Monday, November 30, 2015

பெண் எனும் பகடைக்காய்: எத்தனை யுகங்களுக்குக் கண்காணிப்பீர்கள்? பா.ஜீவசுந்தரி

Return to frontpage

சிறு வயதில் என் பாட்டி வீட்டில் வாழ்ந்தபோது கிராமம் சார்ந்த வாழ்க்கையைக் கண்ணாரக் கண்டவள். மிகப் பெரிய கூட்டுக் குடும்பம். வீட்டுக்குப் பின் நல்ல அருமையான கட்டுமானத்துடன் கூடிய மாட்டுத் தொழுவம். அதன் ஒரு புறத்தில் சிமென்ட்டால் கட்டப்பட்ட, ஒரு ஆள் படுத்துறங்கும் அளவுக்கு ஒரு சிறு திண்ணை. அதில் தாயக்கட்டம் வரையப்பட்டிருக்கும். அதுவும் கட்டுமானத்திலேயே உண்டு.

நாங்கள் அந்தத் திண்ணையில் உட்கார்ந்து தாயக்கட்டையை உருட்டி விளையாடியிருக்கிறோம். அப்போது அத்தையோ சித்தியோ யாராவது ஒருவர் வந்து எங்களை விரட்டிவிட்டுத் திண்ணையை ஆக்கிரமித்துக்கொள்வார். அதன் பின், மூன்று நாட்களுக்கு எங்களுக்கு அந்த இடம் கிடைக்காது. போர்வை, சாப்பிடும் தட்டு, தம்ளர் போன்றவற்றை அதில் ஒரு பக்கம் வைத்திருப்பார்.

ஒரு சராசரி மனுஷியாகக்கூட நடத்தப்படாமல், மாடுகளோடு, மாட்டு மூத்திர, சாண நெடிக்கு மிக மிக அருகில் பகல் பொழுதைக் கழிக்க வேண்டுமென்பது பற்றி எப்போதாவது நினைத்துப் பார்த்திருக்கிறீர்களா? சாப்பாட்டு நேரம் வரும்போது தட்டு, டம்ளரை எடுத்துக்கொண்டு, தோட்டத்து வராந்தாவில் உட்கார வேண்டும். வீட்டின் உள்ளேயிருந்து யாராவது வந்து தட்டு, தம்ளரைத் தொட்டுவிடாமல் சாப்பாடு போட்டுவிட்டுப் போவார்கள். தவறி யாராவது அவர்களைத் தொட்டுவிட்டால், குளிக்காமல் வீட்டுக்குள் நுழைய அனுமதி கிடையாது.

இரவில் பின்கட்டுக் கதவுக்கு முன் உள்ள வராந்தாவிலோ அல்லது அங்குள்ள உள் திண்ணையிலோ தூங்க வேண்டும். அதாவது அப்போதும் வீட்டுக்குள் அனுமதியில்லை. அந்தத் திண்ணையில் வேண்டாத கோணிகள், தட்டுக் கூடைகள், மர உரல், கல் உரல், திரிகைகள் என்று பலவும் இருக்கும். அதையெல்லாம் ஒரு ஓரமாக ஒழுங்கு செய்துவிட்டு, ஒரு உலக்கையைப் பக்கத்தில் வைத்துக்கொண்டு அந்த ஜடப் பொருள்களோடு ஜடமாக, அங்கேதான் இரவைக் கழிக்க வேண்டும். காற்று, வெளிச்சம் எதுவும் இல்லாத அந்த இடத்தில் மூன்று நாட்களும் அனுபவிக்க வேண்டிய இந்த நரக வேதனையை நானே அனுபவத்தில் உணர்ந்திருக்கிறேன். அப்போதெல்லாம் சொல்ல முடியாத ஒரு அவமான உணர்ச்சி வந்து ஆட்கொள்ளும்.

