By ஆர். சாமுவேல் செல்வராஜ்
First Published : 17 November 2015 02:00 AM IST
இந்த நூற்றாண்டில் மனித குலம் எதிர்கொள்ள வேண்டிய முக்கியப் பிரச்னைகளில் (பயங்கரவாதத்தை விட) ஒன்று புவி வெப்பமயமாதல். மனித நடவடிக்கைகளினால் பசுமை இல்ல (குறிப்பாக கார்பன்) வாயுக்களின் அளவு அதிகரித்து
வருகிறது.
இந்த வாயுக்களின் பெருக்கத்தினால் புவி வெப்பமடைகிறதாகவும், கடல் மட்டம் உயர்ந்து வருவதாகவும் நிலத்தடி நீர்மட்டம் குறைதல், பருவமழை பொய்த்து போகுதல் போன்ற காலநிலை தொடர்பான இயற்கைச் சீற்றங்கள் ஏற்படுவதாகவும் கருதி வந்த அறிஞர்களுக்கு நாசா, தற்போது வெளியிட்டுள்ள ஓர் அறிக்கை ஒரு புதிய திருப்பத்தை ஏற்படுத்தி வருகிறது.
புவியின் வெப்பநிலை உயர்வுக்கும், கடல்மட்ட உயர்விற்கும் கார்பன் ஒரு முக்கிய காரணி இல்லை எனவும், இவை அனைத்தும் இயற்கை நிகழ்வுகளே என பல ஆய்வுகள் கூறத் தொடங்கியுள்ளன. புவி வெப்பமயமாதலுக்கும் கார்பனுக்கும் தொடர்பு இல்லை என கூறுவதற்குப் பல காரணங்கள் உள்ளன. புவி வெப்பமயமாதலுக்கு என்னென்ன மனித நடவடிக்கைகள் முக்கியக் காரணிகளாக உள்ளன என்பதைப் பார்ப்போம்:
= பசுமை இல்ல வாயுக்களின் பெருக்கம் (கார்பன் - டை - ஆக்ûஸடு, மீத்தேன், ஓசோன், நைட்ரஸ்-ஆக்ஸைடு, குளோரோ-புளோரோ கார்பன்) - இது வெப்பத்தை அதிகரிக்கும் மனித விளைவு.
= வாகனங்கள், மற்றும் தொழிற்சாலை பெருக்கத்தினால் வெளியேறும் தூசுக்கள் (Dust) - இது வெப்பத்தைக் குறைக்கும் மனித விளைவு.
= நகர வெப்பத்தீவு (Urban Heat Island) விளைவு என்ற புதிய நடவடிக்கையால் அதாவது உயரமான கட்டடங்கள் கட்டுதல், காடுகள் அழிக்கப்படுதல், தார்ச் சாலைகள் போன்றவை உள்ளூர் வெப்பத்தை அதிகரிக்கின்றன.
= தேவையற்ற மரங்கள் வளருதல், அதாவது கருவேல மரங்கள், யூகலிப்டஸ், ஆகாயத் தாமரை போன்ற மரம், செடி, கொடிகளினால் நிலத்தடி நீர் பற்றாக்குறை- பருவமழை பொய்த்தல் போன்றவை ஏற்படுதல் - இதுவும் ஒரு புவி வெப்பமயமாதலுக்கு ஒரு காரணி ஆகும்.
= குளிர்சாதன கருவிகள் மூலம் வெளியேறும் வேதிப்பொருள்கள் வளிமண்டல மேல்மட்ட ஓசோனை குறைப்பதால், தரைமட்டத்தில் பல காலநிலை மாற்றங்கள் ஏற்படுகின்றன. இதுவும் ஒரு மனிதனின் தொழில் புரட்சியினால் ஏற்படக்கூடிய காலநிலை மாற்றமே.
= வாகனங்கள் மற்றும் தொழில்சாலை கழிவுகளினால் தரைமட்டத்தில் குறைவாக இருக்க வேண்டிய ஓசோன் வாயு அதிகரித்து வருகிறது. இதனால் கூட புவியின் வெப்பம் உயரும்.
= பெரிய அளவிலான விளைச்சல் நிலங்கள் வேறு பயன்பாட்டுக்கு (கார் தொழில்சாலை, வேறு பல தொழில்சாலை) பயன்படுத்துதல். - இதுகூட நிலத்தடி நீரையும், நீர்மட்டத்தையும் பருவமழையை பாதிக்கும் காரணியாக உள்ளது.
