Tuesday, November 17, 2015

அனுமதிப்பதில் தவறில்லை!


Dinamani

By ஆசிரியர்

First Published : 17 November 2015 01:55 AM IST


வெளிநாட்டவர் இந்தியாவில் வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற அனுமதியில்லை என்று மத்திய அரசு அண்மையில் வெளியிட்ட அறிக்கைக்கு செயற்கைக் கருவூட்டல் தொழில்நுட்ப மையங்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன. அவர்களைப் பொருத்தவரை இது வணிகம். வெளிநாட்டினர் மூலம்தான் இந்த வணிகம் சாத்தியம்.
வெளிநாட்டினர் இங்கு வந்து வாடகைத் தாய் மூலம் குழந்தை பெறுவதற்கு ஆகும் செலவு ரூ.20 லட்சம் முதல் ரூ.30 லட்சம் வரை. அது மேலை நாடுகளின் மருத்துவச் செலவுடன் ஒப்பிடும்போது மிகமிகக் குறைவு. ஆண்டுக்கு 2,000 குழந்தைகள் வாடகைத்தாய் மூலம் பிறக்கின்றன. இந்தியர்களில் சிலரும் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெறுகின்றனர் என்றாலும், அவர்கள் எண்ணிக்கையில் மிகக் குறைவு. ஆகவே, செயற்கைக் கருவூட்டல் தொழில்நுட்ப மையங்கள் வெளிநாட்டினருக்கு அனுமதி மறுக்கப்படுவதை எதிர்க்கின்றன.
கடந்த ஆண்டு ஜூலை மாதம், தாய்லாந்து நாட்டில் ஒரு வாடகைத் தாய்க்கு நேர்ந்த துயரச் சம்பவம்தான் அரசின் முடிவுக்குக் காரணம். ஐம்புவா என்ற அந்தப் பெண்மணி ஆஸ்திரேலிய தம்பதிக்காக குழந்தை பெற ஒப்புக் கொண்டார். கரு வளர்ந்த நிலையில் அது இரட்டையர் எனத் தெரிய வந்தது. ஓர் ஆண், ஒரு பெண். ஆண் குழந்தை மூளைவளர்ச்சி குறைவான குழந்தையாக இருக்கும் என்று மருத்துவர்கள் கூறியதால், கருவைக் கலைக்க முடியாத நிலை, ஆஸ்திரேலியத் தம்பதி, பெண் குழந்தையை மட்டும் எடுத்துக்கொண்டு சென்றனர். ஆண் குழந்தையை வளர்க்க போதிய நிதி இல்லாமல், இந்த வாடகைத்தாய் வேண்டுகோள் விடுத்தபோது இந்த விவகாரம் உலகம் முழுதும் பேசப்படுவதாக மாறியது.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, தாய்லாந்து அரசு, வெளிநாட்டவர் அங்கே வந்து வாடகைத்தாய் மூலம் குழந்தை பெறுவதைத் தடை செய்துள்ளது. தற்போது இந்தியாவும் அதேபோன்று தடை விதித்துள்ளது.
கடந்த மாதம் இந்தப் பிரச்னை தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் "வணிக ரீதியிலான செயற்கைக் கருவூட்டலை ஆதரிக்கவில்லை' என்று மத்திய அரசு தனது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தி இருக்கிறது. வாடகைத் தாய்க்கான மருத்துவச் செலவுகளுடன், குழந்தையைச் சுமந்து பெற்றுக் கொடுத்ததற்குப் பணமும் தரப்படும் என்கிற நிலையில், இதை அந்தத் தாயின் சுதந்திரமாகத்தான் கருத வேண்டுமே தவிர, அரசு ஏன் தடுக்க வேண்டும் என்பது புரியவில்லை.
கடந்த பத்து ஆண்டுகளாகவே வெளிநாட்டினர் பலர் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெறுவதற்கு இந்தியா வருவது அதிகரித்து வருகிறது. இந்தியாவில் ஏறத்தாழ 3,000-க்கும் அதிகமான செயற்கைக் கருவூட்டல் மையங்கள் இவர்களை நம்பிக் கடை விரித்திருக்கின்றன. உலகிலேயே, சட்டப்படி வணிகரீதியிலான செயற்கைக் கருத்தரித்தலை அனுமதிக்கும் ஒருசில நாடுகளில் இந்தியாவும் ஒன்று என்பதுதான் அதற்குக் காரணம்.
