By ஆசிரியர்
First Published : 18 November 2015 01:22 AM IST
ஒட்டுமொத்த தமிழகமும், பெருமழை வந்துவிட்டால் தண்ணீரில் மிதக்கும் அவலம் தொடர்கிறது என்றால், ஆட்சி அதிகாரத்தின் இருப்பிடமான தலைநகர் சென்னை படும்பாடு சொல்லி மாளாது. கடந்த ஒரு வார மழையில் சென்னை வெள்ளத்தில் மிதந்தது என்று கூறுவதா, மூழ்கிக் கிடந்தது என்று வர்ணிப்பதா எனத் தெரியவில்லை. சென்னை மாநகரிலும், அதன் புறநகர்ப் பகுதிகளிலும் கடந்த வார அடைமழையால் மக்கள் அடைந்த துயரம் சொல்லி மாளாது.
ஆழிப்பேரலை, தானே புயல் போன்ற இயற்கைச் சீற்றங்களை எதிர்கொள்ள முடியாமல் தவித்தால் அதில் நியாயமிருக்கிறது. எத்தனைதான் சிறப்பான ஏற்பாடுகளும், கட்டமைப்பு வசதிகளும், நிர்வாகத் திறமையும் இருந்தாலும்கூட அவற்றை எதிர்கொள்ள இயலாது என்பது தெரியும். ஆனால், பருவமழை, அடைமழை போன்ற ஆண்டுதோறும் சந்திக்கும் இயற்கை நிகழ்வுகளைக்கூட நம்மால் எதிர்கொள்ள முடியாமல் போவதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. சுதந்திரம் அடைந்து 68 ஆண்டுகளாகியும், ஆண்டுதோறும் பல கோடி ரூபாய் ஒதுக்கியும்கூட இன்னும் அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளைக்கூட நம்மால் ஏன் உருவாக்க முடியவில்லை?
சென்னையைப் பொருத்தவரை மழை நீர் உடனடியாக வெளியேறாமல் தேங்கி நிற்க வேண்டிய அவசியமே இல்லை. இயற்கையாகவே வெள்ளம் வடிந்தோடும்படியான நகரமைப்பு, கடலையொட்டியுள்ள சென்னைக்கு உண்டு. சென்னை மாநகரில் கூவம், அடையாறு என்று இரண்டு ஆறுகளும், பக்கிங்ஹாம் உள்ளிட்ட 16 கால்வாய்களும், இது போதாதென்று பல கழிவு நீர் ஓடைகளும், திட்டமிட்டு நிறுவப்பட்டிருக்கும் மழை நீர், கழிவு நீர் வடிகால் குழாய்களும் இருக்கின்றன.
சென்னையிலுள்ள இரண்டு ஆறுகளையும், 16 கால்வாய்களையும் முறையாகத் தூர்வாரிப் பராமரிக்காததன் விளைவுதான், மழை பெய்தால் இப்படித் தண்ணீர் தேங்கி நிற்பதன் அடிப்படைக் காரணம் என்று நாமே இதற்குமுன் பல தலையங்கங்களில் குறிப்பிட்டிருக்கிறோம். மழைக் காலத்துக்கு முன்னால், இந்தக் கால்வாய்களை சுத்தம் செய்வதும், மழை நீர், கழிவு நீர் வடிகால் குழாய்களிலுள்ள அடைப்புகளை அகற்றித் தயார் நிலையில் வைத்திருப்பதும் நிர்வாகம் செய்திருக்க வேண்டிய முன்னேற்பாடு. செய்ததாகக் கணக்குக் காட்டப்படுமே தவிர, முறையாகச் செய்யாமல் விடுவதுதான் அதிகாரவர்க்கத்தின் வழக்கம். அதுதான் நடந்திருக்கிறது.
சென்னையில் குடிநீர் வடிகால் வாரியத்தின் பங்களிப்பாக ஏறத்தாழ இரண்டு லட்சத்துக்கும் அதிகமான திருட்டு கழிவு நீர் இணைப்புகள் உள்ளன. இவற்றிலிருந்து வெளியேறும் கழிவு நீர், மழை நீர் வடிகால் குழாய்களில் விடப்படுவது, மழை பெய்தால் தண்ணீர் தேங்கி நிற்பதற்கு ஒரு முக்கியமான காரணம். வெளிநாடுகளில், மழை நீர் வடிகால் பாதை என்பது இரண்டு அடியே ஆழமுள்ள திறந்த பாதையாக இருக்கும். எப்போது மழை பெய்தாலும் தண்ணீர் உடனடியாக வடிந்துவிடுவதற்கும், அடிக்கடி சுத்தம் செய்வதற்கும் ஏதுவாக அமைக்கப்பட்டிருக்கும். இங்கே அப்படி அமைத்தால், நமது மகா ஜனங்கள் அதைக் குப்பை போடுவதற்கு பயன்படுத்தி விடுவார்களே, என்ன செய்ய?
