற பிள்ளை வீட்டாரின் பொதுவான பேச்சு, அளவு எல்லையை நிர்ணயிக்காமல் அவர்கள் எதிர்பார்க்கின்றனர் என்பதற்கான அடையாளமாக எடுத்துக் கொள்ளப்படுகிறது.
அவர்கள் வீட்டின் இன்னொரு ஆண் பிள்ளைக்கு ஏற்கெனவே திருமணம் முடிந்திருந்தால், குறைந்தபட்சம் அந்தப் பிள்ளைக்கு வழங்கப்பட்ட சீர் வரிசைக்கு இணையாக பொன்னையும், பொருளையும், தங்கள் பெண்ணுக்கு பெற்றோர் கொடுக்க வேண்டும். அவர்கள் வீட்டுப் பெண்ணின் திருமணத்துக்குக் கொடுக்கப்பட்ட சீர்வரிசையின் மதிப்பீடும் ஒரு முக்கிய அளவுகோலாக கருதப்படும் என்பது, பெண்ணை பெற்றவர்களுக்கிடையே எழுதப்படாத நியதியாக அமைந்துவிட்டது.
20 ஆண்டுகளுக்கு மேலான உழைப்பில், பெற்றோர் சிறு சிறு துளிகளாகச் சேர்த்த சேமிப்பு, இரண்டு நாள் திருமண செலவில் கரைந்து, அது பெரும்பாலும் வாழ்நாள் கடன் சுமையோடு முடிவடைகிறது. பெரும்பாலான நடுத்தர குடும்ப திருமண நிகழ்வுகளுக்கு வீடு, நிலம் மற்றும் பிற சொத்துகள் அடமானம் வைக்கப்படுகின்றன அல்லது விற்கப்படுகின்றன.
இம்மாதிரி செலவுகள், திருமண வைபவத்தோடு மற்றும் முடிவடைவதில்லை. திருமணத்திற்கு பின்பும் தீபாவளி, பொங்கல் உள்பட பல பண்டிகைகளில் ஆரம்பித்து, குழந்தை பிறப்பு வரையிலான நிகழ்வுகள் வரை செலவுகள் தொடர்கின்றன. இதனால், பெற்றோரின் கடன் சுமையும், அதற்கான வட்டி சுமையும் அதிகரிக்கின்றன.
திருமணத்துக்கான செலவுகளை, அவசியமானவை, அவசியமற்றவை என்று இரு பிரிவுகளாகப் பிரிக்கலாம். அவசிய செலவுகளில் அழைப்பிதழ், திருமண சத்திரம் மற்றும் சாப்பாடு சார்ந்த செலவுகள் முங்கியப் பங்கு வகிக்கின்றன. அவசியம் அழைக்கப்பட வேண்டியவர்களின் பட்டியலை ஆழ்ந்த ஆலோசனைகளுக்கு பிறகு தயாரித்து, அந்த எண்ணிக்கையின் அடிப்படையில்தான் பத்திரிகைகள் அச்சடிக்கப்பட வேண்டும். தொலைபேசி மூலமும் அழைப்பு விடுக்கலாம். இதனால், போக்குவரத்து செலவும் குறைய வாய்ப்பிருக்கிறது.
சத்திரங்களைப் பொறுத்தவரை, அவைகளுக்கு செலுத்தப்பட வேண்டிய மொத்த கட்டணத் தொகையில், தவிர்க்கப்படக்கூடிய பல கட்டணங்கள் ஒளிந்திருக்கின்றன. ஆகையால், சத்திர பயன்பாட்டுக்கான பல்வேறு கட்டணங்களின் முழு விவரங்களை முன்கூட்டியே விசாரித்து அறிந்து, அவைகளில் அவசியமற்ற செலவுகளுக்கு சம்மதத்தை மறுப்பதால், கணிசமான தொகையை மிச்சப்படுத்த முடியும்.