= காற்றாலை மூலம் மின் உற்பத்தி செய்தல், செல் கோபுரங்கள் இவை கூட சிறிய மற்றும் உள்ளூர் அளவில் காலநிலை மாற்றத்தை ஏற்படுத்துகின்றன. இதுபோன்ற பல மனித நடவடிக்கைகள் புவியின் வெப்பத்தை உயர்த்தும் நிலையில் கார்பன் அளவைக் கொண்டு புவியின் வெப்பத்தை கணிப்பது ஒரு தவறான அறிவியல் கருத்தாகும்.
= புவி வெப்பத்திற்கும் கார்பனுக்கும் உள்ள தொடர்பை அறிஞர்கள் மறுப்பதற்கு இரண்டாவது காரணம் : காலநிலை வரலாற்றில், 30 ஆண்டுகளுக்கு உயரும் வெப்பநிலை, அடுத்த 30 ஆண்டுகளில் குறைகிறது.
அதாவது, 1910-1940 வரையிலான காலக்கட்டத்தில் ஏறும் முகத்தில் இருந்த வெப்பநிலை 1940-70 வரையிலான காலக்கட்டத்தில் குறைந்து காணப்பட்டது. அதன்படி 1970-2000 மீண்டும் வெப்பம் உயர்ந்தது. மறுபடியும் 2000-2030 காலக்கட்டத்தில் வெப்பம் குறைந்து வருகிறது.
காலநிலை அறிஞர்கள் கூறும் கருத்து காலநிலை வரலாற்றின் புள்ளி விவரத்திற்கு எதிராக உள்ளது. அதாவது, வெப்பநிலை மாறிமாறி உயர்ந்தும், குறைந்தும் வருகிறது.
= வாகனங்கள் மற்றும் தொழில்சாலைகள் வெளியிடும் பசுமை இல்ல வாயுக்களுக்கு சமமாக மிகவும் நுண்ணிய தூசுக்களும் (Aerosol) காற்றில் கலக்கின்றன. வாயுக்கள் வெப்பத்தை உயர்த்துகிறது என்றால், தூசுக்கள் வெப்பத்தைக் குறைக்கும். இந்த எதிரெதிர் விளைவுகள் அறிஞர்களுக்கு மேலும் குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறது.
= நகரங்களில் மேற்கொள்ளப்படும் நகர வளர்ச்சி, அதாவது கட்டடங்கள், தார்ச்சாலைகள் போன்றவை ஓர் இடத்தின் வெப்பத்தை உயர்த்துகின்றன. இந்நிலையில் ஓர் இடத்தின் வெப்பநிலையைத் தீர்மானிப்பது அங்கு நிலவும் பசுமை இல்ல வாயுக்களின் அளவா? அல்லது நகர வெப்பத் தீவு விளைவா?
= பசுமை இல்ல வாயுக்களின் பெருக்கத்தினால் வெப்பநிலை உயர்ந்தால் கடல்நீர் ஆவியாதலும் அதிகமாகும். இந்த ஆவியாதலினால் மேகங்கள் அதிகளவில் தோன்றும். இதனால், சூரிய ஒளி புவிக்கு வருவது தடுக்கப்படும். இந்நிலையில் புவி வெப்பமயமாதலை குறித்தான அறிவியல் ஆய்வுகள் இன்னும் குழப்பத்தையே ஏற்படுத்தி வருகின்றன.
= முடிவாக, அறிஞர்கள் மறுக்கும் முக்கியக் கருத்து என்னவென்றால், கார்பன் வாயுக்களின் பெருக்கத்திற்கு ஏற்ப, புவி அகச்சிவப்பு கதிர்களின் அளவு பெருகுவது இல்லை.
இந்நிலையில், புவி வெப்ப உயர்வை கார்பன் வாயுக்களின் அளவோடு தொடர்புபடுத்தும் அறிவியல் கருத்துகள் இன்னும் பொதுமக்கள் இடையே ஒரு குழப்பத்தையும், அச்சத்தையுமே ஏற்படுத்தி வருகின்றன.
அதாவது, குருடர்கள் யானையைத் தடவியது போன்றுதான் புவி வெப்பமயமாதலுக்கும் கார்பனுக்கும் இடையே உள்ள தொடர்பு அமைந்துள்ளது.
No comments:
Post a Comment