Monday, November 30, 2015

வகுப்பு அறையிலேயே மது குடித்த மாணவிகள்

logo

என்னதான் டாஸ்மாக் கடைகளில், ‘‘குடி குடியைக் கெடுக்கும், குடிப்பழக்கம் உடல் நலத்தைக் கெடுக்கும்’’ என்று கடையின் போர்டிலும் சரி, பாட்டில் களிலும் சரி எழுதப்பட்டிருந்தாலும், அதைப்பார்த்து யாரும் குடிக்காமல் இருப்பதுபோலத் தெரியவில்லை. ஆண்டுக்கு, ஆண்டு குடிப்பவர்கள் எண்ணிக்கையும், மதுபாட்டில்களின் விற்பனையும் உயர்ந்துகொண்டேப்போகிறது. அரசின் கஜானாவுக்கு மது விற்பனையின் மீது போடப்படும் வரியினால் மட்டுமே கடந்த ஆண்டு 24 ஆயிரத்து 164 கோடியே 95 லட்ச ரூபாய் வருமானம் கிடைத்து இருக்கும்.

ஆனால், சமுதாயத்தை அதிர்ச்சியின் உச்சத்துக்கே கொண்டுசெல்லும் வகையில் இப்போது, நாளைய ஒளிமிகுந்த தமிழ்நாட்டை உருவாக்கவேண்டிய இளைய சமுதாயமான மாணவர் சமுதாயத்தினர், அதுவும் பள்ளிக்கூட பருவத்தில் உள்ள பிஞ்சு உள்ளங்கள் குடிப்பழக்கத்துக்கு ஆளாகும் கொடுமையான செய்திகள் கேட்டு நெஞ்சமெல்லாம் பதறுகிறது. ஏற்கனவே பல பள்ளிக்கூடங்களில் மாணவர்கள் குடித்துவிட்டு ரகளை செய்த சம்பவங்களையெல்லாம் தாண்டி, சில மாதங்களுக்கு முன்பு முதலில் கல்லூரி மாணவிகள் என்று தொடங்கி, கோவையில் ஒரு பள்ளிக்கூட மாணவி சீருடையிலேயே போதையில் சாலையில் உருண்டு, புரண்ட சம்பவம் பார்க்க சகிக்கவில்லை. இப்போது சிலநாட்களுக்கு முன்பு நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிக்கூடத்தில் 11–வது படிக்கும் 4 மாணவிகள் பள்ளிக்கூடத்திலேயே பாட்டிலைத்திறந்து குடித்த சம்பவம், தமிழ் நெஞ்சங்களை சுக்கு நூறாக நொறுக்கிவிட்டது. இடைநிலைத்தேர்வு நடக்கும் நேரம். ஒரு மாணவிக்கு பிறந்தநாளாம். அதைக்கொண்டாட இருமாணவிகள் மதுபாட்டிலை வாங்கிக்கொண்டுவந்து இருக்கிறார்கள். மிகவும் கைதேர்ந்த குடிகாரர்கள்போல, 4 பேர்களும் குளிர்பானத்தை கலந்து குடித்து இருக்கிறார்கள். அதில் சிலர் வாந்தி எடுத்து இருக்கிறார்கள். இந்த மாணவிகளை பள்ளிக்கூடத்தில் இருந்து வெளியே அனுப்பிவிட்டார்கள்.

இதனால் பிரச்சினை தீர்ந்துவிடாது. இவ்வளவுக்கும் இந்த மாணவிகள் பணக்கார குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் அல்ல. 21 வயதுக்கு குறைந்தவர்களுக்கு மது விற்கக்கூடாது என்று சட்டம் இருக்கும்போது, இவர்களுக்கு எப்படி தாராளமாக கிடைக்கிறது?. பணக்காரர்கள் செல்லும் பப்கள், நட்சத்திர ஓட்டல் பார்களில் பள்ளிக்கூட மாணவர்களுக்கு அனுமதி இல்லாத நிலையில், டாஸ்மாக் கடைகளில் மட்டும் இவ்வாறு விற்பனை செய்வதை உடனடியாக தடுக்கவேண்டும். எல்லோருக்கும் வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை என்று ஏதாவது அடையாள அட்டைகள் இருக்கும்போது, அடையாள அட்டை கட்டாயமாக்க பரிசீலிக்கலாம். 21 வயதுக்கு குறைந்தவர்களுக்கு மது விற்றது கண்டுபிடிக்கப்பட்டால், அதைவிற்ற ஊழியர்கள் மீதும் கடும் நடவடிக்கை பாயவேண்டும். மதுவை ஒரு எட்டாக்கனியாக்கும் வகையில் வரியைக் கூட்டினாலும் தவறில்லை.

அனைத்துக்கும் மேலாக மதுவின் கேடு குறித்து மாணவர்களுக்கு மனரீதியாக பாடங்களை பள்ளிக்கூடங்களிலேயே கற்றுக்கொடுக்க ஏற்பாடுகள் செய்யவேண்டும். பள்ளிக்கூடங்களில் மனநல ஆலோசகர்களின் பணியை இன்னும் தீவிரப்படுத்தவேண்டும். ஆசிரியர்களும் தங்கள் பணி பாடம் சொல்லிக்கொடுப்பது மட்டுமல்லாமல், ஒழுக்கமுள்ள மாணவர் சமுதாயத்தை படைக்கவேண்டும் என்பதே தலையானது என்பதை உள்ளத்தில் கொள்ளவேண்டும். இதில் பெற்றோருக்கும் முக்கிய கடமை இருக்கிறது. டீன் ஏஜ் பருவத்தில் பெற்றோருடைய அன்பு, அரவணைப்பு, நெருக்கம் இல்லாத சூழ்நிலையும் அவர்களை மதுபக்கம் பார்வையை செலுத்தக்கொண்டு போய்விடுகிறது. எனவே, இளைய தலைமுறையை மதுப்பக்கம் கொண்டுபோகாமல் இருக்க, பெற்றோர், ஆசிரியர்கள், அரசு என்று ஒட்டுமொத்த சமுதாயமே பொறுப்பேற்றுக்கொள்ளவேண்டும்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024