இந்திய அரசு வெளிநாட்டினருக்குத் தடை விதித்ததற்குப் பதிலாக, கிடப்பில் உள்ள செயற்கை கருவூட்டல் தொழில்நுட்ப (ஒழுங்காற்று) சட்டம் 2014-யை நிறைவேற்றினாலே போதும். இதில் பல்வேறு சிக்கல்களுக்கு இயல்பான முடிவுகள் எட்டப்படும். இச்சட்டம் மிகத் தெளிவாக விதிமுறைகளை வகுத்துள்ளது. இதன்படி, தம்பதியில் ஒருவர் மலடாக இருந்தால் மட்டுமே வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற அனுமதிக்கப்படுவார். அவர் இந்தியராக, அல்லது இந்தியரைத் திருமணம் செய்த வெளிநாட்டவராக, அல்லது வெளிநாடு வாழ் இந்தியர் அல்லது புலம்பெயர் இந்தியர், இந்திய வம்சாவளியினராக இருந்தால் அனுமதிக்கப்படுவர். வாடகைத் தாய்க்கோ, குழந்தைக்கோ ஏற்படக்கூடிய பேறுகாலச் செலவும், பேறுகால அசம்பாவிதங்கள் அனைத்துக்கும் பொறுப்பேற்கும் விதமாகக் காப்பீடு செய்ய வேண்டும். வாடகைத் தாய்க்கு அளிக்கப்படும் தொகையை ஒப்பந்தமாக வழங்க வேண்டும்.
இதேபோன்று, வாடகைத் தாய்க்கும் நிபந்தனைகளை இச்சட்டம் விதித்துள்ளது. அவர் இந்தியக் குடிமகளாக இருக்க வேண்டும். 23 முதல் 35 வயதுக்கு இடைப்பட்டவராகவும், ஏற்கெனவே ஒரு குழந்தை பெற்று, அக்குழந்தைக்கு குறைந்தது 3 வயது நிறைவடைந்திருக்க வேண்டும். ஒருமுறை மட்டுமே வாடகைத்தாயாக இருக்கலாம். வாடகைத்தாய் சுமக்கும் குழந்தைக்காக அவர் சினை முட்டை தானம் செய்வது கூடாது. வாடகைத் தாய், குழந்தையை ஏற்கும் தாய் ஆகியோருடைய ரகசியம் காக்கப்பட வேண்டும். குழந்தை பிறப்பு பதிவு செய்யும்போது, குழந்தையை ஏற்கும் தம்பதியே தாய் - தந்தையராகக் குறிக்கப்பட்டு சான்றிதழ் வழங்கலாம்.
இவ்வளவு தெளிவான சட்ட விதிமுறைகள் உள்ள ஒரு சட்டத்தை இன்னமும் நாம் நிறைவேற்றாமல் இருப்பது சரியல்ல. குறிப்பாக, தாய்லாந்தில் வெளிநாட்டவர் வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற முடியாது என்று நிலை உருவான பின்னர், இந்தியாவுக்கு வருவோர் எண்ணிக்கை அதிகரிக்கும் நிலையில், இந்தச் சட்டத்தை நிச்சயமாக விரைவில் கொண்டு வந்தாக வேண்டும்.
செயற்கைக் கருவூட்டல் என்பது இன்றைய அளவில் இந்தியாவில் ஆண்டொன்றுக்கு 2,500 கோடி டாலர்கள் புழங்கும் தொழில். இவ்வளவு பணமும் வெளிநாட்டினரால்தான் இந்தியாவுக்குக் கிடைத்து வருகிறது. இந்தப் பணத்தின் மூலம் பெரும் பயனடைவது கருவூட்டல் மையங்கள்தானே தவிர, ஏழை வாடகைத் தாய் அல்ல. அதனால், ஏழை மகளிருக்குப் பாதுகாப்பும், உரிய பணமும் கிடைப்பதை அரசு, செயற்கைக் கருவூட்டல் தொழில்நுட்ப (ஒழுங்காற்று) சட்டத்தை நிறைவேற்றுவதன் மூலம் உறுதிப்படுத்துவதுதான் இன்றைய தேவை. வாடகைத் தாய் மூலம் குழந்தை கேட்பவர் இந்தியரா, வெளிநாட்டவரா என்பதல்ல முக்கியம்.


No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024