By ஆசிரியர்
First Published : 06 November 2015 01:24 AM IST
பிகார் சட்டப்பேரவைக்கான ஐந்து கட்டத் தேர்தல் நேற்றுடன் முடிவடைந்திருக்கிறது. கடந்த மூன்று மாதங்களாக பிகார் மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்தியாவே அனல் பறக்கும் தேர்தல் பிரசாரத்தாலும், பாரதப் பிரதமரே வரிந்து கட்டிக் கொண்டு தேர்தல் களத்தில் இறங்கிவிட்டிருந்ததாலும், பரபரப்பில் ஆழ்ந்தது. பிகார் சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளைப் பொருத்துதான் இந்தியாவின் வருங்காலமே இருக்கப் போகிறது என்பதுபோன்ற தோற்றம் ஏற்பட்டிருப்பதை மறுப்பதற்கில்லை.
பிரதமர் நரேந்திர மோடியையும், பா.ஜ.க.வையும் பொருத்தவரை, கடந்த மக்களவைத் தேர்தலில் பெற்ற வெற்றியை மீண்டும் பெற்றுவிட முடியாவிட்டாலும், நிதீஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம், ராஷ்ட்ரீய ஜனதா தளம், காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமையாமல் தடுத்தால் அதுவே மாபெரும் வெற்றியாக இருக்கும்.
கடந்த ஆண்டு மக்களவைத் தேர்தலில் தனித்தனியாகப் போட்டியிட்ட ஐக்கிய ஐனதா தளம், ராஷ்ட்ரீய ஜனதா தளம், காங்கிரஸ் ஆகிய மூன்று கட்சிகளும் இப்போது "மகா கூட்டணி' என்ற பெயரில் இணைந்திருப்பதால், வாக்கு வங்கி அரிச்சுவடிக் கணக்கு அந்த அணிக்குத்தான் சாதகமாக இருக்கிறது. இந்தக் கூட்டணி 2014-இல் இருந்திருந்தால் 145 இடங்களிலும், பா.ஜ.க.வின் தேசிய ஜனநாயகக் கூட்டணி 92 இடங்களிலும் வெற்றி பெற்றிருக்கும்.
மகா கூட்டணி இல்லாத நிலையில், பிகாரில் 2014 மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான கூட்டணி 40 இடங்களில் 31 இடங்கள் வெற்றி பெற முடிந்ததுபோல, இந்த முறை வெற்றி பெறுவது என்பது சாத்தியமே இல்லை. ஆனால், நிதீஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளமும், லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரீய ஜனதா தளமும் தலா 100 இடங்களில் மட்டுமே போட்டியிடும் நிலையில், அடுத்த சட்டப்பேரவையில் அதிக எண்ணிக்கை பலம் கொண்ட கட்சியாக பா.ஜ.க. தனது எதிர்க்கட்சி அந்தஸ்தை தக்க வைத்துக் கொள்வது என்பது சாத்தியம்.
பிரதமர் நரேந்திர மோடி பிகார் சட்டப்பேரவைத் தேர்தலில் இந்த அளவுக்கு முனைப்புக் காட்டியிருக்க வேண்டுமா என்கிற கேள்வி பரவலாக எழுப்பப்படுகிறது. இதுவரை எந்தவொரு பிரதமரும் ஒரு சட்டப்பேரவைத் தேர்தலுக்காக இந்த அளவுக்குப் பிரசாரத்தில் ஈடுபட்டதில்லை. தில்லி சட்டப்பேரவைப் படுதோல்வி, நாடாளுமன்றம் சுமுகமாக நடைபெறாத நிலைமை ஆகிய பின்னடைவுகளைப் புரட்டிப்போட்டு, தனது ஆட்சிக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு இருக்கிறது என்பதை நிரூபிக்க அவர் முயற்சிக்கிறார் என்பதைத்தான் அவரது பிரசாரம் காட்டுகிறது.
