Monday, November 30, 2015

வங்கக்கடல் பகுதியில் மேலும் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை வட மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்

பதிவு செய்த நாள்:
திங்கள் , நவம்பர் 30,2015, 4:07 AM IST

சென்னை

இலங்கை அருகே உள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை அதே இடத்தில் நிலவுகிறது. புதிய காற்றழுத்த தாழ்வு நிலை அந்தமான் அருகே உருவாகி உள்ளது.

புதிய காற்றழுத்த தாழ்வு நிலை

தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இன்றைய வானிலை குறித்து சென்னை வானிலை ஆராய்ச்சி மண்டல இயக்குனர் எஸ்.ஆர்.ரமணன் கூறியதாவது:-

நேற்று முன்தினம் தென் மேற்கு வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை, அதே இடத்தில் நீடிக்கிறது. இந்த நிலையில் தென் கிழக்கு வங்கக்கடலில் அந்தமான் கடல் பகுதியில், புதிதாக குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது. இது அடுத்த 24 மணிநேரத்தில் தாழ்வு பகுதியாக வலுவடைய வாய்ப்பு உள்ளது.

வட மாவட்டங்களில் கனமழை

இந்த இரு நிகழ்வு காரணமாக அடுத்த 24 மணிநேரத்தில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் சில இடங்களில் மழை பெய்யும். குறிப்பாக வட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும். சென்னையில் வானம் மேக மூட்டமாக இருக்கும். நகரின் சில பகுதியில் கனமழை பெய்யும். அந்தமான் அருகே உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை தமிழகம் அருகே வந்தால், தமிழ்நாட்டில் 3 நாட்களுக்கு கன மழைக்கு வாய்ப்பு உள்ளது.

இவ்வாறு எஸ்.ஆர்.ரமணன் தெரிவித்தார்.

மழை அளவு

நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் கன்னிமாரில் 14 செ.மீ. மழையும், பூதப்பாண்டியில் 4 செ.மீ. மழையும், பாபநாசமில் 3 செ.மீ. மழையும், காட்டுக்குப்பம், மகாபலிபுரம், செங்கோட்டை தலா 2 செ.மீ. மழையும், மயிலாடி, மயிலாடுதுறை, நாகர்கோவில், செங்கல்பட்டு, கேளம்பாக்கம், தாமரைப்பாக்கம் தலா 1 செ.மீ. மழையும் பெய்துள்ளது.

No comments:

Post a Comment

NEWS TODAY 14,11,2024