உதாரணமாக, தார்ப் பாய், தலையணைகள், ஜமுக்காளம், மின்விசிறி, ஏ.சி, ஜெனரேட்டர், மின் கட்டணம், பாதுகாப்பு, துப்புரவாளர்கள் ஆகியவற்றுக்கான கட்டணங்கள், கடைசிக்கட்ட பில் தொகையில் வெகுவாக மிகைப்படுத்தப்பட்டிருக்கும். சத்திரத்தில் உள்ள பல்வேறு வசதிகளைப் பயன்படுத்தாவிட்டாலும், அவைகளுக்கான கட்டணங்கள், பில் தொகையில் பட்டியலிடப்பட்டிருக்கும்.
ஜெனரேட்டர் ஓடாவிட்டாலும், அதற்கான ஒரு நாள் வாடகையாக ரூ.5,000 முதல் ரூ.10,000 வரை வசூலிக்கப்பட்டுவிடும். இரண்டு துப்புரவுப் பணியாளர்கள் பணி செய்யும் சிறிய சத்திர பயன்பாட்டில், 20 துப்புரவாளர்களுக்கான கட்டணத் தொகை உள் அடங்கியிருக்கும். முன்கூட்டியே சத்திர நிர்வாகத்திடம் சுமுகமாகப் பேசி, கட்டணங்களைப் பற்றிய முழு விவரங்களைக் கேட்டறிந்து, செலவினங்களை குறைக்க முற்பட்டால், பொருள் செலவு ஓரளவு மிச்சமாகும்.
தற்காலத்தில், வசதி படைத்தவர்களின் வீட்டுத் திருமணங்களில்கூட, முகூர்த்தம் மற்றும் வரவேற்பு நிகழ்ச்சிகளுக்கு தனித் தனி அழைப்பிதழ்கள் கொடுக்கப்படுகின்றன. நெருங்கிய சுற்றத்தினர் மட்டும் முகூர்த்த நிகழ்ச்சிக்கும், நண்பர்கள் வரவேற்புக்கும் அழைக்கப்படுகின்றனர். இந்த முறையில், பல்வேறு செலவினங்கள் குறைய வாய்ப்பிருப்பதால், இதையே மற்ற தரப்பினரும் பின்பற்றலாம்.
திருமண ஏற்பாடுகள் அனைத்தையும், ஒப்பந்தக்காரர்களிடம் விடும் முறை, இப்பொழுது வேரூன்றிவிட்டது எனலாம். ஒப்பந்தக் கட்டணங்களில் உள்ளடங்கிய விவரங்களைக் கேட்டு அறிந்து, தேவை இல்லாதவைகளை ஒப்பந்தப் பட்டியலிலிருந்து நீக்குவதன் மூலம் செலவை ஓரளவு குறைக்கலாம்.
உணவு பரிமாறப்படும் கூடத்தின் மேற்பார்வைக்கென நெருங்கிய உறவினர் அல்லது நண்பரை நியமிப்பதால், விருந்தோம்பலை பேணிக் காப்பதோடு மட்டுமல்லாமல், உணவு வீணாவதையும் தடுக்கலாம். தனியாக ஆள் இல்லாத இலைகளில்கூட சாப்பாடு பரிமாறி, அதற்கும் சேர்த்து கட்டணம் கணக்கிடுவதை மேற்பார்வையாளர் தடுக்கலாம். உணவு பந்திகள், அக்கறையுடன் மேற்பார்வையிடப்பட்டால், வீணாகும் செலவுகளைக் குறைக்க அது பெருமளவில் வழி வகுக்கும்.
கடன் வாங்கி கொண்டாடப்படும் திருமணங்களில், பிள்ளை வீட்டார், தங்களுக்குத் தெரிந்த எண்ணற்ற நபர்களுக்கு அழைப்பு விடுக்கும் பழக்கம் இன்றும் நிலவுகிறது. பெண்ணைப் பெற்றவர்கள் இந்த செலவுகளை முழுவதும் ஏற்பது நியாயமாகாது. இம்மாதிரி சூழ்நிலையில், பிள்ளை வீட்டினரும், விருந்து செலவின் ஒரு பகுதியை ஏற்றுக்கொள்வதுதான் சரியான முறையாகும்.
