Monday, November 16, 2015

அடுத்த 3 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை: மீட்பு பணிகளை மேற்கொள்ள சென்னை மாநகராட்சி தயார் உயர் அதிகாரி தகவல்

பதிவு செய்த நாள்:
திங்கள் , நவம்பர் 16,2015, 3:00 AM IST
சென்னை,
அடுத்த 3 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கும் நிலையில் எல்லா விதமான மீட்பு பணிகளையும் மேற்கொள்ள சென்னை மாநகராட்சி தயார் நிலையில் இருப்பதாக உயர் அதிகாரி தெரிவித்து உள்ளார்.
தொடர் கனமழைதமிழகத்தில் மேலும் 3 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்து உள்ளது. இதனால் என்னென்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கையினை மேற்கொள்வது? என்பது குறித்து மாநகராட்சி தீவிரமாக செயல்பட்டு வருகிறது.
இந்தநிலையில் தொடர் மழைக்கு எல்லா விதத்திலும் மீட்பு பணிகளை மேற்கொள்ள சென்னை மாநகராட்சி தயார் நிலையில் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். இதுகுறித்து சென்னை மாநகராட்சி துணை ஆணையர் (பணிகள்) கே.எஸ்.கந்தசாமி ‘தினத்தந்தி’ நிருபரிடம் கூறியதாவது:–
தொடர் மழை காரணமாக சென்னைக்கு கடுமையான சவால் காத்திருக்கிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கை அனைத்தும் தயார் நிலையில் உள்ளது. நீர்தேக்க பகுதிகளில் தேங்கும் மழைநீரை வெளியேற்ற 2 முதல் 50 குதிரைத்திறன் கொண்ட 170 பம்புசெட்டுகள் தயார் நிலையில் உள்ளன. மழைநீரை வடியவைக்க 57 ஜே.சி.பி. எந்திரங்கள், நீரை உறிஞ்சும் 75 ‘சூப்பர் சக்கர்’ எந்திரங்கள் பயன்பாட்டில் உள்ளன. இதில் 71 எந்திரங்கள் சென்னை குடிநீர் வாரியத்திடம் இருந்து பெறப்பட்டுள்ளன.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் உணவுகள்சென்னையில் திருவொற்றியூர், மணலி, மாதவரம், தண்டையார்பேட்டை, அண்ணாநகர், தேனாம்பேட்டை உள்ளிட்ட இடங்களில் மக்கள் அதிகமாக பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர் என்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த பகுதிகளை சேர்ந்த 1,090 பொதுமக்கள் அருகில் உள்ள பள்ளிகள் மற்றும் சமுதாயக்கூடங்களில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
அண்ணாநகர், ராயபுரம் மண்டலங்கள் உள்பட பாதிக்கப்பட்ட மண்டலங்களில் பாதிக்கப்பட்ட இடங்களில் இதுவரை 90 ஆயிரம் உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டுள்ளன. தொடர்ந்து உணவு பொட்டலங்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 120 இடங்களில் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள் தொடங்கி நடந்து வருகிறது. தற்போது வரை இந்த முகாம்கள் மூலம் 19 ஆயிரத்து 200 பேர் பயனடைந்து உள்ளனர்.
சாய்ந்த மரங்கள் அகற்றம்சென்னை நகரில் மாநகராட்சிக்கு உட்பட்ட 16 சுரங்கப்பாதைகள், நெடுஞ்சாலைத்துறைக்கு உட்பட்ட 6 சுரங்கப்பாதைகள் பயன்பாட்டில் உள்ளன. இதில் மாநகராட்சிக்குட்பட்ட கணேசபுரம் சுரங்கப்பாதையில் மழைநீர் சூழ்ந்திருப்பதால் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. நெடுஞ்சாலைத்துறைக்குட்பட்ட 4 சுரங்கப்பாதைகளிலும் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.
நகரின் 490 இடங்களில் மழைநீர் தேங்கியிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதில் 186 இடங்களில் மழைநீர் அப்புறப்படுத்தப்பட்டுள்ளது. இன்று (நேற்று) மட்டும் சென்னையில் மழைக்கு சாய்ந்த 7 மரங்கள் அப்புறப்படுத்தப்பட்டுள்ளன.
சென்னை மாநகராட்சி தயார்முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாநகராட்சி சார்பில் 3 மிதவை படகுகளும், தீயணைப்பு துறை சார்பில் 6 படகுகளும் தயார் நிலையில் உள்ளன. 45 பேர் கொண்ட ஒரு குழுவும், 35 பேர் கொண்ட மற்றொரு குழுவும் தேசிய பேரிடர் மேலாண்மை மீட்புக்குழு சார்பில் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் 6 படகுகளும் தயார் நிலையில் உள்ளன. மிதவை பலூன்கள் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள் அனைத்தும் தயார்நிலையில் உள்ளன. இந்த குழுக்கள் பேசின்பிரிட்ஜ் மற்றும் அடையாறு உள்ளிட்ட பகுதிகளில் முன்னெச்சரிக்கையாக நிறுத்தப்பட்டு உள்ளனர்.
சென்னை மாநகராட்சியை பொறுத்தமட்டில் மீட்பு மற்றும் பாதுகாப்பு பணிகளில் 23 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாநகராட்சி பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். செயற்பொறியாளர் தலைமையில் 30 பேர் கொண்ட குழுக்களாக பணியாளர்கள் நியமிக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றனர். 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு நிலையம் உள்ளது. ‘1913’, ‘9445190228’, 044–25387235 உள்ளிட்ட எண்களில் தொடர்புகொண்டு புகார்களை தெரிவிக்கலாம். எனவே இந்த மழைக்காலத்தில் எல்லா விதமான மீட்பு பணிகளையும் மேற்கொள்ள அனைத்து விதத்திலும் சென்னை மாநகராட்சி தயார் நிலையிலேயே உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

SC orders all-India audit of pvt & deemed universities Focus On Structural Opacity & Examining Role Of Regulatory Bodies

SC orders all-India audit of pvt & deemed universities Focus On Structural Opacity & Examining Role Of Regulatory Bodies   Manash.Go...