Monday, November 16, 2015

சி.ஐ.எஸ்.எஃப். கட்டுப்பாட்டில் இன்று முதல் உயர்நீதிமன்ற வளாகம்! By சென்னை, First Published : 16 November 2015 12:47 AM IST

சென்னை உயர் நீதிமன்ற பாதுகாப்புப் பணியை மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படையினர் (சி.ஐ.எஸ்.எஃப்) திங்கள்கிழமை (நவ. 16) முதல் மேற்கொள்ள உள்ளனர்.
சென்னை உயர் நீதிமன்றத்துக்கு நவம்பர் 16 முதல் மத்தியப் படை பாதுகாப்பு வழங்க வேண்டும் என உயர் நீதிமன்றம் அக்டோபர் 30-இல் உத்தரவிட்டது.
அதைத் தொடர்ந்து, 650 வீரர்களை கொண்டு 6 மாதங்களுக்கு பாதுகாப்பு வழங்கத் தேவையான முன்வைப்புத் தொகை ரூ.16.60 கோடியை மத்திய உள்துறை அமைச்சகத்திடம் நவம்பர் 5-இல் தமிழக அரசு வழங்கியது.
இதன்பின்னர், மத்தியப் படை பாதுகாப்பு வழங்குவதற்கான பணிகள் கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வந்தன.
மத்திய படையியினர் பாதுகாப்பு வழங்குவதற்கு ஏதுவாக உயர் நீதிமன்ற வளாகத்தில் அமைந்துள்ள கீழமை நீதிமன்றங்களையும், உயர் நீதிமன்றக் கட்டடங்களையும் தனித்தனியே பிரிக்க இரும்பு தகடுகளைக் கொண்டு வேலி அமைக்கப்பட்டுள்ளது.
மேலும், பாதுகாப்புப் பணிக்காக சுமார் 450 வீரர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர்.
உயர் நீதிமன்றத்துக்கு மட்டும் மத்திய படை: 30-க்கும் மேற்பட்ட உயர் நீதிமன்றங்களைக் கொண்ட பகுதியில் மட்டுமே சி.ஐ.எஸ்.எஃப். பாதுகாப்பு வழங்கப்பட உள்ளது. அதிலும், உயர்நீதிமன்றத்தின் பாதுகாப்புப் பணிகளை மாநில போலீஸாருடன் இணைந்துதான் மத்திய படையினர் மேற்கொள்ள உள்ளனர். குடும்ப நல நீதிமன்றங்கள், மாவட்ட உரிமையியல் நீதிமன்றங்கள், சிறு வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றங்கள் அனைத்தும் மாநில போலீஸாரின் கட்டுப்பாட்டிலேயே இருக்கும் என காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
"அடையாள அட்டை இல்லாமல் நுழைய முடியாது'
சென்னை உயர் நீதிமன்ற வளாகத்துக்குள் (தனியே பிரிக்கப்பட்ட பகுதி) திங்கள்கிழமை முதல் அடையாள அட்டை இல்லாமல் நுழைய முடியாது. 6 வாயில்களில் (சோதனை மையங்கள்) மத்திய படையினரின் முழுமையான சோதனைக்குப் பிறகே அனைவரும் அனுமதிக்கப்படுவர்.
வழக்குரைஞர்கள் பார் கவுன்சில் அடையாள அட்டை அல்லது வழக்குரைஞர் சங்க அடையாள அட்டையைக் காண்பிக்க வேண்டும். வழக்கு தொடுத்தவர்கள் என்றால், அனுமதிச் சீட்டு பெற 2 கவுன்ட்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன.
அங்கு நுழைவுச் சீட்டு பெற்ற பின்னர் சிறு வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றக் கட்டடத்துக்கு அருகில் உள்ள வாயில்களில் வழியாக உயர் நீதிமன்றத்துக்கு உள்ளே வர வேண்டும். இது தவிர வழக்குரைஞர்கள் கார், இருசக்கர வாகனங்களை நிறுத்துவதற்கு தனித்தனியே இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
முறைப்படி ஒப்படைப்பு
மாநில போலீஸாரின் கட்டுப்பாட்டில் இருந்த சென்னை உயர்நீதிமன்ற வளாகம் (தனியே பிரிக்கப்பட்ட பகுதி) சி.ஐ.எஸ்.எஃப். வசம் ஞாயிற்றுக்கிழமை முறையாக ஒப்படைக்கப்பட்டது.
காவல் துறையின் துணை ஆணையர் (பூக்கடை) செந்தில் குமார், சி.ஐ.எஸ்.எஃப். தலைமை காமாண்டன்ட் ஸ்ரீதரிடம் இந்தப் பணியை ஒப்படைத்தார்.
இதையடுத்து, உயர் நீதிமன்ற பாதுகாப்பு சி.ஐ.எஸ்.எஃப்.,கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. பின்னர் தலைமை நீதிபதியின் அறை, தலைமைப் பதிவாளர், பதிவாளர்கள் அறைகள், பிரதான வாயில்கள், உயர்நீதிமன்ற அறைகள் ஆகியவற்றின் முன்பு மத்திய படையினர் நிறுத்தப்பட்டுள்ளனர்.
முன்னதாக, உயர்நீதிமன்ற பகுதி முழுவதையும் மாநில போலீஸாரும், வெடிகுண்டு கண்டறியும் குழுவினரும் சோதனை மேற்கொண்டனர். சந்தேகத்துக்கு இடமாக பொருள்கள் ஏதும் இல்லை என்பதை உறுதி செய்து, ஒப்படைக்கவே சோதனை மேற்கொள்ளப்பட்டதாக போலீஸ் உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024