Friday, November 6, 2015

இந்தியாவில் எஸ்ஐ ஆகும் முதல் திருநங்கை பிரித்திகா யாஷினி!...vikatan

சென்னை: தமிழகத்தை சேர்ந்த திருநங்கை பிரித்திகா யாஷினி எஸ்.ஐ. பதவிக்கு முழு தகுதி உடையவராக இருப்பதாகவும், எனவே அவருக்கு அந்த பதவியை வழங்கலாம் என்றும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

சேலம் மாவட்டத்தை சேர்ந்த பிரித்திகா யாஷினி, சப்-இன்ஸ்பெக்டர் தேர்வுக்காக விண்ணப்பித்த முதல் திருநங்கை. ஆணாக பிறந்தாலும் பின்னர் உடலில் ஏற்பட்ட பெண்மை உணர்வு காரணமாக, அறுவை சிகிச்சை செய்து கொண்டு பெண்ணாக மாறியவர். பிரித்திகா யாஷினி என்று தன் பெயரையும் மாற்றிக்கொண்டார்.

கடந்த சில மாதங்களுக்கு முன் தமிழக காவல்துறையில் சப்–இன்ஸ்பெக்டர் பணிக்கு அறிவிப்பு வெளியானபோது அதற்கு விண்ணப்பித்தார் பிரித்திகா. திருநங்கை என்ற காரணத்துக்காக அவருடைய விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து சென்னை உயர் நீதிமன்றத்தில், ரிட் மனு தாக்கல் செய்தார் பிரித்திகா.

மனுவை விசாரித்த நீதிமன்றம், எழுத்துத்தேர்வில் பிரித்திகாவை அனுமதிக்க உத்தரவிட்டது. அந்த தேர்வில் பிரத்திகா யாசினி கலந்துகொண்டு தேர்ச்சி பெற்றார். அடுத்து நடந்த உடல் தகுதி தேர்வில் ஓட்டப்பந்தயத்தில் ஒரு நொடி காலதாமதமாக வந்ததாக கூறி, பிரித்திகாவை தகுதி நீக்கம் செய்தது சீருடை பணியாளர் தேர்வாணையம்.

இதை எதிர்த்து மீண்டும் நீதிமன்றத்திடம் மனு செய்தார் பிரித்திகா. வழக்கு விசாரணைக்கு வந்தபோது, மனுதாரரை நேர்காணலில் அனுமதிக்க வேண்டும் என கறார் காட்டியது நீதிமன்றம். 

இதன் பின்னர் அவர் அனுமதிக்கப்பட்டு, எழுத்துத்தேர்வில் தேர்ச்சி பெற்றார். தொடர்ந்து, 400 மீ. நீளம் தாண்டுதல், எறி பந்து ஆகிய போட்டிகளில் தேர்ச்சி பெற்றார். இறுதியாக 100 மீ ஓட்டப்பந்தயத்தில் 17.5 நொடிகளில் கடக்க வேண்டிய தூரத்தை 18.5 நொடிகளில் கடந்து தோல்வியுற்றதாக அறிவிக்கப்பட்டார்.

இந்த தேர்வு முடிவின் வீடியோ ஆதாரங்களை வைத்து, மறுபரிசோதனை செய்யுமாறு நீதிமன்றத்தில் கோரிய மனுவின் காரணமாக, மனிதாபிமான அடிப்படையில் மீண்டும் நடத்தப்பட்ட  100 மீ ஓட்டத்தில் வெற்றி பெற்றார்.

இந்நிலையில்,  பிரித்திகா யாசினி குறித்த வழக்கு இன்று (5-ம் தேதி) விசாரணைக்கு வந்தது. '
இதை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன்கவுல் மற்றும் நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா, ''தமிழக காவல்துறையில் பணியாற்ற திருநங்கை பிரித்திகா யாசினி முழுதகுதி உடையவர். அவருக்கு எஸ்.ஐ. பணி வழங்க வேண்டும். அவர் அர்ப்பணிப்போடும், மற்ற திருநங்கைகளுக்கு உற்சாகம் அளிக்கும் வகையில் இருப்பார்.

எதிர்காலத்தில் மூன்றாம் பாலினத்தவர் கலந்து கொள்ளும் வகையில் தேர்வு முறையை மேற்கொள்ள வேண்டும்'' என்றும் உத்தரவிட்டனர்.
உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவின்படி, இந்தியாவில் எஸ்ஐ ஆகப்போகும் முதல் திருநங்கை பிரித்திகா யாஷினி ஆவார்.   இதற்கு முன் இந்திய அளவில் 2 திருநங்கைகள் கான்ஸ்டபிளாக பணியாற்றி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024