அய்யா, அய்யனாரே காப்பாற்றுங்கள்

இப்போதும் மதுரை மாவட்டத்தின் டி.கல்லுப்பட்டி அருகில் உள்ள கூவளப்பட்டியிலும் மற்றும் சில கிராமங்களிலும் இப்படிக் கேவலமாக ஒதுக்கி வைப்பதற்காக என்றே, ஊருக்கே வெளியில் உள்ள இடத்தில் ஒரு சிறிய கட்டிடத்தைக் கட்டி வைத்திருக்கிறார்கள். முன்பெல்லாம் ஓலைக் குடிசையாக இருந்ததாம். தேள், பூரான் போன்ற விஷப் பூச்சிகளின் பிடியிலிருந்தாவது காப்பாற்றுங்கள் என்ற பெண்களின் வேண்டுகோளுக்கிணங்கி இப்போதுதான் கல் கட்டிடமாக மாற்றியிருக்கிறார்கள். கைக்குழந்தை உள்ள பெண்கள் என்றால் கைக்குழந்தையோடு அங்கு போய்த் தங்கிக்கொள்ள வேண்டும். மின் வசதியற்ற அந்த இடத்தில் குழந்தையோடு தங்குவதும் மாணவிகள் இரவு நேரங்களில் படிக்க முடியாமல் அவதிப்படுவதும் இங்கு வாடிக்கை.

இந்தப் பெண்கள், பள்ளிக்கோ மருத்துவமனைக்கோ தெருக்களின் வழியாகச் செல்லவும் தடை. ஊரைச் சுற்றி வயல்களின் ஊடாக நீண்ட தொலைவு நடந்து செல்ல வேண்டும். இடைநிலைச் சாதியானாலும் ஒடுக்கப்பட்ட சாதியானா லும் இதில் மட்டும் எந்த வித்தியாசமும் இல்லை. அதிலும் பெரும் கொடுமை, இரண்டு பிரிவினருக்கும் தனித் தனிக் கொட்டடிகள். இந்த நவீன காலத்திலும் அய்யனார் என்ற எல்லைக் காவல் தெய்வத்தின் பெயரால் இந்தக் கொடுமைகள் இந்தக் கிராமங்களில் நிகழ்த்தப்படுகின்றன.

நகரங்களில் நவீன தீண்டாமை

பெண்ணின் வாழ்க்கை முறை சென்ற நூற்றாண்டிலிருந்து மாற்றம் கண்டிருப்பது உண்மை. முன்பு போல் பெண்கள் வீட்டுக் கோழிகளாக மட்டும் இப்போது இல்லை. கல்வி கற்கவும், வேலை வாய்ப்புகளுக்காகவும் வெளியுலகில் சஞ்சரித்துக்கொண்டிருக்கிறார்கள். பெண்கள் ராக்கெட்டில் விண்ணுலகுக்குப் பறக்கும் இக்காலத்திலும் பெண்ணின் மாதவிடாய் இழிவானதாகவே கொள்ளப்படுகிறது. வீட்டுக்கு உள்ளேயோ ஊருக்கு வெளியிலோ ஒதுக்கி உட்கார வைப்பதும், உலக்கை போட்டு அடையாளப்படுத்துவதும் நகரங்களில் வேண்டுமானால் இல்லாமல் இருக்கலாம்.

வீட்டில் பண்டிகைகள், திருமணங்கள், குடும்பத்துடன் கோயிலுக்குச் செல்ல நேரும் பொழுதுகள், பலர் சேர்ந்து செல்லும் சுற்றுலா இவை அனைத்துக்கும் இந்த பீரியட் என்பது மகா எதிரி. இதைக் காரணம் காட்டியே எல்லாவற்றிலும் ஒதுக்கி வைத்துவிடுவார்கள். இந்தத் தீண்டாமையைத் தவிர்ப்பதற்காகவே மாத்திரை போட்டு மாதவிடாய் சுழற்சியைத் தள்ளி வைக்கும் ஒரு விபரீதமான பழக்கத்தைப் பெண்கள் கைக்கொள்ள ஆரம்பித்தார்கள். விடாமல் தொடர்ந்து கொண்டிருக்கிறார்கள். மருத்துவர்களின் எச்சரிக்கையையும் மீறித் தொடரும் இப்பழக்கம் மிக மிக ஆபத்தானது.

