Saturday, November 14, 2015

வகுப்பறை வன்முறைகள்


Dinamani

By அ. கோவிந்தராஜூ

First Published : 10 November 2015 01:20 AM IST


நம் நாட்டில் இப்போது தவறு செய்யும் மாணவர்களைத் திட்டவோ கண்டிக்கவோ முடியாத நிலை உள்ளது. வெளி நாடுகளில் வகுப்பறைக்கு மாணவர்கள் துப்பாக்கியும் கையுமாக வருகிறார்கள். அது அவர்கள் வளர்ந்த சூழல், கலாசாரம் அப்படிப்பட்டதாக அமைந்திருக்கலாம். ஆனால், நம் நாட்டில் ஏனிப்படி? இந்தச் சூழலில் எந்த ஆசிரியருக்குத்தான் தப்பு செய்யும் மாணவர்களைத் தட்டிக்கேட்கும் துணிவு வரும்?
வகுப்பில் ஆசிரியர் பாடம் நடத்தும்போது மாணவர்களின் நிலை எப்படி இருக்க வேண்டும் என்பதை திருவள்ளுவர் அருமையாகச் சொல்வார்.
இருப்பவர் முன் பணிவாக நின்று, இல்லாதவர் எப்படி யாசிப்பார்களோ அப்படிப் பணிவுடன் வகுப்பறையில் இருந்து ஆசிரியரிடம் மாணவர்கள் கற்க வேண்டும் என்பது குறள் கருத்தாகும். அப்படிக் கற்றாரே கற்றவர், மற்றவரெல்லாம் கடையர் என்று கூறுகிறார் வள்ளுவர்.
உடையார்முன் இல்லார்போல் ஏக்கற்றும் கற்றார்
கடையரே கல்லா தவர்
என்பது குறள்பா. பாடப் பொருளை உணரும் ஆர்வத்தோடு கேட்க விரும்பும் மாணவர்களுக்குப் பாடம் சொல்லித் தருவது என்பது வளரும் நிலையில் உள்ள செடிகள் நிரம்பிய பாத்தியில் நீர் பாய்ச்சுவதற்குச் சமம் என்று மேலும் கூறுவார்.
இன்றைக்கு மேடைகளில் பேசவும் சில நூல்களை எழுதவும் என்னால் முடிந்தது என்றால் அதற்குக் காரணம் பேராசிரியர் தமிழண்ணல் போன்றோரின் வகுப்பறைகளில் அடங்கி ஒடுங்கிப் பாடம் கேட்டதே ஆகும்.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பவணந்தி முனிவர் தான் இயற்றிய நன்னூல் என்னும் இலக்கண நூலில் ஒரு மாணவன் வகுப்பில் எப்படி பாடம் கேட்க வேண்டும் என்பதை ஒரு நூற்பாவில் விளக்கியுள்ளார்.
உரிய நேரத்தில் வகுப்பறையில் இருத்தல் வேண்டும். ஆசிரியர் வரும்போது எழுந்து பணிந்து நின்று வழிபட வேண்டும். அவர் அமரச் சொன்னதும் ஓவியர் வரைந்த பாவையைப் போல வகுப்பில் அமர வேண்டும்.
செவி இரண்டும் வாய்களாக மாறி ஆசிரியர் கூறுவதைத் தாகம் ஏற்படும்போது பருகும் ஆர்வத்தினர் ஆகிப் பருக வேண்டும். அவற்றைத் தவறாமல் தம் உள்ளத்தில் பதிய வேண்டும்.
இப்படிப் பாடம் கேட்பவனுக்கு இலக்கணம் வகுத்த நாடு நம் நாடு.
"ஆச்சார்ய தேவோ பவ!' -அதாவது ஆசிரியர் தெய்வமாக வணங்கத் தக்கவர் என்று சொன்ன நாடு நம் நாடு. திருவருளை விட குருவருள் சிறந்தது என உரைத்தது நம் நாடு.
குருவின் பெயரைச் சொல்லி, குருவைக் கண்டு, குருவின் சொல் கேட்டலே பாடப் பொருளில் தெளிவு பெறுவதற்குரிய வழியாகும் என்று உரைத்த திருமூலர் வாழ்ந்த நாடு நம் நாடு.
தெளிவு குருவின் திருமேனி காண்டல்
தெளிவு குருவின் திருநாமம் செப்பல்
தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்
தெளிவு குருவுரு சிந்தித்தல் தானே
என்பது திருமூலரின் திருமந்திரம் ஆகும்.
ஆனால், நமது நாட்டில், பள்ளி, கல்லூரிகளில் மாணவர்களால் அரங்கேற்றப்படும் வகுப்பறை வன்முறைகளுக்கு அளவே இல்லை. 2012-ஆம் ஆண்டு சென்னை செயின்ட் மேரீஸ் ஆங்கிலோ இந்தியன் பள்ளியில் உமா மகேஸ்வரி என்ற ஆசிரியை, வகுப்பறையில் ஓர் ஒன்பதாம் வகுப்பு மாணவனால் குத்திக் கொல்லப்பட்ட நிகழ்வு நம் மனத்தில் நீங்காத வடுவாக உள்ளது.
அதற்கு அடுத்த ஆண்டில், ஒரு கல்லூரிப் பேராசிரியர் வகுப்பறையில் மாணவனின் அமில வீச்சுக்கு ஆளானார். அண்மையில் ஓர் அரசுப் பள்ளியில் மேல்நிலை வகுப்பு மாணவர்கள் மது அருந்தி வகுப்பறைக்கு வந்து வம்பு வளர்த்த செய்தி நாளேட்டில் வந்ததும் நாம் அறிந்ததே.
வகுப்பறை வன்முறை என்பது அம்பு விடுவதில் தொடங்கி ஆளைக் கொல்வதில் முடிகிறது. ஆசிரியர்களுக்குச் சகிப்புத் தன்மை வேண்டும் என்று ஒரு தரப்பினர் உரக்கப் பேசுகிறார்கள். சகிப்புத் தன்மைக்கும் ஓர் எல்லை உண்டல்லவா?
கட்டுப்பாடும் ஒழுக்கமும் இல்லாத சிலரால் மற்ற மாணவர்களும் பாதிக்கப்படுகிறார்கள். பணத்தைக் கொட்டிக் கொடுக்கும் பணக்கார மாணவர்கள் என்பதால், கல்லூரி நிர்வாகமும் கண்டு கொள்வதில்லை போலும். இந்த நிலை நீடித்தால் அறிவாற்றல் மிகுந்த எவரும் ஆசிரியப் பணிக்கு வரமாட்டார்கள். பிற பணிகளுக்குச் சென்றுவிடுவார்கள்.
ஓர் ஆசிரியருக்கு தான் பெறும் ஊதியத்தைவிட தன்மானம் மிக முக்கியமானதாகும். மாணவர்களிடமிருந்து ஆசிரியப் பெருமக்கள் மரியாதையைத் தவிர வேறு எதையும் எதிர்பார்ப்பதில்லை.
மாணவர்கள் இதை உணர வேண்டும் உணர்த்த வேண்டிய பொறுப்பில் இருப்போர் உணர்த்த வேண்டும்.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2024