Wednesday, November 18, 2015

மீட்பு பணியில் முப்படை தீவிரம்; சென்னையில் மழை நின்ற பிறகும் ஓயாத துயரம்

daily thanthi

மாற்றம் செய்த நாள்:
புதன், நவம்பர் 18,2015, 6:00 AM IST
பதிவு செய்த நாள்:
புதன், நவம்பர் 18,2015, 4:25 AM IST
சென்னை,

சென்னை நகரில் கடந்த சனிக்கிழமை தொடங்கி 3 நாட்களாக தொடர்ந்து பெய்த மழை நகரையே புரட்டிப்போட்டு விட்டது.

இயல்பு வாழ்க்கை பாதிப்பு

சாலைகளில் தேங்கிய வெள்ளம், போக்குவரத்து பாதிப்பு, குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்த மழைநீர், வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் தவிப்பு என மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.

சென்னை நகரில் நேற்று மழை இல்லை. இதனால், தொடர் மழையில் சிக்கி தவித்த சென்னைவாசிகள் சற்று நிம்மதி அடைந்தனர்.

மழைநீர் வடியத் தொடங்கியது

புரசைவாக்கம், புளியந்தோப்பு, ஓட்டேரி, பெரம்பூர், வியாசர்பாடி, நுங்கம்பாக்கம், சைதாப்பேட்டை, மாம்பலம், அரும்பாக்கம், கோயம்பேடு, அண்ணாநகர், திருமங்கலம், பாடி, கொரட்டூர், கொளத்தூர், மாதவரம், சேத்துப்பட்டு, கீழ்ப்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சாலைகளில் தேங்கிய மழை நீர் வடியத் தொடங்கியது.

கே.கே.நகர், எம்.எம்.டி.ஏ. காலனி, சின்மயா நகர், விஜயராகவபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தேங்கிய மழை நீரை அதிக குதிரை திறன் கொண்ட ‘டீசல்’ பம்புகள் மூலம் அகற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் மும்முரமாக ஈடுபட்டனர். மழைநீர் வடிகால்வாய்களில் மழைநீர் தங்கு, தடையின்றி வடியும் வகையில் அடைப்புகள் நீக்கப்பட்டு வருகின்றன.

பஸ்கள் வழக்கம்போல் இயங்கின

பிரதான சாலைகளில் முழங்கால் அளவுக்கு மேல் தேங்கியிருந்த மழை நீர் வடியத் தொடங்கியதால், கடந்த சில தினங்களாக பாதிக்கப்பட்ட மாநகர போக்குவரத்து பஸ் சேவை நேற்று சீரடைந்தது.

சென்னை நகரிலும், புறநகர் பகுதிகளிலும் உள்ள அனைத்து வழித்தடங்களிலும் வழக்கம்போல் பஸ்கள் இயக்கப்பட்டன. இதனால் பொதுமக்கள் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு எளிதாக செல்ல முடிந்தது.

துயரம் ஓயவில்லை

ஆனால் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை, மழை நின்ற போதிலும் மக்களின் துயரம் ஓய்ந்தபாடில்லை. குடியிருப்பு பகுதிகளில் தேங்கிய தண்ணீர் இன்னும் வடியாமல் அப்படியே உள்ளது. இதனால் மக்கள் பெரிதும் அவதிக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.

புறநகரில் தாழ்வான குடியிருப்பு பகுதிகளில் உள்ள வீடுகளை சுற்றி ஏற்கனவே தண்ணீர் தேங்கி நின்ற நிலையில் ஏரிகள், குளங்களில் ஏற்பட்ட உடைப்பு காரணமாக பெருக்கெடுத்த வெள்ளம் அந்த பகுதிகளில் மேலும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. சில குடியிருப்புகளில் தரை தளம் அளவுக்கு தண்ணீர் தேங்கி உள்ளது. சில வீடுகளில் உள்ளவர்கள் மொட்டை மாடியில் தஞ்சம் அடைந்து உள்ளனர். குடிநீர், உணவு, பால் போன்ற அத்தியாவசிய பொருட்கள் இல்லாமல் அவர்கள் தவிக்கிறார்கள்.

மேற்கு தாம்பரம், முடிச்சூர், வேளச்சேரி ஆகிய பகுதிகள் வெள்ளக்காடாக காட்சி அளிக்கின்றன. மேற்கு தாம்பரம், முடிச்சூர் பகுதிகளில் உள்ள வீடுகள் தண்ணீரில் மூழ்கி உள்ளன. வீடுகளில் சுமார் 5 அடி உயரத்துக்கு தண்ணீர் நிற்கிறது. கார்கள், இருசக்கர வாகனங்கள் தண்ணீரில் மூழ்கிய நிலையில் அப்படியே நிற்கின்றன.

மீட்பு பணியில் முப்படையினர்

மழை வெள்ளத்தில் சிக்கி தவிப்பவர்களை மீட்கும் முயற்சியில் தீயணைப்பு படையினர், மாநில பேரிடர் மீட்பு படையினர், தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் ஈடுபட்டு உள்ளனர். இவர்களுடன் ராணுவம், கடற்படை, விமானப்படையைச் சேர்ந்த வீரர்களும், கடலோர பாதுகாப்பு படை வீரர்களும் மழை, வெள்ளத்தில் சிக்கி தவிக்கும் மக்களை மீட்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு இருக்கிறார்கள்.