பத்தாண்டுகளுக்கு முன்பு பெண் படைப்பாளிகள் சந்தித்துக்கொண்டோம். அதன் பெயர் ‘பெண்கள் சந்திப்பு’. எழுத்தாளர் அம்பை உட்பட, பத்திரிகையாளர்கள், சமூகச் செயல்பாட்டாளர்கள், ஈழத்துப் பெண் கவிஞர்கள் சிலர் எனப் பலரும் அதில் கலந்துகொண்டோம். ஒரு பெண்ணாக, பெண் படைப்பாளியாக எங்கள் அனுபவங்களைப் பேசிக்கொள்வது என்பதுதான் அதன் நோக்கம். அதில் ஈழப் பெண் கவிஞர் ஒருவர் தனது அனுபவத்தைக் கூறினார். அவர்கள் ஊர் குடிநீர் குளத்தில் நீர் மொள்ளும் முன்பு காவல்காரர் மறித்து ‘நீ வீட்டுக்கு தூரமில்லியே’ என்று கேட்டு, இல்லை என்று சொன்ன பிறகுதான் அனுமதிப்பாராம். தொடர் கேள்விகளால் எரிச்சலைடைந்த இவர் மாதவிடாய் நேரமாக இருந்தாலும் ‘இவன் என்ன டெஸ்ட் பண்ணியா பாக்கப் போறான்’ என நினைத்து, இல்லை என்று பொய் சொல்லி விட்டு நீர் மொண்டு வந்ததாகச் சொன்னார். அதைக் கேட்டு எங்களுக்குள் வெடிச் சிரிப்பு எழுந்தது. ஆனால், இது சிரித்துவிட்டுப் போவதற்கான விஷயம் மட்டுமல்ல.

அறிவியல் முன்னேற்றமா?

பெண்களின் தூய்மையைக் கண்டறியும் இயந்திரங்கள் கோவில்களில் நிறுவப்பட்டு மாதவிடாய் உள்ள பெண்கள் கோயிலுக்குள் நுழையாமல் தடுத்து நிறுத்தும் காலம் வரும் என்று திருவாய் மலர்ந்தருளி இருக்கிறார் திருவாங்கூர் தேவஸ்தானத்தின் புதிய தலைவர் பரயாறு கோபாலகிருஷ்ணன். இந்தியா முழுமையும் பல்லாயிரக்கணக்கான பெண்களை இந்தச் செய்தி கொதிப்படைய வைத்திருக்கிறது.

இதைவிட மோசமாகப் பெண்களை எந்த விதத்திலும் இழிவுபடுத்திவிட முடியாது. அப்படியானால் ஆண்களின் தூய்மையைக் கண்டறியும் ஆராய்ச்சிகளையும் சேர்த்தே அவர் நிகழ்த்தினால் நன்றாயிருக்கும். இன்னும் எத்தனை யுகங்களுக்கு எங்களைக் கண்காணித்துக்கொண்டிருக்கப் போகிறீர்கள்?

கொசுறு

“ஒவ்வொரு மாதமும் எனக்கு ரத்தப் போக்கு ஏற்படுகிறது. அந்த நேரங்களிலும் நான் பிரார்த்தனை செய்வதைக் கடவுள் கோபப்படாமல் ஏற்றுக்கொள்கிறார். ஆனால், மாதவிடாய்க் காலங்களில் பெண்கள் தூய்மையற்றவர்கள் என்று மற்றவர்களும் சொல்லி வருகிறார்கள். ‘தூய்மையற்றதாக’ சொல்லப்படும் அந்தத் தாயின் கருவறைக்குள்தான் 9 மாதங்கள் நீங்கள் உயிர்த்திருந்தீர்கள் என்பதை யாரும் மறந்துவிட வேண்டாம்” என்று எதிர்க் குரல் எழுப்பியிருப்பவர் அதிதி குப்தா என்ற இளம்பெண்.

கட்டுரையாளர், எழுத்தாளர்.
தொடர்புக்கு: asixjeeko@gmail.com

No comments:

Post a Comment

NEWS TODAY 14,11,2024