முதல்வர் ஜெயலலிதாவின் முந்தைய ஆட்சியில் இதேபோலப் பெருமழை வந்தபோது, அதற்கு முன்னால் 30 ஆண்டுகளாகத் தூர் வாரப்படாமலிருந்த 16 கால்வாய்களும் தூர்வாரப்பட்டன. அப்போது எடுக்கப்பட்ட முடிவுகளும், நடவடிக்கைகளும் அதற்குப் பிறகு ஒப்புக்குத்தான் நடைமுறைப்படுத்தப்படுகின்றன என்பதை இந்தப் பெருமழை வெளிச்சம் போட்டுக்காட்டியிருக்கிறது.
சென்னை மாநகரத்தைப் பொருத்தவரை, இத்தனை குழப்பங்களுக்கும் குளறுபடிகளுக்கும் காரணம், தொலைநோக்குப் பார்வையே இல்லாத நகர் மற்றும் ஊரமைப்புத் துறையும், பெருநகர் வளர்ச்சிக் குழுமமும்தான். இவர்கள் மக்களின் நன்மையைவிட, ரியல் எஸ்டேட் அதிபர்களின் வளர்ச்சியைக் கருதி மட்டுமே செயல்படுவதுதான் இத்தனை பிரச்னைகளுக்கும் அடிப்படைக் காரணம். மயிலாப்பூர், திருவல்லிக்கேணி, ஜார்ஜ் டவுன், புரசைவாக்கம் போன்ற சென்னையின் பழைய பகுதிகள்தான் நியாயமாக மிகவும் பாதிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், கடந்த 30 ஆண்டுகளில் உருவான புறநகரின் பகுதிகள்தான் பெரும் பாதிப்புக்கு உள்ளாகின. அப்படியானால் அது திட்டமிடலின் குற்றமே தவிர, இயற்கையின் சதியல்ல.
அடுக்குமாடிக் குடியிருப்புகளே எழுப்பப்பட்டிருந்தாலும், அது யாருடையதாக இருந்தாலும் தயவுதாட்சண்யமே இல்லாமல் அடையாறு, கூவம், பக்கிங்ஹாம் கால்வாய் ஆகியவற்றின் இரு மருங்கிலுமுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவது; விதிமீறல் கட்டடங்களுக்கு தரப்பட்டிருக்கும் திருட்டு இணைப்புகளை அகற்றுவது; 16 கால்வாய்களையும் தூர் வாருவது; தெருவோரக் கடைகளின் உணவுக் கழிவுகள் கால்வாய்களில் கொட்டப்படாமல் தடுப்பது போன்ற நடவடிக்கைகளை உடனடியாக அரசு மேற்கொள்ளாமல் போனால், இந்த நிலைமை தொடரும். அடுத்த அடைமழையிலும் சென்னை வெள்ளத்தில் மிதக்கும் அல்லது மூழ்கும்!
மழை வந்துவிட்டால், சென்னை மாநகரம் ஒரு மாநரகமாக மாறுவது பல ஆண்டுகளாகத் தொடரும் அவலம். இத்தனைக்கும், சென்னை ஒரு கடலோர நகரம். போதாக்குறைக்கு சென்னையின் குறுக்கே இரண்டு ஆறுகளும், பக்கிங்ஹாம் கால்வாயும் ஓடிக் கடலில் கலக்கின்றன. ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு முறையாகப் பராமரிக்கப்பட்டால், எவ்வளவு அடைமழை பெய்தாலும் சாலையில் சொட்டுத் தண்ணீர் தேங்காமல் பாதுகாக்க முடியும். இதெல்லாம் தெரிந்தும்கூட, சென்னை வெள்ளத்தில் மிதப்பது ஆண்டுதோறும் எதிர்கொள்ளும் அவலமாக இருக்கிறதே, இதற்கு யாரைக் குறை சொல்வது என்று தெரியவில்லை.
No comments:
Post a Comment