தீயணைப்பு துறையினர், மீன்வளத்துறையினர் ஆகியோருடன் போலீசார் இணைந்து 130 படகுகளின் உதவியுடன் 11 இடங்களில் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். தாம்பரம் நகராட்சி, பெருங்களத்தூர் பேரூராட்சி, வரதராஜபுரம் ஊராட்சி, திருமுடிவாக்கம் ஊராட்சி பகுதிகளில் சிக்கித்தவித்த சுமார் 13 ஆயிரம் பேர் மீட்கப்பட்டனர்.

ஹெலிகாப்டர் மூலம் மீட்பு

சில இடங்களில் ஹெலிகாப்டர்கள் மூலம் பலர் மீட்கப்பட்டனர். தாம்பரம் சி.டி.ஓ. காலனி, புளுஜாக்கர், வரதராஜபுரம், பல்லவன் குடியிருப்பு, ராயப்பா நகர், திருமுடிவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளத்தில் சிக்கி தவிக்கும் மக்களுக்கு விமானப்படை ஹெலிகாப்டர்கள் மூலம் உணவுப்பொட்டலங்கள், பிஸ்கெட், குடிநீர் பாட்டில்கள் வழங்கப்பட்டன.

சிலர் வீடுகளின் மொட்டை மாடியில் நின்றபடி உணவு குடிநீர் கேட்டு குரல் எழுப்பினார்கள். ஹெலிகாப்டர்கள் மூலம் அவர்களுக்கு உணவுப்பொட்டலங்களும், குடிநீர் பாட்டில்களும் போடப்பட்டன.

மண்ணிவாக்கம் பகுதியில், மழைநீர் சூழ்ந்ததால் வீடுகளில் சிக்கித்தவித்த 150 பேரை ரப்பர் படகு மூலம் தீயணைப்பு படையினர் மீட்டனர்.

வேளச்சேரியில் விஜயநகர் 13-வது பிரதான சாலை, 8-வது பிரதான சாலை, சங்கர் நகர் உள்பட பல்வேறு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்து உள்ளது. அப்பகுதிகளில் உள்ள வீடுகளில் மழைநீர் புகுந்ததால், அத்தியாவசிய பொருட்கள்கூட வாங்க முடியாமல் தவித்தனர். அவர்களை தனியார் பங்களிப்புடன் போலீசார் படகுகள் மூலம் மீட்டு வெளியே கொண்டுவந்தனர். மேலும் வீடுகளின் உள்ளேயே முடங்கியவர்களுக்கு தண்ணீர், பிஸ்கெட், உணவு பொட்டலங்கள், பால் உள்ளிட்ட பொருட்களும் வினியோகிக்கப்பட்டது.

குடிசைகள் மூழ்கின

செம்பரம்பாக்கம் ஏரி திறக்கப்பட்டதால் அடையாறு ஆற்றின் கரையோரம் உள்ள பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. சைதாப்பேட்டை பாலம் அருகே கரையோரம் வசித்த மக்கள் அங்கிருந்து பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர். ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடிசை வீடுகள் வெள்ளத்தில் மூழ்கி உள்ளன.

அடையாறு ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக கோட்டூர்புரத்தில் உள்ள வீட்டுவசதி வாரிய குடியிருப்புக்குள் வெள்ளம் சூழ்ந்தது. இதனால் தரை தளத்தில் உள்ள வீடுகளின் உள்ளே மழை நீர் புகுந்தது. மாடி வீடுகளில் இருப்பவர்கள் உள்ளேயே முடங்கி உள்ளனர்.

அனகாபுத்தூர், பொழிச்சலூர், கவுல்பஜார் ஆகிய பகுதிகளில் தாழ்வான இடங்களில் வெள்ளம் புகுந்ததால், அங்கு உள்ளவர்கள் வீடுகளை விட்டு வெளியேறி விட்டனர்.

ஜாபர்கான் பேட்டை பாரி நகர் கரிகாலன் தெரு, காந்தி நகர் பகுதிகளை வெள்ளம் சூழ்ந்ததால் அப்பகுதிகளில் உள்ளவர்களை தீயணைப்பு படையினர் படகு மூலம் மீட்டு பத்திரமாக கொண்டு வந்து கரை சேர்த்தனர்.

கூவம் நதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக, அமைந்தகரையில் கூவம் ஆற்றின் கரையோரம் வசித்து வந்தவர்கள் வெளியேற்றப்பட்டனர்.

அறிக்கை

இந்திய பாதுகாப்பு துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

மாநில அரசு கேட்டுக்கொண்டதற்கு இணங்க, சென்னை மற்றும் காஞ்சீபுரம் மாவட்டங்களில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களில் மீட்பு மற்றும் நிவாரண பணிகளில் இந்திய ராணுவத்தினர் கடந்த 16-ந் தேதியில் இருந்து ஈடுபட்டு வருகின்றனர். நேற்று வரை வெள்ளநீர் சூழ்ந்த பகுதியில் இருந்து 882 பேர் படகுகள் மற்றும் உயிர்காக்கும் உடை (லைப் ஜாக்கெட்) மூலம் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். 320 பேருக்கு உணவு, தண்ணீர் வழங்கப்பட்டன. 150 பேருக்கு மருத்துவ உதவிகளும் அளிக்கப்பட்டன. குறிப்பாக நேற்று முடிச்சூர், சமத்துவ பெரியார் நகர், திருநீர்மலை, அனகாபுத்தூர் மற்றும் சோழிங்கநல்லூர் பகுதிகளில் ராணுவத்தினர் மீட்பு, நிவாரண பணிகளில் ஈடுபட்டனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது. 

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024