Monday, November 16, 2015

உடன்குடி மின்சாரத்திட்டத்தின் நத்தை வேகம்

பதிவு செய்த நாள்:
ஞாயிறு, நவம்பர் 15,2015, 5:57 PM IST
தமிழ்நாட்டில் பல மின்சாரத்திட்டங்கள் வேகமாக நிறைவேற்றப்பட்டு வந்தாலும், தென்கோடியில் உள்ள உடன்குடியில் 2007–ம் ஆண்டு முடிவெடுக்கப்பட்ட அனல் மின்சார நிலைய திட்டம், மின்சார வேகத்தில் இல்லாமல் நத்தை வேகத்தில்கூட நகராமல் இருக்கிறது. தொடர்ந்து பல முட்டுக்கட்டைகள். 2007–ம் ஆண்டு உடன்குடி அனல் மின்சார நிலையம் அறிவிக்கப்பட்டபோது, தலா 800 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் இரு யூனிட்கள் அமைக்கப்படும் என்றும், ‘பெல்’ நிறுவனமும், தமிழ்நாடு மின்சார வாரியமும் இணைந்து கூட்டாக இதைத்தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டது. இந்த கூட்டு நிறுவனத்துக்கு ‘உடன்குடி மின்சாரக்கழகம்’ என்று பெயர் சூட்டப்பட்டது. இந்த மின்சார நிலையம் உடன்குடியில் 760 ஏக்கர் நிலத்தில் அமைக்கவும், இதில் அரசு நிலம் 650 ஏக்கர் என்றும், மீதமுள்ள 110 ஏக்கர் தனியார் நிலம் என்றும் முடிவு செய்யப்பட்டு, தனியாரிடம் இருந்து நிலமும் கையகப்படுத்தப்பட்டது. 25 கோடி ரூபாய் செலவில் மண்நிரப்பும் பணியும், இதர ஆரம்பக்கட்ட பணிகளும் முடிவடைந்த நிலையில், சில தொழில்நுட்ப காரணங்களால் ‘பெல்’ நிறுவனம் இல்லாமல், தமிழ்நாடு மின்சார வாரியமே இந்த அனல் மின்சார நிலையத்தை தனியாகத்தொடங்கி நடத்த முடிவு செய்யப்பட்டது. இந்த மின்சார நிலையம் தலா 660 மெகாவாட் கொண்ட இரு யூனிட்டுகளை, ஆக மொத்தம் 1,320 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் வகையில் தொடங்க 2013–ம் ஆண்டு பிப்ரவரி மாதம் முடிவெடுக்கப்பட்டது. ரூ.8 ஆயிரம் கோடி செலவிலான இந்த திட்டத்துக்காக டெண்டர்விடப்பட்டது. இந்த டெண்டரில் ‘பெல்’ நிறுவனமும், இந்தோ–சீனா கன்சார்ட்டியம் என்ற இரு நிறுவனங்கள் கொண்ட ஒரு நிறுவனமும் பங்கேற்றன. இந்த இரு நிறுவன டெண்டர்களிலுமே குறைபாடு இருப்பதாக இதற்காக நியமிக்கப்பட்ட கன்சல்டன்சி நிறுவனம் கருத்து தெரிவித்ததையடுத்து, தமிழ்நாடு மின்பகிர்மான கழகம் இந்த டெண்டரை ரத்து செய்து, புதிய டெண்டருக்கான அறிவிப்பை வெளியிட்டது.

இதை எதிர்த்து சீன நிறுவனம் சென்னை ஐகோர்ட்டில் பழைய டெண்டரை ரத்து செய்ததை எதிர்த்தும், அந்த டெண்டரில் குறைவான தொகையை குறிப்பிட்டிருப்பதால் அதாவது, ‘பெல்’ நிறுவனத்தை விட 137 கோடி ரூபாய் குறைவாக குறிப்பிட்டுள்ளதால், தங்கள் நிறுவனத்துக்கே உடன்குடி அனல் மின்சார நிலையம் அமைப்பதற்கான ஆணையை வழங்கவேண்டும் என்றும் தொடர்ந்த மெயின் வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த நிலையில், உடன்குடி திட்டத்துக்கு புதிய டெண்டர் விடுவதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் நீதிபதி சத்தியநாராயணன் பிறப்பித்த இடைக்கால தடை உத்தரவை எதிர்த்து மின்சாரவாரியம் அப்பீல் செய்தது. இந்த வழக்கு நீதிபதிகள் ராமசுப்பிரமணியம், மதிவாணன் பெஞ்சில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் புதிய டெண்டரை தமிழ்நாடு மின்பகிர்மானக்கழகம் பரிசீலிக்கலாம், ஆனால் இறுதி தீர்ப்பு வரும்வரை யாருக்கும் காண்டிராக்டு கொடுக்கக்கூடாது என்று கூறி மீண்டும் விசாரணையை இன்று 16–ந் தேதிக்கு தள்ளி வைத்தனர். இன்றுதான் புதிய டெண்டரை மின்பகிர்மானக்கழகம் திறந்து தொழில்நுட்பரீதியாக எந்த நிறுவனம் தகுதிபடைத்தது என்று பார்க்கிறது. ஆனால், நீதிபதி ராமசுப்பிரமணியம் மதுரை ஐகோர்ட்டு பெஞ்சுக்கு சென்றுவிட்டதால், இந்த வழக்கின் விசாரணையும் உடனடியாக முடிவுகாண முடியாத நிலையில் இருக்கிறது. மொத்தத்தில், உடன்குடி திட்டத்தின் சிக்கலெல்லாம் தீர்ந்து உடனடியாக மின்சார உற்பத்தி தொடங்கும் நன்னாளைத்தான் தமிழகம் குறிப்பாக, தென்மாவட்ட மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

No comments:

Post a Comment

SC orders all-India audit of pvt & deemed universities Focus On Structural Opacity & Examining Role Of Regulatory Bodies

SC orders all-India audit of pvt & deemed universities Focus On Structural Opacity & Examining Role Of Regulatory Bodies   Manash.Go...