காதல் திருமணங்கள் சகஜமாகிவிட்ட இந்த காலக் கட்டத்தில், திருமண செலவுகளை பெருமளவு குறைப்பதோடு மட்டுமல்லாமல், அந்த செலவுகளை பெண்ணைப் பெற்றவர்கள் மீது மட்டும் பெருமளவில் சுமத்தாமல், இரு தரப்பினரும் சம பங்கில் ஏற்றுக்கொள்ளும் உடன்பாடுகளையும், மாப்பிள்ளையும், பெண்ணும் தங்கள் பெற்றோரிடம் விளக்கி சம்மதிக்க வைக்கவேண்டும். இக்கால இளம் பெண்கள், பெரும்பாலும் ஆடம்பர நகைகளை அணிவதில்லை.
ஆகையால், மாப்பிள்ளையின் பெற்றோர்கள், தங்க நகைகளுக்கான தேவையைக் குறைத்துக்கொள்ளும் வழக்கத்தை மேற்கொள்ள வேண்டும். தங்கள் பெண்களுக்கு தங்கம் வழங்க விரும்பும் பெற்றோர்கள், மத்திய அரசால் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட வட்டி ஈட்டக்கூடிய தங்கப் பத்திரங்களில் முதலீடு செய்து, அதை பரிசாக வழங்கலாம்.
பெண் குழந்தையின் எட்டு வயது முதல், அவளுடைய கல்வி, திருமணச் செலவுகளுக்கு பெற்றோர்கள் சேமிக்கத் துவங்க வேண்டும். வங்கி வைப்பு நிதிகளின் மீதான வட்டி விகிதம், பண வீக்கத்திலிருந்து முற்றிலும் பாதுகாப்பு அளிப்பதில்லை.
ஆகவே, சேமிப்பின் ஒரு பகுதியை, முறையான தொடர் முதலீட்டு முறையின் மூலம் பங்கு மூலதனம் சார்ந்த மியூச்சுவல் ஃபண்டுகளிலும், மற்றொரு பகுதியை பங்கு மூலதனம் மற்றும் கடன்பத்திரங்களை உள் அடக்கிய மியூச்சுவல்
ஃபண்டு திட்டங்களிலும் முதலீடு செய்வதால், பண வீக்கத்தைத் தாண்டிய பொருளாதார பலனைப் பெறலாம்.
பொருளாதாரத் தகுதிக்கு அப்பாற்பட்ட, பிரமாண்ட திருமணங்களால், தங்கள் பெண்ணின் இல்லற வாழ்க்கையின் தரத்தை உயர்த்திவிடலாம் என்ற எண்ணங்கள் பெற்றோர்களால் களையப்பட வேண்டும். மணமகனுக்கும், மணப்பெண்ணுக்கும் இடையேயான மனப்பொருத்தம் மட்டும்தான் அதை சாதிக்க முடியும் என்பதை உணர வேண்டும்.
பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் உடல் வளர்ப்பு மட்டுமன்றி, தெளிவும், ஆரோக்கியமும் மிகுந்த மன வளர்ப்பிலும் கவனம் செலுத்தினால், வாழ்க்கையில் எத்தகைய சூழ்நிலைக்கும் அவர்கள் தங்களை தயார்ப்படுத்திக்கொள்ள அது உதவும்.
தங்கள் திருமணத்திற்குப் பிறகு, பெற்றோர்களை நிரந்தர கடனாளியாக்காத திருமணங்களை திட்டமிடுவதில், தற்கால இளைய சமுதாயத்திற்கு பெரும் பங்கும், பொறுப்பும் உள்ளது என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.
20 ஆண்டுகளுக்கு மேலான உழைப்பில், பெற்றோர் சிறு சிறு துளிகளாகச் சேர்த்த சேமிப்பு, இரண்டு நாள் திருமண செலவில் கரைந்து, அது பெரும்பாலும் வாழ்நாள் கடன் சுமையோடு முடிவடைகிறது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024