முதல்வர் நிதீஷ்குமாரைப் பொருத்தவரை, மகா கூட்டணி வெற்றி பெற்றால் மட்டும் போதாது, ஐக்கிய ஜனதா தளமும், கணிசமான தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்ள முடியாமல் போனாலோ அல்லது லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரீய ஜனதா தளம் அதிக இடங்களில் வெற்றி பெற்ற நிலையில் கூட்டணி ஆட்சி அமைந்தாலோ, விரைவிலேயே நிதீஷ்குமாரின் அரசியல் வாழ்க்கை அஸ்தமனமாகிவிடும். அதேநேரத்தில், கணிசமான இடங்களில் ஐக்கிய ஜனதா தளம் வெற்றி பெற்று நிதீஷ்குமார் முதல்வரானால், 2019-இல் நரேந்திர மோடியை எதிர்கொள்ளும் எதிர்க்கட்சிப் பிரதமர் வேட்பாளராக நிதீஷ்குமார் இருப்பார் என்பதில் சந்தேகம் வேண்டாம்.
லாலு பிரசாத் யாதவின் மீதுதான் அத்தனை அரசியல் நோக்கர்களின் பார்வையும் குவிந்து கிடக்கிறது. பிகாரைப் பொருத்தவரை கணிசமான வாக்கு வங்கியுடன் கூடிய அரசியல் கட்சி லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரீய ஜனதா தளம்தான். ஊழல் வழக்குகளில் சிக்கித் தேர்தலில் நிற்க முடியாத நிலைமை ஏற்பட்டிருப்பதால்தான் முதல்வர் வேட்பாளராக நிதீஷ்குமாரை லாலு பிரசாத் யாதவ் ஏற்றுக் கொண்டிருக்கிறார். தனது ஆட்சியை "காட்டாட்சி' என்று வர்ணித்து, பா.ஜ.க.வைக் கூட்டணி அமைத்து வீழ்த்தியவர் நிதீஷ்குமார் என்பதை லாலு பிரசாத் யாதவ் அவ்வளவு எளிதில் மறந்துவிடமாட்டார் என்பது அனைவரும் அறிந்த ரகசியம்.
சட்டப்பேரவைத் தேர்லில் முதல்வர் நிதீஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் அதிக இடங்களில் வெற்றி பெற்று, "மகா கூட்டணி' மீண்டும் ஆட்சி அமைத்தால், அதனால் பலியாகப் போவது தனது அரசியல் வருங்காலம் மட்டுமல்ல, தனது குடும்பத்தின், ராஷ்ட்ரீய ஜனதா தளத்தின் வருங்காலமும்கூட என்பது லாலு பிரசாத் யாதவுக்கு நன்றாகவே தெரியும். பா.ஜ.க. கூட்டணி வெற்றி பெற்றால் மட்டுமே எதிர்க்கட்சியாக ராஷ்ட்ரீய ஜனதா தளம் செயல்படும் என்பதையும் அவரது தொண்டர்கள் உணராமல் இல்லை.
வாக்கு வங்கி அரிச்சுவடிக் கணக்கு நிதீஷ்குமார் தலைமையிலான கூட்டணிக்குத்தான் சாதகமாக இருக்கிறது என்கிற நிலையில், பா.ஜ.க.வினர் நம்புவது லாலு பிரசாத் யாதவின் உள்குத்து வேலையால் ஐக்கிய ஜனதா தளம் பல இடங்களில் தோல்வியைத் தழுவக்கூடும் என்பதைத்தான். பலவீனமான காங்கிரஸ் போட்டியிடும் 41 இடங்களில் பெரும்பாலான தொகுதிகளில் தங்களுக்கு வெற்றி வாய்ப்பு உறுதி என்பதும் அவர்கள் எதிர்பார்ப்பு.
1980 தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் தி.மு.க.வும், காங்கிரஸும் கூட்டணி அமைத்துப் போட்டியிட்ட நிலைமை பிகாரில் ஏற்பட்டால் வியப்படையத் தேவையில்லை. பா.ஜ.க.வின் எதிர்பார்ப்பு அதுதான்.÷
பிகார் சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளைப் பொருத்தவரை தோற்கப் போவது நிதீஷ்குமாரா, லாலு பிரசாத் யாதவா என்பதுதான் மிகப் பெரிய கேள்வி. முடிவு எப்படி அமைந்தாலும் அது பிகாரில் மட்டுமல்ல, இந்திய அரசியலிலும் மிகப் பெரிய திருப்புமுனையாக இருக்கும்!
No comments:
Post a Comment